இது யார் செயல்?
அன்பு ஒளி
Family, Story of a Widow

அன்று 1999ம் வருடம், மார்ச் மாதம் 21ம் நாள், இரவு 7.30 மணி. ஆந்திராவில் கல்லூரி மாணவர் மத்தியில் தேவனுக்காகப் பணிபுரிந்த ஓர் இளம் தம்பதியர். கடந்த 8 ஆண்டுகளாகத் தேவனுக்கென்று பணிபுரியும்படி பீகார் மாநிலத்தில் இன்று உள்ளனர்.

இவர்களுக்கு பிரியா, ஷைனி என்ற இரு குழந்ததைகளுண்டு. அக்கால மிஷனரிகளின் வீடுகளின் மாடி வீட்டில் இவர்கள் வசிக்கினறனர். இவை உயரமானவை. மார்ச் 21ம் தேதி இரவு பெற்றோரும் சிலரும் ஊழிய சம்பந்தமான காரிங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். ஷைனி தன் தாயிடம் தனது வீட்டுப் பாடங்களைத் தான் முடித்து விட்டதால் அதே மாடியில் அடுத்த வீட்டில் போய் விளையாடும்படி அனுமதி கேட்டு அங்கு போனாள். இவள் வயது ஆறு. இரு வீடுகளும் தனித்தனி வீடுகள்.
 
இவள் போன அவ்வீட்டில் இவள் வயதுக்கும் குறைந்த இரு பிள்ளைகளுண்டு. இவள் அங்கு போனதும் அவ்வீட்டின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை இவளது பொறுப்பில் விட்டுவிட்டுக் கடைக்குச் சென்றனர். அவர்கள் அவ்வாறு போகையில் முன் கதவை வெளிப்புறமாகப் பூட்டிச் சாவியுடன் போய் விட்டனர்.
 
சிறிது நேரத்தில் அவ்வீட்டின் பிள்ளைகள், தங்களுக்கு அங்கு பயமாயிருப்பதாகவும், ஷைனியிடம் "உங்கள் வீட்டிற்குப் போவோம்" என்று அழுதனர். எனவே 6 வயது ஷைனி துணிச்சலுடன் வெளியேறத் தீர்மானித்தாள். முன் கதவு வெளிப்புறம் பூட்டியுள்ளதால் பின்புறக் கதவைத் திறந்து அம்மாடி வீட்டின் வெளியே வந்துள்ளனர். அங்கும் இவள் வீடுவர வழியில்லை. ஆனால் அங்கிருந்து மேலே மொட்டைமாடி செல்லப் படிக்கட்டுகளிருந்ததால் மூவரும் அங்கு சென்றனர். சுமார் 33 அடி உயரமது. இங்கிருந்து கீழே குதித்து அதன்பின் தன் வீடு செல்லலாமெனப் ஷைனி கூற, அப்பிள்ளைகளும்  அதற்குச் சம்மதித்தனர். மொட்டைமாடியின் கைப்பிடிச்சுவரும் சற்றுக் குறைவாயிருந்ததால், முதலில் ஷைனி குதித்து, இவர்களைக் குதிக்கச் சொன்னபின்பு, அவர்கள் ஒவ்வொரு வரும் குதிக்கும்படித் திட்டமிட்டனர். ஷைனி துணிச்சலுடன், மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவர் ஏறி மறுபக்கமுள்ள சன்ஷேடில் இறங்கி விட்டாள். அது மிகச் சிறியது. இவள் மீண்டும் ஏறி மொட்டை மாடி வர முடியாது.
 
கீழே ஒரே இருட்டு. குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஊழியரின் பிள்ளையான ஷைனி நன்கு ஜெபம் பண்ணவும், வேத வசனம் வாசிக்கவும் கற்றவள் மட்டுமல்ல மரணத்திற்குப் பின் நித்தியமான வாழ்க்கையுண்டு என்ற உண்மையையும் பெற்றோர் மூலம் அறிந்தவள். தான் குதிக்கப்போவது 33 அடி உயரம் என்பதை அறியாத சிறுமி அவள். அவள் அங்கு குதிக்கத் தயாராகும்போது...

