விசாரித்துப் பாருங்கள்
பொ.ம.ராசமணி
Be Strong
சின்னத்துரை நடையாய் நடந்து கற்பகம் மிட்டாய்க் கடையில் வேலை தேடிக் கொண்டான்.
 
அடேயப்பா, எவ்வளவு அலைச்சல்! காலையில் ஏழு மணிக்கு எழுந்திருந்து மூன்று கிலோ மீட்டர் நடந்து, எட்டு மணிக்கே கடை திறக்க இனி ஓட வேண்டாம்!
 
வீட்டை அடுத்த தெருவில்இருக்கும் மிட்டாய்க் கடைக்கு இனி எளிதில் போய் விடலாம்!
 
கற்பகம் மிட்டாய்க்கடை முதலாளி சின்னத்துரையிடம், "காலையிலேயே எட்டு மணிக்கெல்லாம் கடைக்கு வந்திடணும்: லேட் ஆகக்கூடாது!"
 
"பிந்தாமல் வந்திடுவேன்," என்றான் சின்னத்துரை.
 
லீவு எடுக்கணும்னா முதல் நாளே சொல்லிடனும். மாதம் ஒரு நாளைக்கு மேலே லீவு எடுக்கக்கூடாது!"
 
"சரி முதலாளி!"
 
"தினமும் குளிச்சிட்டு வரணும். சுத்தமாக உடை உடுத்தியிருக்கணும். வருகிற பார்ட்டியிடம் சிரித்த முகத்துடனே அன்பாகப் பேசணும்."
 
"சரி, முதலாளி!"
 
"யாராவது கடன் கேட்டால் என்னைக் கேட்காமல் கொடுக்கக்கூடாது! இந்த விஷயத்திலே முகத்தாட்சண்யம் பார்க்கக்கூடாது!" என்று கண்டிப்பாகக் கூறினார் முதலாளி.
 
"அதெல்லாம் கடன் கொடுக்க மாட்டேனுங்க" என்றான் சின்னத்துரை.
 
"நான் ரொம்பக் கண்டிப்பானவன் ஆனால் மிகவும் அன்பானவன். கடையிலேயெ வியாபாரத்தைக்  கொண்டிருக்கும் போது பூந்தி, மிட்டாய் இவற்றை எடுத்துச் திண்ணக்கூடாது. காரச்சேவை எடுத்து வாய்க்குள் போட்டு உதப்பக்கூடாது. இரவு பத்துமணிக்குக் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குப் போகும் நான் தினமும் உனக்கு ஒரு பொட்டலம் காரமும் ஒரு பொட்டலம் இனிப்பும் தருவேன். திரும்பவும் சொல்றேன். வியாபார நேரத்திலே கடையிலே உள்ள எதையும் எடுத்து வாயில் போட்டுத் தின்னக்கூடாது"
 
"முதலாளி, நான் முன்பு வேலை செய்த கடையில் என்னைப் பற்றி நல்லா விசாரித்துப் பாருங்கள். நான் அந்தக் கடையில் எதையும் எடுத்து வாயில் போட்டுச் சாப்பிட்டிருப்பேனா என்று அங்கு வேலை செய்யும் எவரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்க! ஏன் முன்பு வேலை பார்த்த முதலாளியிடமும் விசாரியுங்க! ஒரு துரும்பை எடுத்து தின்றிருப்பேனா?" என்று சின்னத்துரை பணிவுடன் சொன்னான்.
 
"உன்னைப் பார்த்தாலே, நீ நல்லவன் என்று தெரிகிறதால்தானே உன்னை வேலைக்குச் சேர்த்திருக்கிறேன். யாரார் எல்லாமோ வந்து வேலை கேட்டார்கள், மாட்டேனென்று உனக்கு ஏன் தந்தேன் என்றால் உன்னைப் பார்த்ததும் எனக்குப் பிடிச்சுப்போச்சு. அது சரி! நீ இதற்கு முன்பு எந்தக் கடையில் வேலை பார்த்தாய்?" என்று முதலாளி கேட்டதும், "இரும்புக்கடையில்" என்று சின்னத்துரை பதில் சொல்லவே முதலாளி அவனை ஆடாமல் அசையாமல் பார்த்தார்.