புதிய தெம்பு
அன்பு ஒளி
Words and Word of God

என் ஊர் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பட்டணம். என் பெற்றோர் கிராமப்புரத்தில் வசித்தவர்கள். என் தகப்பனார் ஒர் மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். என் தாத்தா எப்படியோ இயேசு தெய்வத்தை அறிந்து, அவரைத் தொழுது கொள்ள ஆரம்பித்தவர்கள். அக்குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். எனது 14 வயதிலேயே இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு மெய்ச் சமாதானத்தை அனுபவிக்க ஆரம்பித்தேன.
 
கல்லூரியில் படித்தபோது, வீசு பந்து குழுவிற்கு (Throw ball Team) நான்தான் குழுத் தலைவன்(Captain).  அதோடு பல விளையாட்டுகளுக்கும் நேரம் கொடுத்து வந்தேன். பல பரிசுகள் பெற்றிருக்கிறேன். என்னை மாநில அளவில் பல போட்டிகளுக்கு கணக்கில் வைத்திருந்தார்கள். இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, என்னுடைய நேரம் எல்லாம் விளையாட்டிற்கே சென்றது. கல்லூரியில் இயங்கி வந்த ஜெபக் கூட்ட நேரங்களில், நானோ விளையாட்டு அரங்கில் விளையாடிக் கொண்டிருப்பேன். இதை எண்ணின போது என் மனது குத்த ஆரம்பித்தது. எனது ஆசை எல்லாம் கல்லூரியில் பல பரிசுகள் வாங்க வேண்டும். என் கல்லூரியை மாநில அளவில் உயர்த்த வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்போடு நான் விளையாடி வந்தேன். அப்படி விளையாடி வரும்போதெல்லாம் எனக்குள் ஓர் இழப்பின் எண்ணமும் மன அமைதியற்ற அனுபவமும் கூட ஆரம்பித்தது.
 
ஒரு நாள் மாலையில், என்னுடைய கல்லூரியின் சிற்றாலயத்தில் பேச வந்திருந்த ஒர் அக்கா, எபிரேயர் 12:1 ஐ விளக்கி பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள்.
 
“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தை தள்ளிவி;ட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” என்ற வசனத்தை கல்லூரி மாணவர்களுக்கு ஏற்றபடி, தைரியமாய் அனுபவத்தோடு பகிர்ந்து கொண்டார்கள். பாரமான யாவற்றையும் தள்ள வேண்டும். பாவத்தையும் தள்ள வேண்டும் என்று மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

என் கல்லூரியில் முழு நேர அழைப்பை உள்ளத்தில் பெற்றிருந்த நான், விளையாட்டுத் துறையில் முன்நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை “Un-wanted weight”  என்று தேவன் உணர்த்தினார். விளையாடுவது பாவமல்ல அது தேவனுக்குப் பிடிக்காததும் அல்ல. முழு நேர அழைப்பு உள்ள எனக்கோ, அது வேண்டாத பாரம் என்று அவ்வார்த்தையை தேவன் விளக்கினார்.
 
என் விடுதிக்கு வந்தபின், இரவு உணவு சாப்பிட எனக்கு இஷ்டமில்லை. “நான் சாப்பிட வரவில்லை” என்று என் சிநேகிதிகளுக்குச் சொல்லி அனுப்பிவிட்டு என் அறைக்கதவை மெதுவாகப் பூட்டினேன். எபிரேயர் 12:1 ஐ எடுத்து மறுபடியும் முழங்காலில் நின்று வாசிக்க ஆரம்பித்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மோசேயின் சரித்திரம் மறுபடியும் என் மனதை ஆழமாகத் தொட்டது. அடுத்து, எகிப்தில் ராஜாவாக வாய்ப்புள்ளவன்’ மோசே.
 
“மோசே பிறந்தபோது அவனுடைய தாய் தகப்பனார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதம் ஒளித்துவைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோட துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்ளிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். விசுவாசத்தினால் அவன் அதரிசனானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்” (எபிரேயர் 11:23-27).  இந்த 5 வசனங்களும் அதிகம் என் உள்ளத்தை தொடுவதைக் கண்டேன்.
 
