Saturday July 20 2019

பிரமிக்கத்தக்க அதிசயம்
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
சங்கீதம் 139:14

நீங்கள் எப்பொழுதாகிலும் உங்களுடைய சரீரத்தை குறித்து சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? அது எத்தனை ஆச்சரியமான கர்த்தருடைய செயல் என்பதை எப்போதாவது தியானித்ததுண்டா?
 
பொதுவாக நம் உடலில் ஒரு அடிபட்டால், ஆ வலிக்கிறது என்போம், பசித்தால்; வயிறு பசிக்கிறது, சாப்பாடு போடுங்கள் என்போம். இதை தவிர பிரதானமாக நாம் எதையும் யோசிப்பதில்லை. நாம் இதுவரை யோசிக்காத பல காரியங்கள் உண்டு.
 
சாதாரணமாக நாம் ஒரு மணி நேரத்திற்கு 1050 முறை சுவாசிக்கிறோம். ஒரே நாளில் 25,000தடவைக்கு மேலாக சுவாசித்து விடுகிறோம். இரவும் பகலும் நுரையீரலாகிய இயந்திரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நம்முடைய எந்த சுய முயற்சியுமின்றி இயற்கையாகவே இயங்கும்படி தேவன் அதை அமைத்திருக்கிறார். தொடர்ந்து 10 நிமிடத்திற்கு சுவாசிக்க முடியாமற் போனால் மரணம் தான். நம்முடைய 25,000 சுவாசங்களும் கர்த்தருடைய கரத்தில்தான் உள்ளது.
 
இதயம், அதிலிருந்ததூன் உடலின் பல பாகங்களுக்கும் இரத்தம் செல்கிறது. சுருங்கி, விரிந்து தனது வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருக்கும் இதயம் ஏதோ ஒரு காரணத்தால் இயங்க மறுத்தால், மூளை பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். மூன்று நிமிடங்கள் இதய துடிப்பு நின்று, மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டால்,  மூளை இயங்குவது நின்று விடும். பின் Brain Dead  எனப்படும் நிலைமைதான் ஏற்படும். அதாவது, இதயத்தை துடிக்க வைத்தாலும் மூளை வேலை செய்யாததால், உயிர் இருக்கும், ஆனால் உணர்வுகள் இருக்காது. கோமா நிலையில் இருக்கும் நிலை ஏற்படும். இதய துடிப்பு அத்தனை முக்கியமானது! அது நிற்காவண்ணம் பிறந்த நேரத்திலிருந்து விடாமல் துடிக்க வைத்து கொண்டிருக்கும் தேவனுடைய கிருபை எவ்வளவு பெரியது!
 
ஒவ்வொரு முறையும் நம் உடலிலிருந்து வெளியேறும் கழிவு நீரான சிறுநீர் வெளியேறுவதும் தேவ தயவால்தான் என்பது உங்களுக்கு தெரியமா?  ஏதோ ஒரு காரணத்தினால் சிறுநீரகம் (Kidney) இயங்கவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? இயற்கையாக சிறுநீர் வெளியேறாததால் கழிவு நீர் இரத்தத்தோடு கலந்து விடும். பின் இரத்தத்தில் Urea and Createnin அளவு அதிகமாகி dialysis என்ற முறையின்படி இயந்திரத்தின் மூலம் சிறுநீரை பிரிக்க வேண்டும். அந்த மாதிரியான வேதனை நிறைந்த காரியம் வேறு எதுவுமில்லை.
 
ஆம் பிரியமானவர்களே, நாம் இப்போது சுவாசிப்பது, நம் உடலுறுப்புகள் நன்றாக இயங்குவது, சிறுநீர் கழிவது எல்லாம் தேவ கிருபையே. நம் உடலுறுப்புகளெல்லாம் சரியாக இயங்குவதால் நாம் அதிகமாக இதைப்பற்றி யோசிப்பதுமில்லை, தேவனுக்கு நன்றி செலுத்துவதுமில்லை. ஒரு நாள் மருத்துவமனைக்கு சென்று பாருங்கள், ஏதோ ஒரு உறுப்பு இயங்காததால் மக்கள் படுகிற வேதனையை பாருங்கள். அதன்பின் உங்களது உடலுறுப்புகளுக்காக தேவனை துதிக்காமல் உங்களால் இருக்க முடியாது. உங்களது ஜெப நேரத்தில் நன்றி செலுத்தினால் அதுவே 5 நிமிட நேரத்தை எடுத்து கொள்ளும்.
 
நாம் தூங்குவதும் கர்த்தருடைய சுத்த கிருபையே! இரவில் தூங்க முடியாமல், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும் உறங்காமல் தவிப்பவர்கள் எத்தனை பேர்! உலகில் எத்தனையோ பேர் எத்தனையோ விதமான நோய்களால் பீடிக்கப்பட்டு, வருத்தத்திலும் வேதனைகளிலும் தவிக்கம்போது நம்மை தேவன் சுகத்துடன் பெலத்துடன் பாதுகாத்து வருகிறாரே அதுவும் அவருடைய சுத்த கிருபையே! நம்முடைய சுவாசமும் இதய துடிப்பும் தேவனுடைய கரத்திலிருக்கிறது. அவரே அதை நமக்கு இரக்கமாய் தந்திருக்கிறார். ஆகவே உயிரோடிக்கும் நாள் வரை தேவனுக்காய் வாழ்வேன் என் தீர்மானித்து அவருக்காய் வாழ்வோம். அவருடைய சுத்த கிருபைக்காய் உள்ளத்திலிருந்து நன்றி செலுத்துவோம். ஆமென் அல்லேலூயா!
 
ஜீவன் சுகம் பெலன் யாவுக்கும் ஸ்தோத்திரம்
தினம் தினம் அருள் நன்மைக்காகவும் ஸ்தோத்திரம்
ஆவலுடன் ஸ்தோத்திரம்! உமது
அன்பினுக்கே ஸ்தோத்திரம் மாநேசா!

 
ஜெபம்: எங்களை படைத்து காத்து இரட்சிக்கிற எங்கள் நல்ல தேவனே உம்மை துதிக்கிறோம். எங்களது சரீரத்தின் உறுப்புகள் ஒவ்வொன்றையும் சீராக படைத்து, அவை சரியாக அதினதின் வேலையை செய்யும்படியாக தேவன் பாராட்டியிருக்கிற கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். ஒரு உறுப்பு சரியாக இயங்காவிட்டாலும் எத்தனை பாடுகள், வேதனைகள் தகப்பனே! உம்முடைய தயவால் எல்லாம் சரியாக இயங்க வைத்திருக்கிறீரே உமக்கு நன்றி. இந்த வேளையிலும் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் வேதனையோடு பாடுகளோடு இருக்கிற ஒவவொருவரையும் நினைக்கிறோம். அவர்களும் உம்மை அறிந்து கொண்டு, உம்முடைய சுகமளிக்கும் கிருபைகளை பெற்று கொள்ள கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


இன்றைய நாளுக்கான இப்பகுதி அனுதின மன்னா குழுவினரால் எழுதப்பட்டது. இவர்களை தொடர்புகொள்ள anudhinamanna@gmail.com என்ற முகவரியில் அனுகலாம்.