வேலைக்காரியின் உதவி
அன்பு ஒளி
What God has in Store for you
நானும் என் கணவரும் மருத்துவர்கள். ஒரிசா மாநில புவனேஸ்வர் பட்டணத்தில் என் கணவருக்கு அரசாங்க வேலை. எனக்கு சுமார் 150கி.மீ தொலைவில் உள்ள ஓர் சிறிய கிராமத்தில் மருத்துவர் வேலை. எங்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். நான் வேலைக்குச் செல்லும் நாட்களில், என் கணவர் பொறுப்பாகப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வார். நான் சனிக்கிழமை இரவு புறப்பட்டு வருவேன். ஞாயிறு வீட்டில் இருப்பேன். அவசரம் என்றால் ஒரு நாள் கூடுதலாக இருப்பேன். திங்கள்கிழமை காலையில் துரித இரயில் பிடித்து, சில மணி நேர      Permission  வாங்கி  மதியம் என் பணியில் போய்ச் சேர்வேன்.
 
என்னோடு கூட இருந்த மற்ற மருத்துவர்கள் எனக்கு அதிக உதவியாக இருந்தார்கள். இட மாறுதலுக்காக பல வேளைகளில் அரசாங்கத்திற்கு மனு செய்தேன். மாறுதலுக்கு வழியே இல்லை. என் “வேலையை விட்டுவிடவேண்டும்” என்று கூட யோசித்திருக்கிறேன்.
 
ஒரு தடவை, இடமாற்றத்திற்காக அரசாங்கத்திற்கு நான் அனுப்பியிருந்த மனுவை வைத்து என்னை அழைத்திருந்தார்கள். என் கஷ்டமான நிலையை அவர்களிடம் கண்ணீரோடு  சொன்னேன். அந்த மருத்துவ  அதிகாரி, எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ஓர் சிரிப்பு சிரித்தார், “மாறுதல் முடியவே முடியாது” என்று கண்டிப்பாச் சொல்லி என்னை  அனுப்பிவிட்டார்.
 
அன்று திங்கள் கிழமை. வேலை ஸ்தலத்திற்கு போக எனக்கு இஷ்டமில்லை. போனில் விடுமுறை சொல்லிவிட்டு எங்கள் வீட்டில் இருந்து விட்டேன். எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரிக்கு சுமார் 40 வயது இருக்கும். அவள் இயேசுகிறிஸ்துவை அதிகம் நேசிக்கிறவள். காலையில் வேலை செய்ய வந்தவள் என் முகத்தைப் பார்த்துவிட்டு “ஏன் அம்மா அழு மூஞ்சியாக இருக்கீறீர்கள்?” என்று கேட்டுவிட்டாள். அவள் எனக்கு ஒரு ஜெபக்கூட்டாளி மாத்திரமல்ல, சில வேளைகளில் அவள் வாயிலிருந்து வரும் நல்ல ஆலோசனைகள் வேத வசனத்திற்கு ஒத்தாக இருக்கும். எனவே உரிமையாக அப்படிக் கேட்டுவிட்டாள்.
 
‘ஒன்றுமில்லை” என்று என்  முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அடுத்த பக்கத்தில் வந்து ‘இல்லை அம்மா: நீங்கள் அழுதிருக்கிறீர்கள். என்ன விஷயம்?” என்று கேட்டாள். வேறு வழி இல்லை என்று எண்ணி நடந்த விஷயத்தை அவளிடம் சொல்லிவிட்டேன்.
 
‘வீட்டுப் பக்கத்தில் வேலை மாறுதல் கிடைக்க வேண்டும். அவ்வளவுதானே.. இதற்கு போய் இப்படி அழுது கொண்டிருக்கீர்களே.. நான் போகப் போகிறேன். அந்த அம்மா என்னை உங்களைப் போல அதிகம் நேசிப்பவர்கள்;:  நான் வீடு மாற்றித் தூரமாக வந்துவிட்டதால் மந்திரி வீட்டில் வேலை செய்ததை நிறுத்திவிட்டேன். இப்போது உங்களுக்காக அவரிடம் போகிறேன்.” என்று சொல்லி உடனே புறப்பட்டுவிட்டாள். நான் இதை விளையாட்டாக எண்ணிவிட்டேன். ஆனால் அவள் சொன்ன வார்த்தைகள் என்னை திடப்படுத்தியது.
 
சுமார் இரண்டு மணி நேரத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது ‘உடனே புறப்பட்டு வாருங்கள்” என்று என் வேலைக்காரி விபரங்களைச் சொன்னாள். என்னால் நம்ப முடியவில்லை. உடனே என் அறைக்குள் சென்று முழங்கால்படியிட்டு சில நிமிடங்கள் தேவனைத் துதித்து, ஜெபித்து, எழுந்து வந்தேன்.
 
சுமார் ஒரு மணி நேரத்தில் தலைமைச் செயலகத்தில் அந்த  குறிப்பிட்ட  மந்திரி  அலுவலகத்திற்கு முன் காத்திருந்தேன். அங்கு,  என்  வேலைக்காரியும் காத்திருந்தாள். ஐந்து நிமிடத்தில், என் பெயரைச் சொல்லி, அந்த மந்திரியின் உதவியாளர் அழைத்தார். உள்ளே சென்ற நான் என் துறைக்குப் பொறுப்பாக இருக்கும் அந்த மந்திரியை இரு கரங்களைக் கூட்டி நமஸ்காரம் செய்தேன். அவர் லேசாகத் தலையை அசைத்தார். என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அது எனக்கு அதிக துக்கமாக இருந்தது. கடகட என்று என் கஷ்டங்களைச் சொல்லி என்னுடைய  மாறுதலுக்கான மனுவின் நகலை மந்திரியிடம் கொடுத்தேன். மூன்று நிமிடம் தலையையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மந்திரி ஒன்றும் பதில் சொல்லவில்லை. இதுவும் என்;னைத் துக்கப்படுத்திற்று.
 
