எப்படி மரிக்கக்கூடாது? ((பாகம் : 2)
அருள்திரு சி. இராஜசேகரன்

3. மன்னிக்கப்படாமல் மரிக்கக்கூடாது
மன்னிப்பை பெற்றுக்கொள்ளவே மன்னிக்கிறோம். பாவமன்னிப்பு என்பது பரலோகத்தின் நுழைவுச் சீட்டைப் போன்றது. பாவமன்னிப்புக்காகத்தான் கடவுள் இயேசு என்னும் மனிதனாகி மனிதர்களின் பாவங்களை சுமந்து, சிலுவை மரத்தில் மரித்து, பாவ நிவிர்த்தியை செய்து முடித்து மன்னிப்பை வழங்குவதன் அடையாளமாக மரணத்திலிருந்து உயிரோடு எழுந்தார். அவர் மன்னிக்க முடியாத பாவம் என்று ஏதும் இல்லை. ‘இயேசுவின் இரத்தம் சகலப் பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது’. மன்னிக்கமுடியாத பாவம் என்பது ‘நீ செய்வது பாவம்’ என்று பரிசுத்த ஆவி நம்மிடம் சொல்லும் போது ‘இல்லை, நான் பாவம் செய்யவில்லை’ என்று வாதிட்டு ‘என் பாவத்தை நான் மறைத்தால் நான் வாழ்வடைய மாட்டேன்: என் பாவங்களை நான் அறிக்கையிட்டால், கடவுளின் இரக்கத்தையும் அவருடைய மன்னிப்பையும் பெற்று வாழ்வைப் பெற்றுக்கொள்வீர்கள்’ என்று சாலமோன் ஞானி கூறுகிறார். நம் பாவங்களை மறைக்காமல் சொல்வதற்கு அவர் நம்பத்தகுந்தவரும், நம் பாவங்களை மன்னிப்பதற்கு இயேசு வலிமையும் உரிமையும் உடையவராயிருக்கிறார் என்று யோவான் சொல்கிறார்.
பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்வதற்கு காலம் தாழ்த்தக்கூடாது. காரணம் அதைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பே மரணம் நம்மை சந்தித்துவிட்டால் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை நழுவவிட்டுவிடுவோம். கெஞ்சிக்கேட்டு எப்படியாவது பாமன்னிப்பை பெற்றுவிடவேண்டும். நாமே குற்றப்படுத்திக்கொள்கிற பாவம், மற்றவர்கள் நம்மை குற்றப்படுத்தி சொல்கிற பாவம் மட்டுமல்ல, இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிற பாவத்தை நாம் மறைக்காமல், அறிக்கையிட்டு அவர் அருளும் பாவமன்னிப்பை மரிப்பதற்கு முன்பே பெற்றுக்கொள்ளவேண்டும். அதன் நிச்சயத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும். பாவமன்னிப்பை பெற்றுக்கொள்ள நான் செய்த பாவத்தை ஒத்துக்கொள்ளவேண்டும். பாவத்தை செய்யும் தைரியத்தைவிட அதை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதுதான் உலகிலேயே பெரும் தைரியமான செயலாக ஏற்கப்படுகிறது. இந்த தைரியத்தை கடவுள் நமக்கு கொடுத்து எந்த நேரத்திலும் மரணத்தை நாம் சந்திக்க உதவிசெய்வார். மன்னிப்பை பெற்றுக்கொண்டவர்களும், மன்னிப்பை வழங்குகிறவர்களும் மரணத்தைக் கண்டு அஞ்சமாட்டார்கள், மரணம்தான் அவர்களைக் கண்டு வெட்கப்படும். மன்னிப்பு பெறுவதும், மன்னிப்பு வழங்குவதும் மரணத்தை இன்முகத்தோடு சந்திக்கும் தகுதியாக இருக்கிறது.

