"என் ஜனங்கள்..?”
அன்பு ஒளி
What is Grace

9 ஆண்டுகளுக்கு முன் எனக்கு திருமணம் ஆயிற்று. அன்பாய் நேசிக்கிறவர் என் கணவர். நல்ல கம்பெனி ஒன்றில் இஞ்சினியராக வேலை செய்கிறார். நான் பிறந்த வீட்டிலும், என் பெற்றோரும், என் உடன் பிறந்தவர்களும் என்னை அதிகம் நேசித்தார்கள். திருமணமான பின், என் மாமனார், மாமியார் என்னை சொந்த மகளைப்போல நேசித்தது எனக்கு ஆச்சரியமே. சிறு வயதில், பள்ளியில் நடந்த கூட்டம் ஒன்றில் இயேசு கிறிஸ்துவை என் வாழ்க்கையின் நாயகராக ஏற்றுக்கொண்டவள். வேதம் வாசிப்பதிலும் ஜெபத்திலும் என் நேரத்தை நான் விட்டுக்கொடுத்ததே இல்லை.
 
பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, பலருக்கு என் வாழ்க்கை முன் மாதிரியாக இருந்தது. மாலை வேளைகளில் நாங்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு ஜெபக்குழுவை ஆரம்பித்து, சினேகிதிகளாக ஜெபித்து வந்தோம். மூன்றாம் ஆண்டு வந்தபோது, என்கூட ஜெபித்த அநேகர் தங்கள் எதிர்காலத் திருமண வாழ்க்கைக்காகவும் ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.
 
21வது வயதில் நான் M.E.  முடித்தேன். வீட்டிற்கு அருகேயிருந்த பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக தேவன் எனக்கு உடனே வேலை கொடுத்தார். அப்போதுதான் என் திருமணம் ஒழுங்காயிற்று. கல்லூரியிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களும் பேராசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு “கொடுத்து வைத்தவள்” என்று சொல்லி வாழ்த்திச் சென்றார்கள். எங்களை தனி வீடு பார்த்து குடியமர்த்தினார்கள்.
 
திருமணம் ஆகி 1 ½ ஆண்டுகளில் எங்கள் பெற்றோர்கள் எதிர்பார்த்த அந்த நல்ல செய்தியை சொன்னோம். “என் வயிற்றில் குழந்தை..”  என்று முதன் முதலில் என் தாயிடத்தில் சொன்னேன்.  அவர்களுக்கு ஓரே மகிழ்ச்சி.  மறுநாளே, எங்கள் முழு குடும்பமும் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். மிக நேர்த்தியாக சமைத்து, என்னைக் கவனித்து வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். அடுத்த நாள், எங்கள் மாமனார் குடும்பம்.. அதேபோல் அதிக மகிழ்ச்சியோடு வந்தார்கள். இன்னும் பிரமாதமாக உணவு சமைத்து மகிழ்ச்சியாக்கிவிட்டு சென்றார்கள்.
 
அடுத்த மூன்று மாதத்தில் எதிர்பார்த்திராத நிகழ்ச்சி நடந்துவிட்டது. இரண்டு தினங்கள், என் கணவரோடு பல இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவர வேண்டிய நிகழ்ச்சிகள் இருந்தன. சாலை சரியாக இல்லாத மேடு பள்ளமாயிருந்த இடங்கள்.. தொடர்ச்சியான பயணம்.. சரியான வெயில் நேரம்.. எல்லாம் சேர்ந்து, என் வயிற்றில் இருந்த சிசு கலைந்துவிட்டது. என் வீடு சாவு வீடுபோல் ஆகிவிட்டது. என் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் எங்களை ஆறுதல் படுத்த பல வாரங்கள் ஆகிவிட்டது. எப்படியோ மறுபடியும் பழைய தெம்போடு ஆனால் பெலவீனத்தோடு என்னுடைய கடமைகளை செய்ய ஆரம்பித்தேன். “என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” (யோவேல் 2:26:27) என்று எழுதியிருக்கிறதே என்று சொல்லி என் கணவர் தினமும் என்னைத் தேற்றுவார்.
 
அடுத்த ஆண்டில், மறுபடியும் நான் கர்ப்பவதியானேன். அதேபோல், 4 மாதங்களில் நான் வயிற்றிலேயே என் குழந்தையை பறிகொடுத்தேன். இப்படி 8 ஆண்டுகளில் 7 தடவை எனக்கு நேரிட்டது. 7 தடவையும் எங்கள் வீடு துக்க வீடுதான். ஆனால் என் உள்ளத்தில் மாத்திரம் “என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” என்று என் கணவர் என்னைத் தேற்றி வந்த வசனம் ஆறதல் படுத்திக் கொண்டே இருந்தது.
 
எங்கள் குடும்ப மருத்துவர் எங்களை திட்டியேவிட்டார். “இனி உங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு குழந்தை இருக்கவே கூடாது..” இந்த வார்த்தை என்னை அதிகம் துக்கப்படுத்தியது. ஆனால், என் உள்ளத்திலோ மறுபடியும் மறுபடியும் அதே வேதவார்த்தை நினைவிற்கு வந்துகொண்டேயிருந்தது. இந்நிலையில், நாங்கள் இருந்த வீட்டின் அருகில் இருந்த ஒர் போதகர் இல்லத்திற்கு என் சிநேகிதியும் அவள் கணவரும் எங்களை அழைத்துச் சென்றார்கள்.
 
அப்போதகருக்கு நடுத்தர வயது.. பிரகாசமான முகம்.. ஓர் சிறிய சபை அவருக்கு உண்டு. போதகர் அருகில், அவர்கள் மனைவியும் நின்று கொண்டிருந்தார்கள். இவர்களை நான் பல தடைவ எங்கள் கடைத்தெருவில் பார்த்திருக்கிறேன். எங்களை அழைத்துச் சென்ற சிநேகிதியும் அவள் கணவரும் எங்களை அறிமுகம் செய்தனர். எங்கள் காரியங்களை விளக்கினார்கள். எல்லாவற்றையும் கவனித்து இரண்டு பேரும் கேட்டார்கள். அவர்களது மகள் காபி கொண்டு வந்;தாள்.

சாதாரணமாக பேசிக்கொண்டே இருந்த போதகர், “தேவன் உங்களுக்கு இந்த ஆண்டிலேயே குழந்தையை தர முடியும்.. அதுவும் ஆண் குழந்தையை தர முடியும்..” என்று விளையாட்டாக சொன்னவர் ஜெபத்தில் அந்த வார்த்தையைச் சொல்லியே ஜெபித்தார்.  மட்டுமல்ல, “என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” என்று 3 தடவை சொல்லிச் சொல்லி ஜெபித்தார். எனக்கு ஓரே ஆச்சரியம்! பல ஆண்டுகளாக தேவன் எனக்குத் தந்த வசனம் அவர் வாயிலிருந்து 3 தடவை வந்து உறுதிப்படுத்தியது.
 
மகிழ்ச்சியோடு வீடு திரும்பினோம். அவர் ஜெபித்தது போலவே, அதே ஆண்டில் எங்களுக்கு ஆண் குழந்தையை தேவன் தந்தார். அல்லேலூயா! நண்பரே, இதே வார்த்தை உங்களுக்கும் சொந்தம். நீங்கள் வெட்கப்பட மாட்டீர்கள். தேவனை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'

Social Share