உல்லாசப் பறவை
Husband and Love

சூரியன் மறைந்து கொண்டிருந்தான்... நட்சத்திரங்களும் வானத்தில் தோன்ற ஆரம்பித்தன. லதா வானத்தை நோக்கினாள். கருமேகங்கள் நிலவையும், நட்சத்திரங்களையும் மறைத்தன.
 
லதா வித்தியாசமானவள். தானே தன் வாழ்வை நடத்த வேண்டும் என்ற துடிப்போடு காணப்பட்டாள். அன்று விளையாடிவிட்டு அவள் வீட்டுக்கு வந்து சேரும் போது இருட்டிவிட்டது.
 
வீட்டுக்குள் நுழைந்த போது, "லதா! உனக்கு ஒரு குட் நியூஸ் என்னண்ணு "கெஸ் பண்ணு" என்றவாறே அவள் தங்கை மீரா வரவேற்றாள். தன் மகள் வந்து விட்டதை அறிந்த அம்மா வேகமாக ஓடி வந்து "லதா உனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. கர்த்தருக்கு நன்றி சொல் என்று கூறினாள்.
 
லதாவுக்குக் கோபம் வந்தது. "என்னம்மா நான் தேர்வு எழுதி பாஸ் பண்ணினேனா? அல்லது இந்த கடவுள் எழுதினாரா? இந்த வார்த்தைகளைக் கேட்ட தாயின் மனம் புண்பட்டது. அவள் அமைதியாக உள்ளே சென்றாள்.
 
லதாவின் கற்பனை சிறகடிக்க ஆரம்பித்தது. கல்லூரி விடுதியில், தான் எதையும் செய்யலாம். தானே தன் வாழ்க்கையை நடத்தலாம் என்றவாறு கனவு கண்டாள்.
 
விடுதிக்குச் செல்ல வேண்டிய நாள் வந்தது. லதாவின் அம்மா ஒரு வேதாகமத்தை அவளிடம் கொடுத்து, "இதைத் தினமும்படி லதா" என்று கூறினாள். வாங்கிப் பையில் போட்டுக் கொண்டாள் லதா.
 
அன்று மாலை விடுதியில் ..."ஹாய்! ஐ ஆம் லீலா. இது ரூம் நம்பர் 23 தானே" என்ற சத்தம் கேட்டுத் திரும்பினாள் லதா. "நீ என்னோட தான தங்கப் போகிறாயா" என்று கேட்டவாறே  கைகுலுக்கியவளைப் பார்த்தாள்.
 
"ஆமா! உன் பெயர் என்ன? என்று கேட்டாள் லீலா. "ஐ ஆம் லதா" என்று கூறி விட்டு இருவரும் மடமடவென நெடுங்காலத் தோழிகளைப் போலப் பேசத் தொடங்கினர். கல்லூரிக்கு வந்த முதல் நாளிலேயே ஒரு தோழி கிடைத்ததில் லதாவுக்கு மிக்க மகிழ்ச்சி.
 
அடுத்த நாள்... "உனக்கு டென்னிஸ் விளையாடத் தெரியுமா?" லீலா கேட்ட கேள்விக்கு "ஆம்" என்றவாறே தலையை அசைத்தாள் லதா. விளையாட்டு மைதானத்தில் அவர்கள் ஆடிய உற்சாகத்தைக் கண்ட "கோச்" அவர்களைப் பயிற்றுவிக்க விரும்பினார்.
 
நாட்கள் உருண்டன. லதாவும் லீலாவும் இப்போது டென்னிஸ் வீராங்கனைகள் பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்தன. "இது தான் வாழ்க்கை" என்ற இன்பத் திகைப்பில் நாட்களைபப் போக்கினர்.
 
