தாழ்மையில் தழைத்திட
சகோ. சாம்சன் பால்
Parent responsibility

இளவயதுகளிலே இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு சாந்தமும், சமாதானமுமான ஒரு மன நிலையோடு வாழ்ந்தவன் ஜாக். ஆனால் அவன் MBA முடித்து வேலையில் சேர்ந்த போது அங்கு பணி புரிந்த ரெனால்ட் ஜாக்கிற்குத் தொல்லை கொடுப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவன் போலச் செயல்பட்டான். காரணம் இல்லாமல் தனக்குத் தொடர்ந்து  தொந்தரவு தரும் ரெனால்டை நினைத்துப் பலமுறை ஜாக் மனங்கசந்து போயிருக்கிறான். தேவ பக்தி சற்றும் இல்லாத ஒரு முரட்டுத்தனமானவனின் நடவடிக்கைகளை தேவன் ஏன் அடக்கவில்லை என்ற அங்கலாய்ப்பு ஜாக்கிற்கு அவ்வப்போது நேரிடும். ஆயினும் தேவனை வருத்தப்படுத்திவிடக்கூடாது என்ற நோக்குடன் ரெனால்டின் அநீதிகளை ஜாக் சகித்துக்கொண்டான்.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப்  பிறகு ரெனால்டின் அநீதிகளைத் தடுக்காமலிருந்ததின் மூலம் ஜாக்கிற்கு தேவன் நன்மையே செய்திருப்பதை ஜாக் உணர்ந்தான். ஆம், ரெனால்டின் அநீதியான நடவடிக்கைகள் ஜாக்கிற்குள் அதிகமான தாழ்மையையும், சகிப்புத் தன்மையையும், கோப எரிச்சலின் மேல் ஆளுகை செய்யும் பலத்தையும் அவனுக்குக் கொடுத்தது என்பது உண்மை. இது எவ்வளவு பெரிய வெற்றி. ஆயிரம் பொன் கொடுத்தாலும் அடைய முடியாதது அல்லவா தாழ்மை. ஆயிரம் பொன்னை விட தேவன் அதிகமாக விரும்புவது தாழ்மையை அல்லவா.

தாவீதை துன்புறுத்திய சவுலை தேவன் உடனே தடுக்க வில்லை. ஆனால் அந்த சூழ்நிலையின் மூலம் தாவீதைப் புடமிட்டு அவனுக்குள் தாழ்மைப் பண்பை உருவாக்கினார். ஏனென்றால் தாழ்மைப் பண்பைப் பெற்றுக் கொண்டவனை உலகம் வீழ்த்த முடியாது. ஆம். சில எதிர்மாறான சூழ்நிலைகள் நம்மை இழிவுபடுத்துவது போல நாம் உணரலாம். ஆனால் அது தாழ்மையை உருவாக்கத் தேவையான ஒன்று. தேவன்  அதனை கனப்படுத்துவார்.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.