வினோத வியாபாரி..!
அன்பு ஒளி
Words and Word of God

குஜராத் மாநிலத்தில் தேவ ஊழியம் செய்கிற எனக்கு மும்பாய் புறநகரில் உள்ள ஒர் திருச்சபைக்கு ஊழியம் செய்ய அழைப்பு கிடைத்தது.

அது 2 நாட்கள் கூட்டம். ஞாயிறு ஆராதனையில் பேசி முடித்தவுடன், திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் வந்தது. அந்த நகரத்தில்தான் எனது உறவினர் ஒருவர் தொழில் செய்ய வந்துள்ளதை நினைவு கூர்ந்தேன். அவர் பெயர் திரு. பர்யேசு. அவர் பெயரை சொன்னவுடன், அந்த நகர மக்கள் உடனே அவர் கடையையும் வீட்டையும் சொல்லிவிட்டார்கள்.
 
நாங்கள் 3 பேரும் எங்கள் பெட்டியுடன் அவர் கடையை நோக்கி நடந்தோம். வியாபாரம் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது. எங்களைக் கண்டவுடன் எழுந்து வந்து கைகூப்பினார். “வாருங்கள், எப்படி இங்கு வந்தீர்கள்?” என்று விசாரித்தார். அவருடைய வீடு கடைக்குப் பின்பக்கத்திலேயே கடையை ஒட்டி இருந்தது.
 
கடைவழியே எங்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவருக்கு ஒரு வாலிப மகள், நான்கு வாலிபப் பையன்கள். 5 பிள்ளைகளும் ஆண்டவரை அதிகம் நேசிக்கிறவர்கள்.
 
வீட்டிற்குச் சென்றவுடன் அவர்களின் மகள் அன்போடு உபசரித்து தேநீர் பலகாரம் கொடுத்தாள். சில நிமிடங்கள் கழித்து, எங்கள் உறவினர் திரு. பர்யேசு கடைக்குள் சென்றார். ரூபாய் நோட்டுக்கள் சில கட்டுகளை தன் கையில் ஏந்திக்கொண்டு, தன் வீட்டின் பீரோக்களில் வைத்ததைக் கண்டோம். அத்தனை வியாபாரம்!
 
“நீங்கள் மூன்று பேர் வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எங்கள் சபையை விஷமிகள் சிலர், சில வாரங்களுக்கு முன்பு சேதப்படுத்திவிட்டனர். வந்து பார்க்கறீர்களா?” என்று அன்போடும், அதே நேரத்தில் துக்கத்தோடும் அழைத்துச் சென்றார்.
 
20 நிமிடங்களுக்குள், நாங்கள் அவர்கள் சபை ஆராதனை நடக்கும் இடத்திற்குச் சென்றோம்.
 
“சுமார் 300 பேர் ஆராதிக்கக்கூடிய இடம் எங்கள் சபை. மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இரவு, சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பலர் தெய்வத்தைத் தேடி பல தேவைகளோடு வருவார்கள் தேவன் வந்த மக்களுக்கு சுகமளித்து, பிசாசுகளை விரட்டி, தன்னுடைய வார்த்தைகளை நிரூபித்தக் கொண்டு வந்தார். இதை சகிக்க முடியாத விஷமிகள், ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை, கும்பலாக நுழைந்து எல்லா பேன்கள், டியூப் லைட்களையும் உடைத்து, சின்னா பின்னமாக்கி விட்டுப் போய்விட்டார்கள்” என்று கதறி அழுதார். நாங்கள் அந்த இடத்தில் கைகோர்த்து நின்று, தேம்பித் தேம்பித் அழுது, ஜெபித்தோம். தேவன் இன்னும் பெரிய காரியங்களைச் செய்வார் என்ற தைரியத்தோடு திரும்பினோம்.
 
வீடு திரும்பியபோது, மதியம் 1.30 மணி. எங்களுக்கு நல்ல பசி. நாங்கள் சாப்பிட எழும்பினபோது உறவினர் திரு. பர்யேசு “சாப்பிடுவதற்கு முன் ஜெபம் செய்து விடலாமா?” என்றார்.
 
நாங்கள் ஜெபிக்க ஆயத்தமானோம். திரு. பர்யேசு எழும்பினார்: பாய்களை விரித்தார்: பாடல் புத்தகங்களை ஆங்காங்கே வைத்தார்: நெடு முழங்காலில் நின்று, தெரிந்த பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்துவிட்டார்.
 
