எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னை சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
......
இப்பாடலை எழுதிய பிரகாஷ் ஏசுவடியான், இயேசுவின் நற்செய்தியை உலகின் பல பகுதிகளிலும் பிரபல பிரசங்கியார். இவரது சொந்த ஊர் கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் தோப்பூர் ஆகும். 1969ம் ஆண்டு சகோதரி ராணியை திருமணம் செய்த இவர், திருமணமான புதிதில், இளம் தம்பதியராக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூவன்கோடு என்ற இடத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களில் கலந்து கொள்ளச் சென்றனர். சகோதரர் பிரகாஷ் தேவ செய்தியைக் கொடுத்து, அதின் முடிவில் ஆண்டவரை ஏற்றுக் கொள்ளுமாறு கூட்டத்தினருக்கு அழைப்பு விடுத்தார். தேவசெய்தியால் பாவ விழிப்புணர்வு பெற்று, அழைப்பை ஏற்று முன்வந்தவர்களில் சிலர் தொடர்ந்து ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தனர். அருகில் சென்ற சகோ பிரகாஷ் அவர்களிடம் “நீங்கள் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வருவதற்கு, பாவ அறிக்கை செய்து. பாவத்தை விட்டுவிடத் தீர்மானிப்பதும், இயேசு கிறிஸ்துவின் மீது உயிருள்ள விசுவாசம் வைப்பதும் முக்கியமானவை” என்று எடுத்துக் கூறி, அவர்களை இரட்சிப்பின் பாதையில் வழிநடத்தினார்.
பிரகாஷ் அக்கூட்டத்தை முடித்து நாகர் கோவிலுக்குப் போருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தன் உள்ளத்தில் இரட்சிப்பைப் பற்றிய ஆழ்ந்த தெளிவு நிலையை உணர்ந்தார். இரட்சிப்புக்கு “இயேசு ஒருவர் மட்டுமே போதும்” என்ற தெளிவு பெற்றார். ஒரு மனிதனின் வாழ்வில் என்ன நேர்ந்தாலும், இயேசு ஒருவர் மட்டுமே போதுமானவர். ஆவரை விட்டு, வேறு கூடுதலான போதனைகளோ, குறைவான போதனைகளோ, முடிவில் கள்ளப் போதனைகளாக விளங்கும் என்பதை அவர் உணர்ந்தார்.
இயேசு ஒருவரே முழுமையான நற்செய்தி என்ற வேதத்தின் சத்தியமான போதனையைக் கிறிஸ்தவ சமுதாயமனைத்தும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்க வேண்டுமென்ற ஆவல் பிரகாஷின் உள்ளத்தை நிரப்பியது. இவ்வெழுச்சியே பிரபலமான இப்பாடலின் முதல் சரணமாக உருவெடுத்தது; ராகமும் உடன் இணைந்தது.
வீடு சேர்ந்தவுடன், பிரகாஷ் இம்முதல் சரணத்தை கித்தார் இசைத்து மனைவியிடம் பாடிக் காண்பித்ததார். பாடலின் வார்த்தைகளின் சத்தியமும், இனிதே இணைந்த ராகமும் பொருத்தமாக அமைந்திருப்பதை அவரது மனைவி உணர்ந்தார். எனவே இருவரும் அன்றிரவே சேர்ந்தமர்ந்து “உன் பெலவீனத்தில் என் பெலன் பூரணமாய் விளங்கும். எனவே, உன் சரீரத்தில் என்ன முள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவைகள் மத்தியிலும் என் கிருபை உனக்குப் போதும்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, இப்பாடலின் மீதிச் சரணங்களையும் எழுதி முடித்தனர். பின், இருவரும் இப்பாடலை தேவநாம மகிமைக்கென அர்ப்பணித்து ஜெபித்தனர்.
மறுநாள் காலையிலும் இப்பாடல் பிரகாஷின் உள்ளத்தில் தொனித்துக் கொண்டே இருந்தது. நாகர் கோவிலின் பிரபல ஆலயமாகிய கஸ்பா சபையில் அந்நாட்களில் விடுமுறை வேதாகமப் பள்ளி நடை பெற்றுக் கொண்டிருந்தது. அதை நடத்திய V.B.S இயக்குனர்களுக்கு பிரகாஷ் இப்புதிய பாடலைப் பாடிச் சொல்லிக் கொடுத்தார். அவர்கள் பல நிகழ்ச்சிகளில் இதைப் பாடி அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர் தமிழகத்தின் பல இடங்களில் இப்பாடல் பிரபல்யமானது. பிரகாஷ் ஆந்திர மாநிலத்தில் குண்டூரில் செய்தியளிக்கச் சென்றகோது அக்கூட்டத்தில், “இயேசு சாலுனு” என்று தெலுங்கில் இப்பாடல் பாடப்படுவதைக் கேட்டு மகிழ்ந்தார். தற்போது இந்தியாவின் பல மொழிகளில் இப்பாடல் மொழிபெயர்க்கப்பட்டு, பாடப்பட்டு வருகிறது.
“சத்திய வசன” ஊழியத்திற்கென யாரோ இப்பாடலைப் பதிவு செய்தார்கள். அவர்கள் ஊழியத்திற்கு இப்பாடல் உதவியாக இருந்ததால், பாடலை எழுதிய பிரகாஷை அவர்கள் கண்டுபிடித்து, தங்கள் ஊழியங்களிலும் செய்தி அளிக்க அழைப்பு விடுத்தனர்.
வளங்கொழிக்கும் வாழ்வையே தங்கள் மதப் போதனையாகக் கொண்டவர்களுக்கு இப்பாடல் ஒரு தெளிவூட்டும் விளக்காக விளங்குகிறது. “மனிதர் என்னைக் கைவிட்டாலும்” என்ற சரணத்தில் உள்ள போபு புத்தகத்தின் கிறிஸ்தவ சத்தியத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. சிலுவை வழியில் நமக்கு இரட்சிப்பின் பாதையை அமைத்துக் கொடுத்த நம் இயேசு, உபத்திரவத்தின் மத்தியிலும் நம்மைப் பெலபடுத்தி, வழிநடத்த வல்லவர் என்பதை ஏற்றுக் கொள்பவர்களே இப்பாடலை உற்சாகமாகப் பாடமுடியும். வேதனை நிறைந்த சோதனை வேளைகளிலும், ஆறுதலின் நம்பிக்கையூட்டும் பாடமாக இது விளங்குகிறது.