எப்படி மரிக்கக்கூடாது? (பாகம் : 1)
அருள்திரு சி. இராஜசேகரன்

முன்னுரை
மரணம் ஜனனத்திற்கு முன்பே முடிவுசெய்யப்பட்ட ஒன்று என்பது ஆத்திகவாதிகளின் நம்பிக்கை. மரணம் அனைவருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. மரணம் நமக்கு உண்டென்று நாம் அறிவோம். அதை தள்ளிப்போடுவது பொதுவாக சாத்தியமில்லை, அத்துடன் அதை தடை செய்வது சாத்தியமே இல்லை. பிறந்தவர்கள் அனைவரும் மரித்தார்கள். சிலர் மரணத்தை சந்தித்ததில்லை என்று வேதம் கூறுகிறது (ஏனோக்கு மற்றும் எலியா). இவர்கள் மரண விதிக்கு விலக்கு பெற்றவர்கள். இதை உதாரணமாகக் ஏற்கமுடியாது. நாம் எங்கே, யாருக்கு, எப்படி, யாராக பிறக்கவேண்டும் என்று தீர்மானிக்க முடியாது, அத்துடன் எப்படி, எங்கே, எப்போது மரிக்கவேண்டும் என்றும் தீர்மானிக்க முடியாது. ஆனால் ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையே உள்ள வாழ்வில் நான் எப்படி மரிக்க வேண்டும் அல்லது எப்படி மரிக்கக்கூடாது என்ற ஆசையை மனதில் கொண்டு அதற்கேற்ப வாழ்வை அமைத்துக்கொண்டால் நமது மரணம் அமைதியாயிருக்கும், இல்லையேல் அது ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்திவிடும். நாம் எப்படி மரிக்கக்கூடாது?

1. மனந்திரும்பாமல் மரிக்கக்கூடாது
மாற்றம் ஒன்றே மாறாதது. நம் வாழ்வில் முன்னேற்றத்திற்குரிய மாற்றங்களை அறிந்து அதில் அனுதினமும் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். மனம் போன போக்கில்தான் நம் வாழ்வு போகும். மனம் ஒரு குரங்கு மாதிரி, அது அங்குமிங்கும் தாவிக்கொண்டே ஒரு நிலையில்லா வாழ்வை ஏற்படுத்தும், ஆகவேதான் அது ஒவ்வொரு நாளும் புதிதாகிக்கொண்டே சென்றால் நமது வாழ்வு மாறிக்கொண்டே செல்லும். புதிய மனிதனாக மாறிய பின்பு மரிக்கும் மரணம் நல்ல மரணம். மனந்திரும்பாமல் மரிக்கும் மரணம் கெட்ட மரணம்.
எதிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டும்? தீமையிலிருந்து: தீய எண்ணங்கள், தீய நோக்கங்கள், தீய ஆசைகளிலிருந்து. எனக்காகப் படைக்கப்பட்டவைகளிலிருந்து, என்னைப் படைத்தவருக்கு என் மனம் திரும்பவேண்டும். இந்த மனந்திரும்புதல் இளமைக் காலத்தில் ஏற்பட்டால் நல்லது என்று சாலமோன் ஞானி கூறுகிறார். அது முதுமைக் காலத்தில் வளர்ந்து, முதிர்ந்து நல்ல பலனை கொடுக்கும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி, இளமைக்காலத்தில் ஏற்படாத மனந்திரும்புதல் முதுமை காலத்தில் ஏற்பட்டால் அந்த மனந்திரும்புதல் மென்மையாயிருக்காது, அது பூரணப்படுவதற்கு பெலனற்றுப்போகும். ஆனாலும் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடாமல் இதுவே மனந்திரும்புதலின் சந்தர்ப்பம் என்று ஞானமாய் நடந்துகொண்டால் மனந்திரும்புதல் சாத்தியம். சிம்சோன் தனது மரண சமயத்தில் ஆண்டவரிடம் மனந்திரும்பி ஒருவிசைமாத்திரம் நினைத்தருளும் என்று கெஞ்சி என்னை பெலப்படுத்தும் என்று வேண்டினான் (நியா.16:28). அவனுடைய ஜெபம் கேட்கப்பட்டது. அவனுடைய மனந்திரும்புதல் அங்கே சாத்தியமானது. ஆனால் இது விதிவிலக்கானது, சிம்சோனைப் போன்று அனைவருக்கும் இறுதியில் மனந்திரும்பும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவது தவறு.
மனந்திரும்புதலின் ஆரம்பம் இளமையில் ஏற்பட்டால் அதனை முதுமையில் பூரணப்படுத்தி அமைதியான நித்திரைக் கொள்ளலாம். இளமையில் ஏற்படாத மனமாற்றத்தால் முதுமையில் ஆசைப்பட்டும் மனந்திரும்பாமல் வேதனைப்படும் முதியவர்கள் அநேகர் உண்டு. ஆனாலும் முதுமையிலும் ஆண்டவர் இளமையின் பெலத்தைக்கொடுத்து மனந்திரும்பும் எண்ணங்களுக்கு உரம் போடுகிறார். நான் மனந்திரும்ப வேண்டியது எதில் என்பதை நான் சிந்தித்துப்பார்க்க வேண்டும். வேதம் என்னும் கண்ணாடியில் பார்க்கும்போது நாம் சரிசெய்துகொள்ளவேண்டியவை எவை என்பதை அது காட்டும். மனந்திரும்புவதைப்போன்று கடினமானவை ஏதும் இல்லை. அதிலும் முதுமையில் மரணத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இது மிகவும் கடினம். ஆண்டவரே நான் இந்த முதுமையிலும் மனந்திரும்பும் இளமை பெலத்தைத் தாரும் என்று பிரார்த்தனை செய்தால் நமது மனந்திரும்புதலை இலகுவாக்குவார் நமது ஆண்டவர்.