மோசே, தனக்கு லாபமானதைத் தள்ளி விட்டதை அன்று ஆண்டவர் அதிகம் உணர்த்தினார். என் அறையின் கதவை மூடினபடியே  என் சமாதானக் குறைவை உணர்ந்தவளாக சுமார் 10 நிமிடங்கள் அழுது ஜெபித்தேன். கல்லூரியின் ஜெபக்குழுவிற்கு செல்லாததை அறிக்கை செய்தேன். பெயரளவிற்கு வேதத்தை வாசித்ததை ஒப்புக்கொண்டேன். பத்தே நிமிடத்தில் என் மனதில் ஓர் புதிய சமாதானம், மகிழ்ச்சி. இந்தப் பரலோக அனுபவம் என்னை அதிகம் நிரப்பிற்று. இப்போது எனக்குள்ளே ஓர் புதிய தெம்பு.. புதிய தைரியம்.. புதிய பரிசுத்தம்.
 
எனக்குள்ளே ஓர் மெல்லிய உணர்வு. “நீ எதிர் காலத்தில் ஒரு மிஷனரி.. உன்னை அதற்கென்று இந்த வாலிப வயதில் ஆயத்தப்படுத்திக்கொள்” என்ற தெளிவான தேவ உணர்த்துதலை புரிந்துகொண்டேன். “நான் ஒரு மிஷனரி”. இதைப் பலதடவை சொன்னேன்.  அதற்குள்  கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. என் சிநேகிதி வந்துவிட்டாள். என் முகத்தைப் பார்த்து “அழுதாயா?”  என்று கேட்டுவிட்டாள். எனக்கு மறைக்க இஷ்டமில்லை. நடந்த எல்லாவற்றையும் விவரித்துச் சொன்னேன். அவளுக்கு ஒரே ஆச்சரியம்.
 
அன்று மாலை, எங்கள் கல்லூரி விடுதியில் நடந்த ஜெபக்கூட்டத்திற்கு சென்றேன். சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தேன். இரவு படுக்கைக்குச் செல்லும்போது தேவன் எனக்கு நூறு மதிப்பெண்கள் போட்டதுபோல ஓர் எண்ணம். அன்றிலிருந்து என் வாழ்க்கைப் பாதை மாறிற்று. என் வகுப்பு மாணவிகள் பலரிடத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பை புரிந்துகொள்ளும் அளவில் பேச ஆரம்பித்தேன். பலர் இயேசுவின் அன்பில் வர ஆரம்பித்தார்கள். நான் ஒரு மிஷனரி என்பதை தேவன் செயல்படுத்த்த ஆரம்பித்துவிட்டார்.
 
கல்லூரி படிப்பு முடித்து, B.Ed கல்லுரியில் சேர்ந்தேன். அங்கும் என்னை தேவன் பயன்படுத்தினார். B.Ed படிப்பு முடிந்தவுடன் என் தகப்பனார் வேலை செய்யும் பள்ளியில், அதுவும் ஆண், பெண் படிக்கும் பள்ளி.; பெயர் பெற்ற பள்ளி; அதில் வேலை கிடைத்தது.


பின் எனக்கு திருமணம் ஆயிற்று. என் கணவர் ஓர் Engineer. தேவனுக்கு பயப்படுபவர். கல்லூரி மாணவர் மத்தியில் ஊழியம் செய்யும் ஓர் இயக்கத்தில் தொடர்பு உடையவர். திருமணமான உடன், அவர் செய்கிற ஊழியத்தில் எனக்கும் ஓர் பங்கு கிடைத்தது. இந்த நாட்களில் பரோடாவில் பணியை விட்டு மற்றொரு Township க்கு கடந்து வந்தோம். அங்கும் எனக்கு ஓர் நல்ல பள்ளியில் வேலை கிடைத்தது. இப்போது எனக்கு 3 பிள்ளைகள். இதற்கிடையில் என் கணவர் அந்தக் கல்லூரி மாணவ இயக்கத்தில் ஓர் மிஷனரியாக இணைந்து கொண்டார்.  ஓர் நாள், என் மூன்றாவது மகன் திடீரென்று வியாதிப்பட்டான். Hospital  லில் சேர்த்தேன். சேர்த்து அரைமணி நேரத்தில் மருத்துவர்கள் குளுக்கோஸ் மற்றும் மருந்து ஏற்றினார்கள். என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அவ்வேளையில் தானே, தேவன் என் ஊழிய அழைப்பை ஞாபகப்படுத்தினார். உடனடியாக முழங்கால் படியிட்டேன். என்னை முழுநேரப்பணிக்கு கண்ணீரோடு அர்ப்பணித்து ஜெபித்தேன்.
 
