ஒருமுறை தோல் பதனிடும் கம்பெனியில் பணிபுரியும் ஒருவரை அவருடைள வேலை நேரத்தில் சந்திக்கச் சென்றபோது, அந்தத் தொழிற்சாலையில் வீசிய துர்நாற்றம் சகிக்க முடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. ஆனால் அங்கு பணிபுரிகிற யாவரும் அதைச் சர்வசாதரணமாக எடுத்துக் கொண்டு தினமும் அங்கேயே பணி செய்கின்றனர். அவர்களும் துவக்கத்தில் அந்த வாசனையை ஏற்க இயலாதவர்களாகவே இருந்திருப்பார்கள். ஆனால் அங்கேயே தொடாந்து தங்க நேர்ந்தபோது, அவர்களின் மூக்கு அந்த நாற்றமான சூழ்நிலையைச் சாதராணமாக எடுத்துக் கொள்ளும் விதமாகப் பழகிப் போய்விட்டது. தவறான காரியங்கள். தப்பிதமான வழியகள், மோசமான பழக்கங்கள், நலமல்லாத ஐக்கியங்கள் போன்றவை துவக்கத்தில் யாருக்குமே மிகவும் வெறுப்புக்குரியதாகவே இருக்கும். ஆனால் அவற்றைவிட்டு விலகி ஓட எந்தப் பிரயாசமும் எடுக்காமல் போகும் போது, அவைகள் நாளடைவில் சாதாரண விஷயங்களாகிவிடும். போத்திபாரின் வீட்டில் பாவத்திற்கேதுவான ஒரு சூழ்நிலையைக் கண்ட யோசேப்பு, அதனை அருவருப்பாகவும், ஆகாததாகவும் எண்ணிதோடு, அதனை விட்டுவிலகி ஓடவும் தயங்கவில்லை. ஒருவேளை அவன் அவ்விதம் ஓடிப்போகாமலிருந்தால், அந்த சூழ்நிலையோடுசீக்கிரம் சாதாரணமாகப் பழகிப் போயிருப்பான். நாளடைவில் அது அவனுக்கு அருவருப்பற்ற சாதாரண சூழ்நிலையாக மாறிப்போயிருக்கும். ஒரு தவறை, குறைவை, தப்பான பழக்கத்தை, மோசமான சுபாவத்தை நாம் ஆகாதென்று உணரும்போது, அவைகளை விட்டு விலகிப்போக போதிய மன ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். தவறென்று உணர்வதோடு மட்டும் நின்றுவிட்டால், நாளடைவில் அவைகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் விதமாக நம்முடைய மனநிலை பழகிப் போய்விடும். அது தேவனுக்குக் கோபமூட்டுகின்ற ஒரு மரத்துப்போன உணர்வற்ற வாழ்க்கைக்கு நம்மைக் கொண்டு செல்லும். அவ்விதமான ஒரு மரத்துப்போன மனநிலை யால்தான் இஸ்ரவேலர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு வெகுதூரமாகப் போனார்கள் என்பதை நாம் மறக்க இயலாது.
|