இரண்டாம் ஆண்டு படிக்கும்போது கோவையில் நடக்கிவருந்த ஒரு டென்னிஸ் போட்டியில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டது. விளையாட்டில் வெற்றியும் பெற்றனர். அன்று மாலையை சந்தோஷமாக கழிக்க விரும்பி, ஒரு ஆட்டோவில் தியேட்டரை நோக்கிப் போய்க கொண்டிருக்கும்போது... ஒரு திருப்பத்தில் எதிரே வந்த லாரி ஆட்டோவில் மோதவே லதா தூக்கி எறியப்பட்டாள்.
  
லதா கண் விழித்துப் பார்த்தபோது வெள்ளை நிற உடைகளையே கண்டாள். அவள் அம்மாவும் தங்கையும் அருகே நிற்பதைக் கண்டாள். தான் மருத்துவமனையின் உள்ளே இருக்கிறோம் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டாள். லீலா? விபத்தில் பலத்த அடிப்பட்டு மரித்து விட்டாள் என்ற செய்தியை ஒரு நாள் தயங்கியவாறே கூறியபோது அவளது இதயமே வெடித்துவிடும்போல இருந்தது. விம்மி விம்மி அழுதாள். அன்று இரவு அவளுக்குத் தூக்கம் வரவில்லை. வலி ஒரு புறம். பயமும் கவலையும் மற்றொரு புறம். ஜன்னல் திரை விலகியபோது நிலவும் சில நட்சத்திரங்களும் அவளுக்குத் துணை நிற்பதைப் போன்று காணப்பட்டன..
 
அவளுடைய மனத்திரையில் கடந்த கால வாழ்க்கை திரைப்படமாக ஓட ஆரம்பித்தது. சிறுவயதிலிருந்தே அவள் பெற்ற வெற்றிகள், சாதனைகள் அனைத்தும் அவள் முன் வந்தன. கண்கள் கண்ணீரைக் கொட்டின. அவள் திறமை, இளமை, யாவும் முடிவுக்கு வந்து விட்டனவா? இதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் காயக்கட்டுகளோடு தன் கட்டிலில் துவண்டாள்.
 
ஒரு நொடிப் பொழுதில் உள்ளத்தின் மூளையில் ஒரு சிந்தனை. "நானும் லீலாவைப் போல விபத்தில் மரணம் அடைந்திருந்தால்..? நான் மட்டும் எப்படி, ஏன் உயிர்த்தப்பினேன்".
 
ஆழ்ந்த சிந்தனையோடு கண்களைத் திறந்தபோது, அவள் அம்மா நாற்காலியில் அமர்ந்து வேதத்தை வாசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலும் எப்படி நடக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தது மட்டுமன்றி, ஆறுதலையும் பெற வேதத்தையே நாடினார்கள்.
 
"அம்மா" மெதுவாக கூப்பிட்டாள் லதா. "அதைக் கொடுங்கள்" என்றவாறே வேதத்தை கையில் வாங்கிக் கொண்டு மெதுவாகப் புரட்டினாள். "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள்... " எனத் தொடங்கும் வசனம் கண்ணில் படவே நிதானமாக வாசித்தாள்.
 
உழன்று கொண்டிருந்த அவள் மனம் உயிர் பெறத் தொடங்கியது. மெதுவாகத் தன்னை விட்டுக் கொடுத்தாள். தன் சுய பலத்தை நம்பி நாட்களை வீணாக்கி வி;ட்டதை நினைத்து மனம் கலங்கினாள்.
 
காலையில் எழும் போது அவள் மனதில் உறுதி காணப்பட்டது. "கர்த்தாவே நீரே என்னைப் படைத்தீர் என்னை உமது கரத்தில் ஒப்படைக்கின்றேன். என்னைப் புதியவனாக மாற்றும்" என்று தன்னை விட்டுக் கொடுத்தாள்.
 
வெளியில் அழகிய பூச்செடிகளில் மலர்ந்திருந்த பூக்கள் அவளைப் பார்த்து மகிழ்ச்சியில் கண் சிமிட்டின. 
 - ஹெப்சிபா, திருச்சி.