4. மகிமையடையாமல் மரிக்கக்கூடாது
மனந்திரும்புகிறவர்களுக்கும், மன்னிக்கிறவர்களுக்கும், மன்னிப்பை பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் அதற்குரிய மகிமை உண்டு. ஆதாம் மற்றும் ஏவாளுடைய அவிசுவாசம், கீழ்படியாமை, பிறர் மேல் பாவ பழியை சுமத்துதல் மற்றும் மனந்திரும்பாமல், மன்னிப்புக் கேட்காமல், பாவத்தை மறைத்து, அதற்காக வாதாடி இறுதியில் கடவுளைவிட்டு பிரிதல் என்னும் மரணத்தை சந்தித்தார்கள். அவர்களுக்கென கடவுள் கொடுத்திருந்த மகிமையை இழந்தார்கள். அவமானத்தோடும், தோல்வியோடும், சாபத்தோடும் தனிமையாக அவர்கள் ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். அன்று இழந்த மனிதர்களின் மகிமையை இயேசு நமது மனந்திரும்புதல், பாவமன்னிப்பு மூலம் மீண்டும் அடைய வழிவகுத்திருக்கிறார்.
நம் ஒவ்வொருவருக்கும் உரிய மகிமையை கடவுள் அவரிடம் வைத்திருக்கிறார். நம் வாழ்வின் நோக்கத்திற்கென ஒரு மகிமை நமக்கு உண்டு. அந்த மகிமையை நாம் பெற்றுக்கொள்வது பரலோகத்தில் மட்டுமல்ல இந்த பூலோகத்திலும்தான். மகிமை என்பது இந்த உலகில் உள்ள செல்வந்தர்கள், கற்றவர்கள், அதிகாரிகள், செல்வாக்குகள் போன்றவற்றோடு போட்டிபோடும் மகிமையல்ல, இது தேவன் அருளும் மகிமை. இதில் மன அமைதி உண்டு, மன மகிழ்ச்சி உண்டு, எல்லாவற்றிற்கும் மேலாக மன நிறைவு உண்டு. இந்த மகிமை நம்மை தெய்வமாக்கிவிடாது, மாறாக தெய்வத்தின் அடிமையாக்கி, அவருடைய படைப்புகளுக்கு நம்மை தாழ்த்தி பணிவிடை செய்யும் உன்னத பெலத்தை கொடுக்கிறது. கடவுளின் மகிமை கடவுளின் சாயலை கொண்டிருக்கிறது. அவரைப் போல வாழும் பாக்கியத்தையும், வரங்களையும் கொடுத்து அதன் கனியை மற்றவர்கள் புசிக்க நம்மை தகுதிப்படுத்துகிறது.
நமக்காக வைத்திருக்கும் கடவுளிடைய மகிமையை நாம் பெற்றுக்கொள்வதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து முடிக்கவேண்டும். உன்னத மகிமைக்கு சான்றாக உலகத்தில் அதன் சாயலை அனுபவிக்கவேண்டும். நமது பிறப்பு கடவுளின் மகிமைக்கு அடையாளமாக இருந்ததோ இல்லையோ ஆனால் நமது மரணம் அவரது மகிமைக்கு அடையாளமாக அமைக்கவேண்டியது நமது கடமை, அது நம்மால் சாத்தியம். மகிமையிலே பிரவேசிக்கும் முன்பு மகிமையின் பாதையை நாம் தொட்டிருக்கவேண்டும். இயேசு சிலுவையில் மரிக்கும் தருவாயில் பேசிய கடைசி வார்த்தையாக ‘பிதாவே என் ஆவியை உம்முடைய கையில் ஒப்புக்கொடுக்கிறேன்’ என்று சொன்னபோது, “நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.” லூக்கா 23:47. இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டவன் கடைசி நேரத்தில் மனந்திரும்பி, அவனுடைய மகிமையை அடைந்தவனாய் மரித்தான் ‘இன்றைக்கு என்னுடனேகூட பரதீசியிலிருப்பாய்’ என்று இயேசு அவனிடம் சொன்னார் (லூக்கா 23:43). ஸ்தேவான் மரிக்கும் தருவாயில் கடவுளை தரிசித்தான். அவனுடைய மரணம் மகிமையாக இருந்தது. அவனுடைய மகிமையை அவன் அடைந்தவனாய் மரித்தான்.

முடிவுரை
மரணத்தை நம் இஷ்டம் போல் அழைக்கவும் முடியாது, போ என்று தவிர்க்கவும் முடியாது. மரிப்பது உறுதியான பின்னும் ஏன் மரணத்தைக்குறித்து பேச பயப்படுகிறோம்? விருந்து வீட்டுக்குப் போவதிலும் துக்க வீட்டுக்குப் போவது நலம்@ இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்@  உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான் என்று சாலமோன் ஞானி கூறுகிறார் (பிர-7:2). ஒருவரும் அவரவர் பிறப்பதற்கு ஆயத்தமாவதில்லை, ஆனால் மரிப்பதற்கு நாமேதான் ஆயத்தமாகவேண்டும். மரணத்தைக் குறித்த எதிர்பார்ப்பு நம்மில் இருக்கவேண்டியது அவசியம். யூதாஸ்காரியோத் இயேசுவுடன் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் அவருடன் இருந்து, அவரை நெருக்கமாகக் கண்டும், அனுபவித்தும், அவரைக் காட்டிக்கொடுத்தான். காட்டிக்கொடுத்த பாவத்தை அவன் உணர்ந்தான், ஆனால் அதை ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு, மனந்திரும்பி, அவனை அவனே மன்னித்து, புது வாழ்வை வாழ்வதற்கான வாய்ப்பை இழந்து தற்கொலை செய்துகொண்டு, இயேசுவின் சீடன் என்னும் அவனுடைய மகிமையை இழந்தவனாய் மரித்தான்.
இயேசு எப்படி மரிக்கவேண்டும், எதற்காக மரிக்கவேண்டும் என்ற ஆசை கொண்டவராக இருந்தார். அந்த நோக்கம் அவரை அனுப்பின பிதாவின் நோக்கத்தை ஒத்திருந்தது. அப்படியே நாமும் இந்த உலகத்தில் வந்த நோக்கத்தை நிறைவேற்றி மரிக்க ஆசைப்படவேண்டும். என் மரண ஊர்வலம் எப்படி இருக்க வேண்டும் என்றல்ல, என் மரணம் மக்கள் மனதில் என்ன எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நிலையில் அந்த எண்ணத்திற்கு ஏற்ப வாழவேண்டும். எப்படி பிறக்கக்கூடாது என்று ஆசைப்பட முடியாது: அது நடக்கவும் முடியாது, ஆனால் எப்படி மரிக்கக்கூடாது என்பதையும், எப்படி மரிக்க வேண்டும் என்பதையும் கடவுள் நமக்கு போதனையாக மட்டுமல்ல இயேசுவின் மூலம் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். இயேசுவைப் போல நாமும் பரிசுத்தஆவியால் பிறந்தால், நாமும் அவரைப் போல மன்னிப்பை அருளி, மகிமையை அடைந்து மரித்ததுபோலவே நாமும் மரிப்போம். அதற்கு பின்பு பிதாவின் மடியில் கிடப்போம்.

 


எழுத்தாளர், சிந்தனையாளர்,போதகர் போன்ற பல பொறுப்புகளுக்கு சொந்தமானவர். இவரை 91-944-365-4521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Social Share