பிள்ளைகளிடையே சண்டை
திருமதி ஞானம் ராஜாசிங்
Family Pages Article Image

கேள்வி-பதில் பகுதி

கேள்வி
எனக்கு 3 குழந்தைகள். வயது 4, 8 மற்றும் 12. நான் அவர்களுடன் பழகும் போதும், அவர்களின் சண்டையை சரி செய்யும் போதும், யார் பக்கமும் சாயாமல் நடுநிலையிருந்து செயல்படுகிறேன். அப்படியிருந்தும் அவர்களுக்குள் சண்டை ஓய்வதில்லை. இதை தீர்ப்பதற்கு வழி சொல்லுங்களேன்.
- அன்பு Z.ராணி, சிங்காரத்தோப்பு

பதில்

பிள்ளைகளிடையே சண்டை வருவது இயல்பு என்றாலும், அதை சரி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. நடு நிலையில் இருந்து நீங்கள் செயல்படுவதாக சொல்லியிருக்கின்றீர்கள்.அது மிகவும் வரவேற்கத் தக்கது. அதை தவிர்த்து, இன்னும் செய்ய வேண்டிய காரியங்களை யோசிப்போம்.

பிள்ளைகளிடம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விசேஷமாக பிள்ளைகளுக்கு ஒரு சில விதிமுறைகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக

1)எந்தவொரு பிள்ளையும், அடுத்தவரை எந்தக் காரணம் கொண்டும் கேலி செய்யக்கூடாது.

2) முடிந்தால் 12 வயது குழந்தைக்கு தனி அறை ஒதுக்கிக் கொடுப்பது நல்லது.

3) அவனுடைய அல்லது அவளுடைய பொருட்களை கேட்காமல் மற்றவர்கள் எடுக்க கூடாது.

4) மூத்தப் பிள்ளைகள் இளையவர்களை பரிகாசம் செய்யவோ, கோப மூட்டவோ கூடாது

5) இளைய குழந்தை மூத்த பிள்ளைக்கு சதா தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்க கூடாது.

6) ஒரு சில நேரங்களில் ஒரு குழந்தைக்கு மற்றக் குழந்தைகளோடு விளையாட விருப்பம் இல்லாவிட்டால் கட்டாயப் படுத்த கூடாது.

இப்படி உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ப, சட்டங்களை அவர்களிடம் பேசி  உருவாக்குங்கள்.அதை மீறினால் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று அவர்களைக் கொண்டே தீர்மானியுங்கள்.

அடுத்த மிக முக்கியமான காரியம், இந்த சட்டங்களை மீறுபவர்களை பாராமுகமாக விட்டுவிடக் கூடாது. கட்டாயமாக ஒவ்வொரு முறையும், அவர்கள் மீறும் போது தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

சின்ன பிள்ளை விட்டு விடலாம், முடியாத பிள்ளை வேண்டாம் என்று தயங்க கூடாது. வயதில் மூத்த குழந்தைகளை,  நீ பெரியவனாக இருந்து கொண்டு இப்படி செய்கிறாயே அவனை அதிகமாக தண்டிக்கவும் கூடாது.

கத்தாமல், கோபப்படாமல் அன்புடனும், அமைதியுடனும் இவைகளை செயல்ப்படுத்திப் பாருங்கள். இதில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

இப்படிச் செய்வதால் சண்டைகள் முற்றிலுமாக ஒழிந்து போகா விட்டாலும், அதிகமான அளவில் குறைய வாய்ப்புகள் உண்டு.


 உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப் பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். - ஏசாயா 54:13.

அன்புடன்

Aunty திருமதி ஞானம் ராஜாசிங்

( மேலே உள்ள கேள்வி பதிலி பகுதியில், பெயரும் நாடும் மாற்றப் பட்டுள்ளன)


திருமதி ஞானம் ராஜாசிங் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் ஊழியத்தை செய்து கொண்டு வருபவர். 29 ஆண்டுகளகளாக 'Scripture Union'ல் இருந்த இவர் "Shalom Family Enrichment Ministries" மூலமாக குடும்பங்கள் மத்தியில் ஊழியத்தை தொடர்ந்து செய்கின்றார். 91- 9382720809 என்ற தொலைபேசி எண் மூலமாக இவரை தொடர்பு கொள்ளலாம்.