தவளைக்கு மட்டுமா விடுதலை!
பொ.ம.ராசமணி
Salvation?
மண் சுமக்கப் போன செல்லாயி கூடையை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, கை நிறைய குளிர்ந்த தண்ணீரை அள்ளி, சப் சப்பென்று முகத்தில் அடித்துக் கழுவினாள். ஈரமுகத்தை முந்தானையை உதறியெடுத்துத் துடைத்துக்கொண்டாள்.
 
"ஏலே மருதை பரிட்சை நல்லா எழுதினியா?" என்று மகனிடம் அன்பாக விசாரித்தாள். பெற்றவன் இருந்திருந்தால் அவனே இதை விசாரித்திருப்பான் அவன்தான் போய்ச் சேர்ந்த இடத்திலே புல் முளைத்துவிட்டதே!
 
"நல்லா எழுதியிருக்கேன். அடுத்தவருசம் ஏழாம் வகுப்பிற்கு நீ போயிடுவடா என்று எங்க வாத்தியாரு கண்டிசனா சொல்லிட்டாரு."
 
"என் ராஜா, உம் படிப்புக்கென்ன குறை" என்று சிரித்தவாறே செல்லாயி பானையைத் திறந்தாள். மொர மொர வென்று புளித்த பழைய கஞ்சி, கையை விட்டுப் பார்த்தாள். இரண்டு குத்துத் தேறும்!
 
இனி அரிசி வாங்கிச் சோறு பொங்கி, குழம்ப வச்சி எப்போ சாப்பிடறது!
 
"மருதை, அம்மைக்கு கொஞ்சம் உடம்பு வலிக்குது. இருக்கிற பழையதைத் தின்னுட்டு நான் திண்ணையிலே சாய்ந்து கொஞ்சம் தூங்கறேன். நீ ரெட்டியார் டீக்கடைக்குப் போய் இரண்டு வடை வாங்கித் தின்னு" என்று அறுபது பைசாவை அவனிடம் கொடுத்தாள்.
 
"சரி, அம்மா! என்று மருதை ரெட்டியார் கடையை நோக்கிப் புறப்பட்டான்.
 
வழியில் ஏழெட்டுச் சிறுவர்கள்! ஒரு தவளையை சணல் கயிற்றில் கட்டி ஒருவன் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தான். சிலர் அதைச் கல்லால் எறிந்தனர். ஒருவன் ஒரு குச்சியால் அதன் தலையில் குத்தினான்.
 
தவளை துடிப்பதைக் கண்டு மருதை மிகவும் வருந்தினான். தவளையைக் கட்டி கையில் வைத்திருந்த கருப்பனைப் பார்த்து
 
"கருப்பா, பாவம், தவளையை விட்டு விடு" என்றான்.
 
"போடா நீ வச்ச ஆளா?"
 
"அறுபது பைசா தருகிறேன். தவளையை ஏங்கிட்ட தந்துவிடுவாயா?"
 
"அவ்வளவுதான் தருவியா?"
 
"எங்கிட்ட அவ்வளவுதானே இருக்கு!"
 
"தரித்திரம், தந்து தொலை. இந்தா, தவளையைப் பிடி"
 
கருப்பன் மகா முரடன். அறுபது காசை எடுத்துக்கொண்டு ரெட்டியார் டீக்கடைக்கு ஓடினான். கமகம வென்று மசாலா வடை வாசனை மூக்கைத் துளைத்தது. இரண்டு மசாலா வடை வாங்கினான். சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொடிப்பயல்கள் தங்களுக்குப் பங்குவேண்டுமென்று கையை நீட்டினர்.
 
"நான் பிடிச்ச தவளை அதை விற்ற காசு என் காசு. எந்த மடப்பயலுக்கும் நான் பங்கு தரவேண்டிய அவசியமில்லை" என்று ஓர் அதட்டுப் போட்டான்.
 
சிறுவர் கும்பல் கலைந்தது. கருப்பன் வயிற்றுக்குள் இரண்டு வடைகள் போயின.
 
மருதை தவளையை அன்புடன் தடவிக் கொடுத்தான். கயிற்றை அவிழ்த்தான். பக்கத்திலிருந்த கிணற்றுக்குள் போட்டான். அது அழகாக நீந்திச் செல்வதைப் பார்த்து மனம் பூரித்தான். பசி கொஞ்சம் குறைந்தது போலத் தெரிந்தது. பசித்தாலுந்தான் கையில் காசு இல்லையே!
 
மெதுவாக வீட்டிற்சுத் திரும்பிக் கொண்டிருந்தான் மருதை. கருப்பன் குடங்குடமாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டான். ஆசுபத்திரிக்கு கருப்பனும் வேறு சிலரும் எடுத்துச் செல்லப்பட்டனர். பரிசோதனை நடந்தது. வடை சுட்ட எண்ணெய் கலப்பட எண்ணெய்யாம்! உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று கூடப் பேசிக்கொண்டனர். டாக்டர்கள் போராடிக் கொண்டிருந்தனர்.
 
மருதையின் தாய் மகனுக்கு என்ன ஆயிற்றோ என்று வந்தாள். அவள்தானே மகனுக்கு வடைவாங்க அறுபது பைசா கொடுத்தனுப்பியவள்.
 
மருதைக்கு எதுவுமில்லை. நடந்ததை அறிந்த தாய் செல்லாயி மருதையைக் கட்டி அணைத்துக்கொண்டாள். கண்ணோரத்தில் நீர்த்துளிகள்.