உடனிருந்த  மந்திரியின் நேரடி உதவியாளர் ‘வெளியே காத்திருங்கள்” என்று சொன்னார். வெளியேற வந்த நான், என் வேலைக்காரியோடு துக்க முகத்தோடு காத்துக் கொண்டிருந்தேன். சுமார் 10 நிமிடங்களில் என்  கரத்தில் மூடிய கவர் ஒன்றை மந்திரியின்  உதவியாளர் கொடுத்தார். ‘நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்;: உங்கள் மனுவில் ஐயா Pink  மையில் கையெழுத்து போட்டிருக்கிறார். அதை நான்தான் கவரில் போட்டு ஒட்டினேன். உடனடியாக மருத்துவத்துறை இயக்குனரைப் போய் பாருங்கள்: எல்லாம் உடனடியாய் முடிந்துவிடும்” என்றார்.
 
எனக்குக் கோபமும் எரிச்சலும் கூடவே வந்தது. எந்த மனிதன் ‘மாறுதல் குறித்து யோசிக்ககூடாது” என்று சொன்னாரோ அதே மனிதனிடம், மறுபடியும் போனால், ‘இது எப்படியாகும்?” என்று யோசித்தேன்.
 
உடனடியாய்  எங்கள் மருத்துவத்துறையின் இயக்குனரை பார்க்கச் சென்றேன். அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் எங்களைக் காக்க  வைத்தார். மந்திரியின் கடிதத்தை உள்ளே கொடுத்துவிட்டபோது மாலை சுமார் மூன்று மணி இருக்கும். இதற்கிடையில் நான் சாப்பிடவில்லை.
 
‘ஐயா உங்களை அழைக்கிறார்”  என்று சுமார் 4 மணிக்கு அந்த பியூன் அழைத்தார். உள்ளே சென்ற நான் என் இயக்குனரை இரு கை கூப்பி  வணக்கம் செய்தேன். “உங்களை மந்திரியிடம் யார்  போகச் சொன்னது? உங்கள் வேலையைக் கூட நான் தொலைத்து விடுவேன்” என்று அதிக கோபப்பட்டார். அதன் பின் கடிதத்தைப் படித்தார். மந்திரி கையைழுத்து Pink மையில் இருந்ததை அவர் கண்டவுடன், என் இயக்குனர் முகத்தில் ஓர் அதிர்ச்சியைக் கண்டேன். கோபத் தொனியோடு என்னை ‘உட்காருங்கள்…  எப்படி மந்திரியைப் போய் பார்த்தீர்களா?” என்றார். எனக்கு சொல்ல இஷ்டமில்லை. ஆனாலும்  ‘என் வேலைக்காரியின் மூலம் “ என்றேன்.  அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றும் பதில்  சொல்ல அவருக்கு முடியவில்லை. ‘வெளியே காத்திருங்கள். ஆர்டர் தருகிறேன். எந்த இடத்திற்கு உங்களை மாற்ற வேண்டும்”  என்றார். நான், தைரியமாக என் சொந்த இடத்திற்கு  அருகே உள்ள  ஓர் ஊர் பெயரைச் சொன்னேன். உடனே இன்டர்காம் மூலம் தனது நேரடி முழு உதவியாளரை அழைத்தார். சில நிமிடங்கள் பேசினார். வெளியே இருந்த எனக்கு 10 நிமிடத்தில் ஆர்டர் கைக்கு வந்தது. எனக்கு சொல்லமுடியாத மகிழ்ச்சி. உள்ளே  சென்று “Thank you சார்” என்று சொல்லி வெளியே வந்த நான், என் வேலைக்காரியின் கைப்பிடித்து அவளுக்கும் நன்றி செலுத்தி வீடு திரும்பினோம். எத்தனை பெரிய உதவி. அதுவும் வேலைக்காரியின் மூலம். இது தேவன்  தந்த உதவியும் ஒத்தாசையுமே.
 
இப்போது என் கையில் தந்த ஆர்டரில் போடப்பட்டிருந்த இடம். என் வீட்டிலிருந்து 10 நிமிடத்தில் காரில் போய்விடும் தூரமே. இப்போது நான் வீட்டிலிருந்து வேலைக்கு தினமும் சென்று வருகிறேன். இந்த அற்புதத்தை நான் அடிக்கடி நான் எண்ணிப் பார்க்கிறேன்.
 
“யார் எனக்காக யுத்தம் பண்ணுவார்? “யார் எனக்காக பரிந்து பேசுவாhர்கள்?” என்ற கலக்கமா? தேவன் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நாசியில் சுவாசமுள்ள மனிதர்களை நம்பவேண்டாம். அதிலும், அவர்கள் காலில் விழுந்துவிடாதீர்கள். ஒரு வேலைக்காரியின் மூலம் தேவன் காரியங்களை செய்ய முடியுமானால் தேவன் யாரைக்கொண்டும் உங்கள் காரியத்தை முடித்துத் தருவார். அல்லேலுயா!
 
“கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்: நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத். 14:14)

இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'