2. மன்னிக்காமல் மரிக்கக்கூடாது
மன்னிப்பு அளிப்பது மன்னிப்பை பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனை என்று இயேசு போதித்திருக்கிறார்: ‘எனக்கு விரோதமாய் தீங்கிழைத்தவர்களை நான் மன்னிப்பது போல் நான் மற்றவர்களுக்கு இழைத்த தீங்கை மன்னியும்’. மற்றவர்களை மன்னிப்பதிலேதான் என்னுடைய மன்னிப்பு அடங்கியிருக்கிறது. மற்றவர்களை மன்னிக்க அன்பு நமக்கு வேண்டும், அதனால் என் பாவம் மன்னிக்கப்படுகிறது என்ற சுய-நலமும் அவசியம். மன்னிப்பை பெற்றுக்கொள்ளவும் மன்னிப்பை வழங்கிடவும் தாமதம் செய்யக்கூடாது. மன்னிப்பதற்கு கடவுள் நமக்கு தயாள குணத்தை கொடுக்க நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். மன்னிப்பதில் கருமியாய் இருக்கக்கூடாது என்பதால்தான் ‘ஏழு எழுபது முறை மன்னியுங்கள்’ என்று இயேசுபிரான் கூறியிருக்கிறார். ஏழு எழுபது என்றால் 77 என்று பொருள், இதன் பெருக்கம் எல்லையில்லாதவை.
மன்னிக்காவிடில் மன்னிப்பு இல்லை, மன்னிக்கப்படாத மனிதன் மனந்திரும்பவில்லை, மனந்திரும்பாத மனிதனுக்கு மண்ணில்தான் இடம் உண்டு: விண்ணில் இடமில்லை. விண்ணிற்குப் போக விரும்பும் ஒவ்வொருவரும் மன்னிப்பு என்னும் விதையை மண்ணில் விதைத்தால் விண்ணில் அதன் கனியை ருசிக்கலாம். என் பாவங்களை கடவுள் மன்னிப்பதற்கு நான் தகுதியாயிருக்கிறேன் என்றால் மன்னிக்கமுடியாத பாவங்கள் என்று இந்த உலகில் ஏதும் இருக்க முடியாது, மன்னிக்க முடியாதவர்கள் என்று யாரையும் நாம் சொல்லிவிடவும் முடியாது. ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்ற இயேசுவின் கட்டளையை ஏற்றுக்கொள்வார் இயேசுவின் அடியவர்களாவர். இதை அவருடைய சீடர்களின் அடையாளமாக வைத்திருக்கிறார்.
நான் ஒருவருடைய பாவத்தை மன்னிக்காவிட்டால் அதன் வேதனை எனக்குத்தான் அதிகம். நான் செய்த பாவத்தின் கோரத்தைவிட மற்றவர்களின் பாவத்தை மன்னிக்காததுதான் எனக்கு அதிக வலியை ஏற்படுத்துகிறது. அது என் உள்ளத்தின் அமைதியை குலைத்துவிடுகிறது, தூக்கத்தை கெடுத்துவிடுகிறது, முகத்தை மாற்றிவிடுகிறது, சிந்தையை அடக்கிவைக்கிறது, கசப்பை இருதயத்தில் வளரவிடுகிறது. பிறரை மன்னிப்பதால் என் மனம் இலகுவாகி, சிந்தை விரிவடைந்து, மனது திருப்தி அடைகிறது. மன்னிப்பதில் சாதனை புரிய ஆசைப்படவேண்டும். கெஞ்சிகேட்கும் வரை காத்திருக்காமல் மன்னிக்கவேண்டும். மன்னிப்பதிலும் கடவுளைப் போல நாம் மாறவேண்டும். மன்னிக்கும் அதிகாரத்தை நாம் பயன்படுத்துவோம். மற்றவர்களை மன்னிக்கும் தயாளமே ‘என்னை மன்னியும் என்று கேட்பதற்கு தைரியத்தை வரவழைக்கும்.’ ஸ்தேவான் ஒரு நீதிமானக இருந்தாலும், தேவனுக்காக மரித்தாலும் அவன் மனதில் அவனைக் கொலை செய்தவர்கள் மேல் மனக்கசப்பு ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதிசெய்யும் விதமாக அவனைச் சுற்றிலும் இருந்தவர்களுக்காக ‘பிதாவே இவர்களை மன்னியும்’ என்று இயேசுவைப் போல அவர்களுக்காக மன்னிப்பு கேட்டான். அவனும் அவர்களை மன்னித்திருக்கவேண்டும் (அப்.7:60).

தொடரும்


எழுத்தாளர், சிந்தனையாளர்,போதகர் போன்ற பல பொறுப்புகளுக்கு சொந்தமானவர். இவரை 91-944-365-4521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Social Share