தப்பினதின் இரகசியம்?!
அன்பு ஒளி
Reaching out people

கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன் நான். ஒரு நாள் மாலையில் எங்கள் பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவர், எங்கள் வீடு தேடி வந்தார். வந்தவர், மற்றொரு குடும்பத்தைக் குறித்து மெதுவாக விசாரித்தார். அந்த வீட்டில் திருமண வயதை எட்டின தேவனுக்குப் பயந்த பெண் உண்டு. என்னோடு பேசிக்கொண்டிருந்த அந்த சில நிமிடத்தில் அந்த வீட்டின் பெண்ணைத் தனது மகனுக்குப் பெண் பார்க்க இஷ்டப்படுவதாக சொன்னார். நான் "நல்லது " என்றேன்.

வந்து சென்ற அந்த நண்பர், என் வீட்டை விட்டவுடன், நேராக அந்த பெண்ணின் தகப்பனாரிடம் சென்றிருக்கிறார். நான் அனுப்பினதாகவும் அவர்கள் பெண்ணைத் தாங்கள் விரும்புவதாகவும் சொல்லிவிட்டார். ஒரு சில தினங்களில் அந்த திருமணம் மிக வேகமாக ஒழுங்காகி, சுமார் பத்து தினங்களில், நிச்சயம் செய்யும் நிலைக்கும் வந்து விட்டது.

அந்நாட்களில், அப்பெண்ணின் தகப்பனார், தற்செயலாக திரிச்சூர் சென்றிருக்கிறார். அங்கு, உறவினர் வீடு ஒன்றில், தன் மகளின் திருமண காரியங்கள் ஒழுங்காகி விட்டதை உற்சாகமாகச் சொல்லி கொண்டிருந்தாராம்!. "அவர்கள் ஊர் திருவல்லா! தகப்பனார் பெயர் திரு. ஜேக்கப்!. மணமகன் பெஞ்சமின்!". இதைக் கேட்ட அவர் உறவினர்  துக்க முகத்தோடு, தன் அறைக்கு வேகமாக சென்றாராம்.!. ஓர் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு அவரிடத்தில் நீட்டினாராம்.

அந்த திருமண அழைப்பிதழைப் பார்த்தபோது, அதில் மாப்பிள்ளை பெயர்: பெஞ்சமின். தகப்பனார் பெயர் திரு. ஜேக்கப் ஊர் திருவல்லா என்று இருந்ததைக் கண்டார். பெண்ணின் தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை!.

"என்ன விஷயம்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!" என்றாராம். "தங்கள் வீட்டிற்கு மாப்பிள்ளையாக வரப்போகிற பெஞ்சமின் திருமண கார்டு. பெஞ்சமினுக்கு அக்குடும்பத்தில் திருமண ஏற்பாடு ஒழுங்காகிவிட்டது. கையில் வாங்கினது பல லட்சம். நகைகள் பல சவரன்கள்; எல்லாவற்றையும் வாங்கிவிட்டு, கலியாணத்திற்குப் பத்து நாட்களுக்கு முன்பதாக, அவர்கள் ஊரைவிட்டே போய்விட்டார்கள். திருமணம் நின்று விட்டது!" என்று அவர் சொன்னபோது பெண்ணின் தகப்பனார் "நல்ல வேளை தப்பினோம்!" என்றது மாத்திரம் அல்ல, கண்களில் கண்ணீர் மல்க, "அல்லேலூயா! ஸ்தோத்திரம்" என்றாராம்.

இந்த நிகழ்ச்சிகள் ஒன்றும் எனக்கு தெரியாது!. நான் ஒருநாள் தற்செயலாக அவர் வீட்டிற்குச் சென்றேன். மாலை மணி 5:30 இருக்கும்!. கணவனும், மனைவியும் முழங்கால் படியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். எழுந்து, அவர்கள் அத்தனை காரியங்களையும், கண்ணீரோடு சொல்லி முடித்தார்கள். ஓர் பெண்ணின் வீட்டில் பல லட்சம் ரூபாய் வாங்கி, அவர்களை ஏமாற்றி ஊரைவிட்டே ஓடிய குடும்பம், பெஞ்சமின் குடும்பம். இவர்கள் குடும்பத்தையும் ஏமாற்ற முயற்சி பண்ணியிருக்கிறார்கள்.


"இந்த தகப்பனும், தாயும் இப்படி அடிக்கடி முழங்கால் படியிட்டு ஜெபம் பண்ணாமல் இருந்திருந்தால், இவர்களையும் பெஞ்சமின் குடும்பம் ஏமாற்றியிருக்குமே" என்று எண்ணின நான் அவர்களைத் திடப்படுத்தி, ஜெபித்து வந்தேன்.

பெற்றோரே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிக்கிற ஜெபமே, அவர்களுக்கு சொத்து!. உங்களை தேவன் வழி நடத்துவார், தேவையற்ற காரியங்களைத் தடையும் செய்வார்! பயப்படாதேயுங்கள்!

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" ( சங்கீதம்
32 :8)

Prof. பிலிப்போஸ், கேரளா


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'

Social Share