இங்கு குண்டூரில் சுமார் 1200 மைல்களுக்கப்பால் வசிக்கும் அவளது அம்மாவின் பெற்றோர்கள். நாங்கள் வழக்கமாக இரவு 9 மணிக்குச் செய்யும் குடும்ப ஜெபத்தை அன்று வழக்கத்திற்கு மாறாக இரவு 7.30 மணிக்குச் செய்தார்கள்.
 
ஷைனி தாத்தா, பாட்டியிடம் மிகுந்த பாசம் கொண்டவள். விடுமுறைக்கு வரும்போது இரவு தாத்தியுடன் (பாட்டியம்மா) படுத்து வேதாகமக் கதைகள் கேட்பவள்.
 
அன்று ஜெபிக்க ஆரம்பித்ததுமே, இனம்புரியாத பயம், திகில் அவர்கள் மனதில் வர, கைகால்கள் நடுங்க... "இயேசுவே ஏதோ ஆபத்து வரப்போகிறது,... என்னால் ஜெபிக்க முடியவில்லை, பயமும் திகிலுமாயிருக்கிறதே. இயேசுவே!" என்று கலக்கத்துடன் கண்ணீர்விட்டு ஜெபம் செய்தார்கள். தேவன் அவர்களை பீஹாரிலிருக்கும் பிள்ளைகளுக்காக ஜெபிக்கச் செய்தார். கண்ணீருடன் "அங்கு பிள்ளைகள் 4 பேரையும் சங்.91& 121ன் படி, இரத்தக்கோட்டைக்குள் மறைத்துக் கொள்ளும். இயேசுவே யாருக்கும் ஒரு தீங்கும், உயிராபத்தும் வராதபடித் தயவாகக் காத்தருளும். 1200 மைல்களுக்கு அப்பால் உள்ள உம் ஊழியரான அவர்களைச் சமீபத்துக்கும், தூரத்திற்கும் தேவனான நீரே பாதுகாரும்" என்று அழுது ஜெபித்தார்கள்.

இரவு மணி 8.30 மணிக்கு ஜெபத்தை முடித்ததும் பதட்டத்துடன் பீஹாரிலிருந்து தொலைபேசியில் தொடர்பு  கொண்டனர். மூத்த பேத்திதான் போனை எடுத்தாள். "உங்க சின்னப் பேத்தி பண்ணிய சேட்டையால் அவளை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு அம்மா அப்பா போயுள்ளார்கள், வந்ததும் அம்மா உங்களிடம் பேசுவார்கள்" என்று கூறிப் போனை வைத்துவிட்டாள். திகிலுடன் தொடர்ந்து தனித்தனியாகத் தேவனை நோக்கி ஜெபித்தோம். இரவு மணி 11.00. தொலைபேசி மூலம் பேசிய என் மகள் "என் பிள்ளை செத்துப் போயிருந்தான் நான் என்னம்மா செய்வேன்?" என்று ஏங்கி ஏங்கி போனில் அழுதாள். பின் அழுகையை நிறுத்தி நடந்ததை, என் மகள் கூறினாள். "குதிக்கத் தயரான ஷைனி காலில் நன்கு கனத்த Shoe போட்டிருந்தாள். கீழே குதித்த பின்பு தான், தான் பாதாளம் போன்ற தூரம் நோக்கிப் போவதை அறிந்து, இனி... தான் பிழைக்க முடியாதென கண்டு அப்பிஞ்சு உள்ளம் பயந்து ... ஜீசஸ்... நான் உம்மிடம் வருகிறேன்" எனக் கத்தியதுடன் "தாத்தி... தாத்தி" என்றும் கத்திக் கீழே குத்தி வைத்தபடி வந்துள்ளாள். இதுவும் தேவன் செய்த மிகப்பெரிய அற்புதம்தான். மல்லாக்காகவோ அல்லது குப்புறவோ, பக்கவாட்டில் விழுந்திருந்தால்.. அவள் சின்னாபின்னமாகச் சிதைந்து போயிருப்பாள்... அவள் குதித்த இடத்தில் ஒன்றரை அடி இடைவெளி. அதன் வலப்புறம் செங்கற்கள் குவிந்திருந்தன. இடப்புறம் பெரிய பூந்தொட்டிகள். அவள் குத்த வைத்திருந்த இடம் அந்த சின்ன இடைவெளி. இவள் குதித்ததால் ஏற்பட்ட சத்தம் இரு பேரூந்துகள் மோதியதுபோல கீழே வசிப்பவர்களுக்குக் கேட்டதாம். அவர்கள் ஏதோ விபத்து என்று எண்ணி ரோட்டிற்குப் போயும், அங்கு எந்த விபத்தும் நடக்காததால் வீடு திரும்பியதும்; அப்போ நாம் கேட்ட அச்சத்தம் எப்படி வந்தது? ஒருவேளை மாடி வீட்டிலிருந்து பூந்தொட்டி விழுந்திருக்குமோ என்று டார்ச் அடித்த போது, குத்த வைத்த நிலையில் நடுங்கியபடி ஷைனி "நான்தான் மாடியிலிந்து குதிச்சுட்டேன்" என்றாளாம். பதறிப்போன அவர்கள் இவளை ஓடிவந்து தூக்கி கைகால்களைத் தடவிவிட்டு எங்காவது காயம், முறிவு உள்ளதா எனப் பார்த்து ஒன்று கூட இல்லை என்று பெற்றோரிடம் கூட்டிப் போக நினைக்கையில், மாடியில் குதிக்கும்படி இருவர் நிற்பதை இவள் கூற, உடனே பெரியவர்கள் "நீங்கள் குதிக்காதீங்க, நாங்க மாடிக்கு வர்றோம்" என்று கூறினபோது கடைக்குப்போன பெற்றோர்கள் வரவே மக்கள் அவர்களைத் திட்ட, அவர்கள் ஓடிப்போய்த் தம் பிள்ளைகளைக் காப்பாற்றினர்".
 
