மூன்று பிள்ளைகள்!?
அன்பு ஒளி
Raising Children : Short Story

மங்களுருக்கு அருகில் உள்ள, பெரிய கம்பெனி ஒன்றில் எஞ்சினியராகச் சேர்ந்தேன். தேவன் என்னை சிறுவர் ஊழியத்தில் பயிற்சி தந்து, பாரப்படுத்தி, பயன்படுத்தி வந்தார். வேலைப் பளுவின் மத்தியிலும், பல இடங்களுக்கு அலைந்து, சிறுவர் ஊழியத்தை செய்து வந்தேன். பலரை சிறுவர் ஊழியத்திற்கு பயிற்றுவித்து, என்னைப் போலவே ஊழியம் செய்ய உற்சாகப்படுத்தினேன்.
 
சில ஆண்டுகளில், முழு நேரப்பணிக்கு என் தேவன் என்னை அழைத்ததை உறுதி செய்து கொண்டேன். என் மனைவியும் இயேசு கிறிஸ்துவை நேசிப்பவர்கள். ஆகவே, தேவனின் இந்த உன்னத அழைப்பை ஏற்றோம். தேவன் எங்களை குஜராத் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றார். இன்று, சுமார் 20 ஆண்டுகளில் எங்கள் ஊழியம் குஜராத்தின் பல மாவட்டங்கிளல் பரவி, ஆயிரங்களை இயேசுவண்டை வழி நடத்தி வந்திருக்கிறது.
 
ஒருமுறை, ஆஸ்திரேலியா பட்டணத்திற்குப் பிரசங்கத்திற்காகச் செல்லும் வாய்ப்பை தேவன் தந்தார். என் மனைவியுடன் அங்கு மூன்று நாள் கூட்டத்திற்குச் சென்றேன். எனக்கு அதிக ஆங்கிலப்புலமை கிடையாது. ஆகவே, தமிழ் தெரிந்த ஒரு நண்பரை எங்களுக்கு அறிமுகம் செய்தனர். நான் தமிழில் பேசுவதை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அநேக உள்ளங்கள் தேவ வார்த்தையினால் தொடப்பட்டது.
 
மூன்றாம் நாள் செய்தியின் போது. பம்பாய் பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று என் ஞாபகத்திற்கு வந்தது... அதை, அச்செய்தி நேரத்தில் விவரித்தேன்: "பம்பாய் பட்டணத்தின் சபை ஒன்றில் மூன்று நாள் கூட்டங்கள் நடத்தினோம். எங்கள் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு என்று சொல்லி ஒரு தாயார் மூன்று பெரிய அட்டைப்பெட்டிகளை சுமந்து கொண்டு வந்தார்கள்.
 
வந்த தாயாரைப் பார்த்தால், பரிதாபமாய் இருந்தது. "பெயர் என்ன?" என்று கேட்டபோது "கண்மணி" என்றார்கள். "கணவர் பெயர் என்ன?" என்று கேட்டோம். கண் கலங்கினார்கள். அந்தத் தாயார். "அவர் இறந்து 12 ஆண்டுகள் ஆகிறது... திருமண வயதை எட்டியுள்ள மூன்று பிள்ளைகள்.." என்று சொல்லி அழுதார்கள்.
 
"அட்டைப் பெட்டியில் என்ன இருக்கிறது?" "60 புதிய ரெடிமேட் சட்டைகள். உங்கள் ஊழியத்தில் உள்ள மிஷனரிகளுக்கு... கிறிஸ்துமஸ் பரிசு".. என்றார்கள்.
 
"அம்மா உங்களுக்கு என்ன வேலை" என்று கேட்டேன். என் முகத்தை அந்தத் தாயார் தைரியமாகப் பார்த்தார்கள்.
 
"தினமும் நான் பம்பாய் நகரத்தில் பழைய பேப்பர் பொறுக்கி விற்று, ஒரு நாளைக்கு ரூபாய் 200 முதல் 250 சம்பாதிக்கிறேன்" என்றார்கள். என் கண்கள் கலங்கிற்று.
 
என் வாயில் வார்த்தை வரவில்லை...
 
"தெருவில் பேப்பர் பொறுக்கி, 60 புதிய சட்டைகள் கொண்டு வந்தது தப்பு... இதை தயவு செய்து வாங்கிய கடையில் திரும்பக் கொடுத்து பிள்ளைகளின் திருமண காரியத்திற்குச் சேமித்து வையுங்கள்? நீங்கள் செய்தது முட்டாள் தனம்" என்று கோபத்துடன் சொன்னேன்.
 
அந்த அம்மா மறுபடியும் என் முகத்தைப் பார்த்து, "ஐயா! நீங்கள் தான் நேற்று பிரசங்கத்தில் வறுமையிலும் தேவனுக்குக் கொடுக்கலாம் என்றீர்கள். ஆவவே சேர்த்து வைத்திருந்த பணத்தை, தேவனுடைய மிஷனரிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனவே இந்த 60 புதிய சட்டைகளை வாங்கி வந்திருக்கிறேன். நீங்கள் வேண்டாம் என்று சொல்லக் கூடாது" நா தழுதழுக்க சொல்லி முடித்தார்கள்.
 
அப்படியே முழங்கால் போட்டோம். "தேவனே இந்தத் தாயாருக்கு நீர் எப்படி பதில் செய்ய போகிறீரோ எங்களுக்குத் தெரியாது, ஆனால் நிச்சயம் செய்வீர்" என்று கதறி ஜெபித்தேன்.
 
