மகனின் சாமர்த்தியம்!
பொ.ம.ராசமணி
Husband not Spending time

எந்தக் காரியத்தை பூபாலராயர் செய்தாலும் அதில் சுயநலம் ஒட்டிக் கொண்டிருக்கும். நூறு ரூபாய் செலவில் கோவிலுக்கு முன்பாக ஒரு பல்ப் வாங்கிப் போட்டுவிட்டு, ஆயிரம் ரூபாய்க்கு வால்போஸ்ட்டு போட்டு இருளை வென்ற எங்க பூபாலராயர் வாழ்க! என்று தெரு வெங்கும் விளம் பரப்படுத்தியவர் அவர்.
 
பூபாலராயர் இரண்டு பூட்டுகள், சாவிகள், கம்பிகள் ஆணிகளை வாங்கி வைத்துக்கொண்டு ஒரு சின்ன இரும்புக்கடையாக வியாபாரம் தொடங்கினார். அவரது பேச்சுச் சாமர்த்தியம், சிரித்த முகம், கட்டின உழைப்புக் காரணமாக இன்று அந்த வட்டாரத்திலேயே ராயர் ஹார்டுவேர் என்றால் அறியாத உயிர்கள் கிடையாது.
 
பூபாலராயர் படித்ததென்னவோ மூன்றாவது வகுப்புத்தான் ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டிற்கு ஓர் இரும்புக் கதவு போட்டு அதில் பூபாலராயர் உபயம் என்று எழுதி வைத்தார் அவர் அதன் காரணமாக அந்தப் பள்ளிக்கூடம் பிறகு வளர்ச்சி அடைந்து மேல்நிலைப்பள்ளி ஆக கட்டடவேலை நடந்தபோது தேவையான இரும்புகள் அனைத்தையும் பூபாலராயரிடமே வாங்கினார்கள் அந்த வகையில் மட்டும் பூபாலராயருக்கு அரை இலட்சத்திற்கு மேல் லாபம் என்று கேள்வி.
 
வேண்டாத புழுவைக் கோர்த்துப் போட்டு விலாங்கு மீனைப்பிடிப்பதில் வல்லவர் என்று விஷயம் தெரிந்த வட்டாரத்தில் பேசிக்கொண்டனர். ஆனால் அப்பாவி மக்கள் மத்தியில் அவர் வற்றாத மேகம் போல் வழங்கும் வள்ளலாகவே காட்சி அளித்தார்.
 
உயர்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவிற்கு தலைமை வகிக்கும் சென்றவர் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குகின்ற பையனுக்கு எவர் சில்வர் குத்துவிளக்கு என்று வாக்குக்கொடுத்தார், அந்தச் சந்தடியில் வகுப்பில் கடைசி மாணவனாக இருந்த தனது மகன் ஒருவனை ஏழாவது வகுப்பிலிருந்து எட்டாவது வகுப்பிற்கு புரமோஷன் வாங்கிக்கொண்டார்.
 
அந்த ஆண்டு ஊர்க் கோவில் திருவிழாவிற்கு பாட்டுக் கச்சேரி வைத்திருந்தார்கள். காம்போதி கனகரத்ன பாகவதார் பாட வந்திருந்தார். அவரது கம்பீரமான தோற்றம் களையான முகம், எடுப்பான குரல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தும், ஏகப்பட்ட கூட்டம் கச்சேரி முடிந்ததும் காம்போதி கனகரத்ன பாகவதர்க்கு பலர் பொன்னாடை போட்டனர். பலர் பூமாலை சாத்தினர் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன்.
 
காற்றுள்ள போதே தூற்றிக் பழகிய பூபாலராயர் சும்மா இருப்பாரா? சரி கைத் துப்பட்டி டாலடிக்க மேடை மீது ஏறினார். சங்கீதசாம்ராஜ்ய சக்ரவர்த்தியாகத் திகழும் காம்போதி கனகரத்ன பாகவதருக்கு இந்த உலகத்தையே காணிக்கையாக காலடியில் வைக்கலாம். ஆனாலும் அடியேனின் அற்பக் காணிக்கையாக இந்தத் தங்கப்பதக்கத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கொடுத்தார், ஊரே அந்தப் பரிசைக்கண்டு அயர்ந்து விட்டது. பூபாலராயர் என்றால் பூபாலராயர் தான்! என்று புகழ்ந்தது.
 
ஒருவர் பூபாலராயரிடம் எவ்வளவு பெரிய பதக்கம்! ரொம்ப விலையாக இருக்குமே! என்று ரகசியமாகக்கேட்டார் என்ன பிரமாத விலை! பணமா பெரிசு இந்த சங்கீதத்திற்கு எதைக் கொடுத்தால் தான் தகாது கேவலம் மூவாயிரம் தங்கப் பதக்கமா பெரிசு! என்று அலட்சியமாகக் கூறினார் பூபாலராயர்.
 
அன்றிரவு விழா முடியநேரமாகி விட்டது. காலையில் ஒன்பது மணிக்குத் தான் விழித்தார். பூபாலராயர் அவர் உதவாக்கரை. நீ உருப்படுவியா? என்று அடிக்கடித் திட்டும் அவரது மகன் வசந்தராயன், அப்பா அப்பா! என்னை எதற்கும் லாயக்கில்லாதவன் என்று பேசுவீர்களே, இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள் எனது சாமர்த்தியத்தைப் பார்த்திர்களா! நீங்கள் மூவாயிரம் ரூபாய பெறுமான தங்கப்பதக்கத்தை கார்போதி கனகரத்தன பாகவதருக்குக் கொடுத்தீர்களே அதை நான் அவரிடம் திறமையாகப் பேசி, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன் ஆயிரம் ரூபாய் லாபந்தானே! பூபாலராயர் திகைத்துப் போனார் ஐம்பது ரூபாயிக்கு வாங்கின தங்க முலாம் பூசிய பதக்கத்தை இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து மகன் வாங்கினால் திகைக்காமல் இருக்க முடியுமா!