இந்தக் கோபம் எதற்கு?
பொ.ம.ராசமணி
Leader-Stewardship

 “அப்பப்பா, இந்த மாதிரிச் சாமான்களுக்குக் கிராக்கி வந்தால் ஒரே அலைச்சல்தான். சாமான் செய்றவன் பதுக்குகிறானோ, வாங்கி விற்கிறவன் பதுக்குகிறானோ,  யார் கண்டது? ஒன்றை வாங்கி உபயோகிச்சிட்டோமானால் வேறு வாங்க மனது நோங்கமாட்டேங்குது!   என்ன விலை கொடுத்தாகிலும் வாங்கிக் கொள்ளுவாங்க என்ற தைரியத்திலே ஒவ்வொரு சாமான் கொள்ளை விலைக்கு விற்கிறானுங்க. ” என்று புலம்பிக் கொண்டிருந்தாள் ரோசம்மாள்.
 
“பாட்டி, பேச்சை நிறுத்து, ஏன் அனாவசியமா புலம்புறே! புலம்பினால் என்னலாபம்? நீ ஹார்லிக்ஸ் குடிச்சுப் பழகிட்டேவேறே எது கொடுத்தாலும் வாடை பிடிக்கலைன்னு மூஞ்சை பத்துக் கோணலா சுளிக்கிறே! நான் இரண்டு நாளா நாயாய் அலைஞ்சு டவுண்லேயிருந்து வாங்கிட்டு வந்துட்டேனே. பேச்சை அத்தோடு விடு” என்று குறுக்கிட்டான் செல்வம்.
 
பத்தாவது படிக்கும் செல்வம் தினமும் வர கூரிலிருந்து திண்டுக்கல் போய் படித்து வருகிறான். ஆறு கிலோ மீட்டர். வழக்கமாக சைக்கிளில்தான் போவான் மேகம் திரண்டு மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் அன்று பஸ்ஸில் போய்வந்தான். அவன் முகத்தில் அலைந்து திரிந்து, அவனோடு படிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் உதவியுடன் பாட்டிக்கு ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கி வந்து விட்ட தெம்பு தெளிவாகத் தெரிந்தது.
 
அப்போது மிகுந்த கோபத்துடன் உள்ளே நுழைந்தார் செல்வத்தின் அப்பா. ஞானதாஸ். செல்வத்தை நான்கு அறை அறைந்தார். திடீர்த் தாக்குதலால் திணறிப் போய்விட்டான் செல்வம். 
 
 எதுக்குடா பிள்ளையை இப்படிப் போட்டுக் கொல்றே! உனக்குப் பைத்தியம் கிய்த்தியம் ஏதாவது பிடிச்சுட்டா?” என்று பாய்ந்து வந்தாள் ரோசம்மாள்.
 
“யாராவது குறுக்கே வந்தால் உங்களுக்கும் இதேகதிதான். இப்போதே சொல்லிட்டேன். பக்கத்திலே வராதிங்க!” என்று பையனை மேலும் போட்டு மொத்தினார்.
 
உள்ளே இருந்து ஞானதாசின் மனைவி ஓடி வந்து ஓர் அதட்டுப் போட்டாள். பழக்க தோஷம்! மனைவியின் சத்தத்தைக் கேட்டதும் சிறிது நிறுத்தினார் ஞானதாஸ். மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.
 
“இந்தப் பயல் பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்திருக்கிறான். இதைவிடக் கேவலம் வேணுமா? ஒருவன் உங்கள் மகன் பஸ் ஸ்டாண்டிலே பிச்சை எடுத்ததை நான் கண்ணாலே பார்த்தேன் என்று சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருந்தது?” என்று பொருமிக்கொண்டே கூறினார் ஞானதாஸ்.
 
“பிச்சையடா எடுத்தே!” என்று தாயும் கோபத்துடன் பார்த்தாள்.
 
செல்வத்திற்கு இப்போதுதான் தந்தையின் கோபத்திற்கான காரணம் விளங்கியது!
 
விம்மிக்;கொண்டே, “அப்பா, பஸ் ஸ்டாண்டில் ஒதுங்கி நின்றபோது, மழை பெய்கிறதா என்று கையை நீட்டி வெளியே பார்த்தேன். அப்போது வழியே சைக்கிளில் போகும் ஒருவன் நின்று பிச்சை கேட்கிறேன் போல இருக்கு என்று பத்துப் பைசாவை கையில் வைத்துவிட்டுப் போய்விட்டான்” என்றான் செல்வன்.

ஞானதாஸுக்கு யாரோ அறைந்தது போல் இருந்தது.  தினமும் ஆறு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் போய் படித்து வரும் அமைதியான பிள்ளையை விவரத்தை கேட்காமல் அடித்து விட்டோமே என்று மனது விம்மியது.

 செல்வத்தை வாரி அணைத்து, "என்னை மன்னிச்சிடுப்பா" என்றான்.

அவன் கண்களில் கண்ணீர் துளிகள்.
 

யாக்கோபு 1:19-20 : ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயு மிருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.