பெற்றோரின் கடமை
அருள்திரு சி. இராஜசேகரன்
Parent responsibility

குடும்பம் கணவன் மனைவியுடன் முடிந்து விடுவதில்லை. பிள்ளைகள் என்கின்ற சொத்துக்கள்தான் குடும்பத்தை அலங்கரிக்கும் அலங்கார மலர்களாகும். பிள்ளைகள் கடவுள் கொடுக்கும் பரிசு. பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. கலைஞன் தன் மனதில் இருக்கிற பிம்பத்தை வடிக்க எடுக்கும் சிரமத்திற்கும் மேலானது பிள்ளைகளை வளர்ப்பது. பிள்ளைகளை வளர்க்க பல முன்னேற்பாடுகள் மற்றும் தியாகம் அவசியம். சமுதாயத்திற்கு ஏற்றார்போல் வளர்க்க வேண்டும் என்ற நிலைக்கு சற்று மேலாக பிள்ளையை கொடுத்த கடவுளுக்கு ஏற்றபடி வளர்ப்பதே சிறந்த வளர்ப்பு. பிள்ளைகள் வளர்ப்பில் சிட்சைகள் அவசியம். ஆனால் அது அவர்களைச் சினமடையச் செய்வதாகவோ அல்லது தவறான முடிவுகளை எடுப்பதற்கு ஏற்றதாகவோ இருக்கக்கூடாது.

இன்றைய காலத்து பிள்ளைகள் உணர்வில் வேகம் நிறைந்தவர்கள். எதையும் உடனே புரிந்து கொள்பவர்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் போதித்தால் அதற்கான நல்ல பலனைக் காணலாம். கல்வி அழகு புகழ் இவைகளை விட ஒழுக்கமே சிறந்தது என்பதை பிள்ளைகளுக்கு வாய் வழியாக கூறினால் மட்டுமல்லாது பெற்றோரது வாழ்க்கையே முன் மாதரியாக அமைந்திருக்க வேண்டும்.

பிள்ளைகளின் ஆசைகள் அவர்களது எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவரின் திட்டத்தை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் இவைகளை ஆலோசித்து கையாளுவது மிகமுக்கியம். மேற்கொண்ட முக்கிய தீர்மானங்களை பிள்ளைகளே எடுப்பதற்கு ஏற்ற அறிவிலும் சுதந்திரத்திலும் தைரியத்திலும் நம்பிக்கையிலும் வளர்க்க வேண்டும். இல்லாவிடில் பிள்ளைகள் பெற்றோரை நம்பி தன் எதிர் காலத்தை அவர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்க பழக்கப்டுத்த வேண்டும். பெற்றோரின் வளர்ப்பிளேயே பிள்ளைகளின் எதிர் காலம் இருக்கிறது.

நாம் வளர்க்கும் விதங்களில்தான் நம்மை நமது வயதான காலத்தில் நடத்துவார்கள். என்ன விதை போடுகிறோமோ அதன் பலன்களைத்தான் நாம் அடைய முடியும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நலன்களில் தங்களது எதிர்காலமும் இருக்கிறது என்று உணர்ந்து அவர்களை நல்வழியில் வளர்ப்போம்.


எழுத்தாளர், சிந்தனையாளர்,போதகர் போன்ற பல பொறுப்புகளுக்கு சொந்தமானவர். இவரை 91-944-365-4521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.