தம் பிள்ளை குதித்ததைக் கேட்ட பெற்றோர் மிகவும் அழுதனர். தேவன் காப்பாற்றியதற்காக கோடானுகோடி நன்றி கூறி ஜெபித்தபின் மருத்துவரிடம் போயுள்ளனர். பெற்றோரைப் பார்த்தபின் ஷைனிக்குப் பயம் நீங்கி உற்சாகம் வந்தது. மருத்துவர் பெற்றோரிடம் "யார் குதித்தது? எங்கே காயம்?" எனக் கேட்டதும், சிறுமி "நான் தான் குதித்தது" என்றாளாம். பெற்றோர் நடந்த சம்பவத்தைக் கூறியதும் டாக்டர் அடைந்த ஆச்சரியம் அளவற்றதாம்.
 
இரவு அவள் தாய் தொலைபேசியில் பேசிய பின்பு ஷைனி போனில் "தாத்தி... நான் குதிக்கும் போது உங்களைச் சத்தமா கத்திக் கூப்பிட்டேனே கேட்டுச்சா" என்றாள். "ஆமா ராஜாத்தி.. நீ கூப்பிட்ட சத்தம் இங்க கேட்டதால்தான் நானும் தாத்தாவும் உனக்குக் காயம். ஆபத்து வராதபடி பாதுகாக்கும்படி அழுது ஜெபித்தோம்" என்றார்கள்.
 
தேவன் செய்த இச்சம்பவம், அப்பகுதியையே அசைத்தது. "அற்புதக் குழந்தை" என்று இவளை இன்றும் மக்கள் சொல்வதுண்டு.
 
"உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன்பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள். (சங்.91:11,12)
 
"நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்." (ஏரோ.23:23)
 
அன்பான பெற்றோரே! பாட்டித் தாத்தாவே! வாலிபரே!
 
உங்களுக்கும் இப்படி எப்போதாவது ஜெபிக்க வேண்டும் என்ற உள் உணர்வைத் தேவன் தந்தால், அதனை அசட்டை பண்ணாதிருங்கள்!
 
தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்டு, அற்புதங்களைச் செய்வார். ஜெபம் பண்ணுகிறத்றகு ஜாக்கிரதையாய் இருங்கள்.
    
திருமதி. புஷ்பாபிரேம்
     
குண்டூர்.


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'