பெட்டிகளைக் கொண்டுவந்து அருகில் வைத்தார்கள். "நன்றி அம்மா! அம்மா! நன்றி!" என்று சொல்லி, பெட்டியின் மேல் கை வைத்து ஜெபித்தேன். "வேண்டாம்" என்று சொன்னதற்கு, என் உள்ளத்தில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல உணர்ந்தேன்.
 
தூக்கத்தை மறந்து அந்தத் தாயாரின் தலைமேல் கை வைத்து "ஆயிரம் மடங்கு திரும்பத்தாரும்: இப்படிப்பட்ட தியாகத்தை என்றுமே நான் பார்த்ததில்லையே  ஆண்டவரே! இந்திய தேசத்தை சந்திப்பதற்கு இந்த அம்மாவைப் போல பலர பயன்படுத்தும்" என்று சொல்லி ஜெபித்து ஆசீர்வதித்தேன். ஆஸ்திரேலியா சபையின் செய்திக்கு நடுவில் அந்த நிகழ்ச்சியை ஆண்டவர் நினைவு படுத்தினார்.
 
"உங்கள் தேசத்திற்கு நீங்கள் பொறுப்பாளிகள்... எங்கள் இந்திய தேசத்திற்கு நாங்கள் பொறுப்பாளிகள்" என்று பாம்பே பட்டணத்தில் பேப்பர் பொறுக்கி விற்று, அதில் 60 சட்டைகள் வாங்கிக் கொடுத்த அந்தத் தாயாரின் தியாகத்தை நான் சொன்ன போது அநேகர் கண்களில் கண்ணீரைக் கண்டேன்.
 
செய்தி வேளை முடிந்ததும், பலர் ஊழியத்திகென்று தங்களை அர்ப்பணித்தார்கள். எனக்கு மொழி பெயர்த்தவர் "அந்த பம்பாய் தாயாரின் முகவரியை எனக்குத் தாருங்கள் என்றார்... "நீங்கள் அந்த அம்மாவை குறித்து சொல்லும் போது ஆண்டவர் என் உள்ளத்தில்  அந்தத் தாயாரின் மூன்று பிள்ளைகளுக்கும் திருமணத்தை நானே நடத்தி வைக்க வேண்டும் என்ற பாரத்தைத் தந்தார். கண்டிப்பாக முகவரியைத் தாருங்கள்" என்றார். "சரி" என்று சொன்ன நான், அன்று இரவே தங்கியிருந்த இடத்தில் இருந்து பாம்பே பட்டணத்தின் அந்த சபைப் போதகருக்கு போன் பண்ணினேன். அந்த அம்மாவின் முகவரியை பெற்று அவரிடம் தந்தேன்.
 
ஆஸ்திரேலியா கூட்டம் மிக்க ஆசீர்வாதத்துடன் முடிந்தது. அங்கிருந்த அநேக விசுவாசிகளுக்கு மிஷனரி பாரத்தை தேவன் தந்தார்.

மூன்று மாதத்திற்குப் பின், ஒருநாள் பாம்பே பட்டணத்திலிருந்து என் வீட்டிற்கு ஒருபோன் கால் வந்தது. பேசுகிறவர் பெயரைக் கேட்டதும் எனக்கு ஒரே ஆச்சரியம்! காரணம், அவர் எனக்கு ஆஸ்திரேலியாவிலிருந்தா பேசுகிறீர்கள்?" என்றேன். "பாம்பேயிலிருந்து பேசுகிறேன்! நான் வந்து 15 நாட்கள் ஆகிறது. அந்த பேப்பர் பொறுக்கும் அம்மாவின் முதல் மகளுக்கு, சுமார் இரண்டு லட்சம் செலவில் தேவனை நேசிக்கும் ஒரு மணமகனைக் கண்டுபிடித்து, திருமணத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்று, திருமணத்தை முடித்துவிட்டேன். நாளை ஆஸ்திரேலியா செல்கிறேன்" என்றார். அந்த போனில் நான் "அல்லேலூயா! ஆமென்!!" என்றேன்.
 
அடுத்த ஆறுமாதத்தில், இதேபோல் "இரண்டாவது மகளின் திருமணத்தை முடித்துவிட்டேன்" என்றார். பின்னும் ஒரு சில மாதங்களில், அந்த நண்பர் போன் செய்து "மூன்றாவது மகளின் திருமணத்தையும் முடித்துவிட்டேன்". என்று சொன்னபோது என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடிற்று.
 
வறுமையிலும் 60 புதிய சட்டைகளை மிஷனரிகளுக்கென்று அளித்தது. எத்தனை பெரிய கிருபை! பாம்பேயைத் தேடித் வந்து அந்தத் தாயாரின் 3 பிள்ளைகளுக்கும் பல லட்சம் செலவழித்து திருமணங்களை நடத்தித் தர, தேவன் அந்த ஆஸ்திரேலியா தமிழ் பெயர்ப்பாளரை பாரப்பபடுத்தினாரே! அது தேவனின் அற்புதம் அல்லவோ!
 
அன்புப் பெற்றோரே உங்கள் பிள்ளைகளின் திருமணக் காரியங்களுக்காக கலங்கிக் கொண்டிருக்கின்றீர்களே? அந்த விதவைத் தாயாரின் மூன்று மகள்கள் திருணமத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தேவன், உங்களுக்கும் உதவிடுவார்.
 
உங்களை ஆசீர்வதிப்பார் இந்த தேவன்!


"..சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான்: பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்" (2 கொரியத்தியர் 9-6)

- சுவிசேஷம் சொர்ணகுமார், குஜராத்.


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'