காலை 5 மணிக்கு எழுந்து, என் மகனை தொட்டுப்பார்த்தேன். அவனுக்கு இருந்த ஜுரம் போய்விட்டது. நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். அதிகாலை 6½  மணிக்கு நர்ஸ் வந்து என் மகனை சோதித்துப் பார்த்த பின், மகிழ்ச்சியோடு “உங்கள் மகன் பிழைத்துவிட்டான்” என்று சத்தமாய்ச் சொன்னார்கள். என் மகன் மெதுவாக கண்களைத் திறந்து “அம்மா” என்றான். “பசிக்கிறது” என்றான் எனக்கு ஒரே ஆச்சரியம். மகனுக்கு காபி வாங்கி, பிஸ்கட்டை காபியில் தொட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தபோது, என் கணவர்  உள்ளே நுழைந்தார். அவரைப் பார்த்தவுடன் என் மகனுக்கு ஒரே சிரிப்பு. என் கணவர்,  மகன் அருகில் வந்து உட்கார்ந்தார். அவருக்கு நடந்த எதுவும் தெரியாது. இரண்டு குழாய் பொருத்தப்பட்டிருந்ததும் அவன் இருந்த அறை I.C.U  என்று கண்டபோது “என்ன நடந்தது?”  ; என்று என்னிடத்தில் கேட்டார். எல்லாவற்றையும் விவரித்துச் சொன்னபோது அவர் கண்களில் கண்ணீர் ஓடியது. என் மகனை முத்தமிட்டார்.
 
நான் எடுத்த பொருத்தனையையும் பயத்தோடு என் கணவரிடம் சொல்லிவிட்டேன். அவரோ பேசாமல் இருந்தார். என் பொருத்தனையை ஆமோதித்ததுபோல லேசாகத் தலையாட்டினார்.
 
மூன்று தினத்தில் அந்த I.C.U -ல் இருந்து General Ward  க்கு கொண்டு வந்தார்கள். அடுத்த இரண்டு தினத்தில் “நன்றாக இருக்கிறான்” என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். மருத்துவர்கள் “ஒரு மணி நேரத்தில் உங்கள் மகன் மரித்துவிடுவான்..”  என்று கூறியிருந்ததை தேவன் மாற்றிவிட்டாரே என்று எண்ணி அடிக்கடி நன்றி செலுத்த ஆரம்பித்தோம்.
 
இந்நிகழ்ச்சிக்குப் பின் என் கணவருடன் நான் விடுமுறை நாட்களில் அதிக நேரம் ஊழியத்திற்குக் கொடுக்க ஆரம்பித்தேன். சில நாட்களில் தேவனுடைய அழைப்பிற்கு என்னை பூரணமாய் அர்ப்பணித்து என் ஆசிரியைப் பணியை ராஜினாமா செய்தேன். இன்று நானும் ஓர் மிஷனரி. என் கணவர், ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஊழியம் செய்யச் செல்லும்போது, நானும் பிள்ளைகளை எடுத்துக் கொண்டு குடும்பமாய் செல்கிறோம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் என்னையும், என் கணவரையும் தேவன் பயன்படுத்தி வருகிறார்.

நல்ல வருமானம் உள்ள அரசாங்க  வேலைகளை விட்டுவிட்டோமே என்ற இழப்பின் எண்ணம் எங்களுக்கு இதுவரைக்கும் வந்ததே இல்லை. தெய்வத்திற்கு பணி செய்வதுதான் பெரிய பாக்கியம் என்று கருதுகிறோம்.

வாலிபனே உனக்கு அழைப்பு உண்டா?  உன் அழைப்பை உறுதிப்படுத்து அவருடைய எதிர்பார்ப்பிற்குக் கீழ்படிந்து பார். நீ ஒரு ‘மோசேயாக,’ ‘யோசுவாவாக’, ‘எஸ்தராக’, தெபோராவாக’ பயன்படுத்தப்படுவாயே.  அழைப்பைப் பிடித்துக் கொள்.

"கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்"  ( ஆதியாகமம் 12:1,2)

 

- வாழ்த்தும் Aunty பாரதி அன்சன், பரோடா

 


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'