‘கணீர்’ ‘கணீர்’ என்று அவர் பாடியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு தெரிந்த பாடலையும் பாடினார். அவரது மகளும் தகப்பனாரைப் போல மிக அழகாக பாடினாள். “இந்திய தேசத்தில், தெய்வத்தை தேடும் மக்கள் இயேசுவை, சிலுவையில் மரித்து உயிர்த்த தெய்வம் என்று கண்டு கொள்ளவேண்டும்” என்று முதல் ஜெபக்குறிப்பைச் சொன்னார். அவரது மகள் உருக்கமாக ஜெபித்தாள். இப்படி ஒன்றன்பின் ஒன்றாக 6 ஜெபக்குறிப்புகளை சொன்னார். 6 குறிப்புகளுமே இந்திய தேசத்திற்காகவே. தனக்கோ … தன் பிள்ளைகளுக்கோ.. தன் மனைவிக்கோ… தன் வியாபாரத்திற்கோ… ஜெபக்குறிப்புகளை சொல்லவில்லை. இது எங்களுக்கு அதிசயமாக இருந்தது. ஜெபித்து முடித்தவுடன் “இது என்ன ஜெபம்?” என்று அவரிடம் கேட்டோம். “இது தேசத்திற்காய் ஜெபிக்கும் மதிய ஜெபம” என்றார்.
 
“இரவிலே ஜெபிக்க மாட்டீர்களா?” என்றேன்.
 
“தினமும் ஜெபிக்கிறோம். எங்கள் வியாபாரத்தை முடித்து கடைகளை அடைக்கும் போது மணி இரவு 11.00. ஆகிவிடும். பிள்ளைகளும், கடைப்பையன்களும் வீடு வந்து சேர்ந்து சாப்பிட்டு முடிக்கும்போது மணி இரவு 12.30 ஆகும். இரவு 12.30 மணிக்கு இரவில், பாடல் தினமும் ஜெபிக்கிறோம்” என்றார். “காலை ஜெபம்…?” என்றேன்.
 
மெதுவாக “காலை 7.00 மணிக்கு மறுபடியும் கூடி ஜெபிக்கிறோம்” என்றார்.
 
“இந்த பகுதிக்கு நாங்கள் தொழில் தேடி 12 ஆண்டுகளுக்கு முன்பாக வந்தோம். எங்கள் கைகளில் இருந்த தொகை வெறும் ரூ. 5000- மட்டுமே. இன்று எங்கள் பிள்ளைகள் வளர்ந்து தொழில் செய்கிறார்கள். 3 பெரிய கடைகள்.. மொத்த வியாபாரம்.. எங்கள் கடையைத் தேடித்தான் பல இடங்களிலிருந்து வியாபாரிகள் வருகிறார்கள். எங்களுக்கு வரவேண்டிய பாக்கி மாத்திரம் ரூ. 12 இலட்சம். இன்றைய மூலதனமோ பல இலட்சங்கள். இந்த தெய்வத்திற்கு நாங்கள் ஏதாவது கைமாறு செய்ய வேண்டுமென்று இந்த மதிய ஜெபம் ஆரம்பித்தோம். ஒரு கடையை என் மனைவி கவனித்துக் கொள்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும்போது எங்களோடு சேர்ந்து ஜெபிப்பார்கள். நான், மாலை வேளையில், மற்றும் சனி, ஞாயிறு தினங்களிலும் எங்கள் பாஸ்டரோடு கிராமங்களுக்கு ஊழியத்திற்கு செல்லுகிறேன். நான் ஜெபித்தால், பிசாசுகள் ஓடுகின்றன. வியாதிகள் குணமாகின்றன. பிரசங்கிக்கிற வரத்தையும் தேவன் எனக்குத் தந்திருக்கிறார்…” என்று சொல்லி முடித்தபோது, நாங்கள் மூன்று பேரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
 
இப்படியும் ஒர் வினோதமான வியாபாரியா.? மதிய உணவிற்கு முன் இந்தியாவிற்காக கண்ணீர் விடும் வியாபாரியைக் கண்டு அதிகம் மகிழ்ந்தோம். இன்று, அவரது மூத்த மகன் ஒர் முழு நேர ஊழியர். அதைப்பார்த்துவிட்டு வந்தபின் எங்கள் வீட்டிலும் 3வது ஜெப நேரம்!
 
நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்களா? தேசத்திற்காக எழும்பி நிற்க வேண்டுமே. அடிக்கடி உங்கள் போதகருடன், ஊழியங்களிலும் பங்கு கொள்கிறீர்களா? காலையும் மாலையும் கூடி ஜெபிப்பதை விட்டுவிடக்கூடாதே.
 
இந்திய தேசம் சந்திக்கப்படுவதில், உங்களுக்கும் ஒரு பெரிய பங்குண்டே! இந்த 3வது ஜெப நேரம், மதிய நேரமே! தேவன் எதிர்பார்க்கிறாரே! தேவனுக்குக் கைகொடுங்கள்! தேவன் உங்களுக்குக் கைகொடுப்பார்!
 
“அந்தி, சந்தி, மத்தியான வேளைகளிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன். அவர் என் சத்தத்தைக் கேட்பார்.” (சங்கீதம் 55:17)
 
“தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்த போதிலும், தன் வீட்டுக்குள்ளே போய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்து வந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.” (தானியேல் 6:10)

 


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'

Social Share