காக்கும் கரங்கள் உண்டெனக்கு
Bro.A.Stanley Chellappa
Be a life Pleasing to God not as a Fan for a Man

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
...

1969-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ம் நாள்.

நாசரேத்தின் மர்காஷிஸ் கல்லூரியின் நல்லொழுக்க வகுப்பில், ஒழுங்கீனமாகக் கலாட்டா செய்து கொண்டிருந்தான் அந்த வாலிபன்! அடையாளம் கண்டுகொண்ட விஞ்ஞானப் பேராசிரியர், மாலை வகுப்புகளுக்குப்பின் தன்னைத் தனியாக சந்தித்துச் செல்லக் கட்டளையிட்டார்.

தண்டைனையை எதிர்பார்த்துப் பேராசிரியரின் அறைக்குச் சென்ற ஜெயச்சந்திரனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவனைப் பாசமாய் அழைத்தார் பேராசிரியர் பி. ஞானதுரை. தவறு புரிந்தவனுக்கு இப்படியொரு அன்பின் வரவேற்பா!

பேராசிரியர் தொடர்ந்தார்:

“தம்பி, என்னிலும் அன்பாய் இயேசு உன்னை நேசிக்கிறார், தெரியுமா! அவரது தன்னலமற்ற தியாக அன்பைப் பற்றி, வேதாகமத்தில் உள்ள சில ஜீவ வசனங்களைப் பார்ப்போமா?”

அன்புக் குரலுக்கு அடிபணிந்த ஜெயச்சந்திரன், பேராசிரியரை மகிழ்விக்க, அவரது விருப்பப்படி, தன்னை ஆண்டவரின் கரத்தில் ஒப்புவித்து, ஒரு சிறு ஜெபத்தையும் ஏறெடுத்தான். ஆனால், உற்றுக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஆவியானவர், அவன் உள்ளத்தில் கிரியை செய்தார். எனவே, ஜெபத்தின் முடிவில் உண்மையாகவே தன் உள்ளத்தை திறந்து கொடுத்தான். ஆண்டவர் அவன் இதயத்தைக் கழுவிச் சுத்திகரித்து, புதிய வாழ்வைத் தந்தார்.

மனம் மாறிய ஜெயச்சந்திரன், காத்திருந்த தன் நண்பர்களின் சீட்டுக் கச்சேரியைக் கைவிட்டுவிட்டு, கல்லூரி விடுதிக்குப்பின் இருந்த உடைமரக்காட்டில் தனியே வேத வாசிப்பிலும், ஜெபத்திலும், நேரத்தைச் செலவிட ஆரம்பித்தான். நாளடைவில் அங்கே மாணவரின் ஜெப ஐக்கியம் உருவெடுத்தது.

பின்னர், ஜெயச்சந்திரன் 1969-ம் ஆண்டு முதல் 1973 –ம் ஆண்டுவரை, அசெம்பிளி ஆப் காட் சபையில், கல்லூரி ஸ்தானாபதிகள் இயக்கத்தில் இணைந்து ஊழியம் செய்தார். பல வாலிபர் முகாம்களை வெற்றிகரமாக நடத்திய ஜெயச்சந்திரனை, 1972-ம் ஆண்டு துவக்கத்தில், முழுநேர ஊழியம் செய்ய ஆண்டவர் அழைத்தார். ஊழியத்திற்குப் பிறரை அனுப்புவதில் தீவிரம் காட்டிய ஜெயச்சந்திரன், தான் போவதற்குத் தயங்கி நின்றார்.

இந்நிலையில், 1972-ம் ஆண்டு, ஜெயச்சந்திரன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார். அடிப்பட்டுக் காயம்பட்ட காலை வெட்டி எடுத்துவிட, மருத்துவமனையில் டாக்டர்கள் தீர்மானம் செய்தனர். திடுக்கிட்ட ஜெயச்சந்திரன் ஆண்டவரின் அற்புத சுகம் வேண்டி, தன்னை அவர் பணிக்கு முற்றிலும் அர்ப்பணத்தின்படி, ஜெயச்சந்திரன் 1973-ம் ஆண்டு, பெங்களுரிலுள்ள தென் ஆசிய வேதாகமக் கல்லூரியில் சேர்ந்தார். தென்னிந்தியத் திருச்சபைப் போதகரான அவரது தந்தை திரு. ஜஸ்டஸ்ராபிக்கும், அவரது தாய் திருமதி. சுலோச்சனாவுக்கும், தங்கள் மகன் பெந்தெகொஸ்தே அனுபவ வழியில் செல்வது விருப்பமில்லை. எனினும், தன் பெற்றோரின் எதிர்ப்புகள் மத்தியிலும், பல இன்னல்கள் மத்தியிலும், தேவனால் ஏவப்பட்ட சில தேவ பிள்ளைகளின் உதவியுடன், வேதாகமக் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார்.

அந்நாட்களில், கல்லூரி விடுமுறை நாட்களைக் கழிக்க, ஜெயச்சந்திரன் தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு வந்திருந்தார். 06.04.1974 அன்று, ஜெயச்சந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் சக்கர டயர் வெடித்தது, எதிரே வந்து கொண்டிருந்த லாரியை நோக்கி, வண்டி அவரை இழுத்துச் சென்றது. ஆனால், கடைசி நேரத்தில் ஆண்டவரின் கிருபையால் ஜெயச்சந்திரன் உயிர் தப்பினார்.

அப்போது, உடனடியாக தன் கிராமமான மூலச்சல் சென்று, ஒரு சிறு குன்றின மீது மண்டியிட்டு, ஆவியில் நிறைந்து, தன்னை அற்புதமாய்க் காத்த தேவனைப் போற்றி, ஜெயச்சந்திரன் நன்றி செலுத்தினார். உள்ளம் நன்றிப் பெருக்கெடுத்தோட, உதடுகள் அன்னிய மொழியில் தேவனைத் துதிக்க, அன்றே, அந்நிலையில், இப்பாடலையும், அதின் ராகத்தையும், ஆவியின் நிறைவின் அன்பளிப்பாகப் பெற்றார்.

பின்னர் தன் படிப்பைத் தொடர, பெங்களுர் திரும்பிய ஜெயச்சந்திரன், தேவன் தன் வாழ்வில் செய்த இந்த அற்புதப் பாதுகாப்பைப் பற்றி, 20.06.1974 அன்று கல்லூரியின் சிற்றாலய ஆராதனையில் சாட்சி பகர்ந்தது, முதன்முறையாக இப்பாடலைப் பாடினார். இச்சாட்சிப் பாடலின் அனுபவமே, அவரது ஊழியப் பாதையிலும் தொடர்ந்தது.

1978 மார்ச்சு மாதம் தனது கல்லூரிப் படிப்பை முடித்து, முன்னோடி ஊழியராகவும், போதகராகவும், சில மாதங்கள் சென்னையிலும், பின்னர் தஞ்சையிலும் அவர் ஊழியம் செய்த நாட்களில், அவர் சந்தித்த கடின அனுபவங்கள் தான் எத்தனை!


Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com