பொய்
திருமதி ஜேசுபாதம்
Reaching out people

“அக்கா தக்காளி வேணுமா”

செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தேன்.
  
“அக்கா கிலோ 15 ரூபாய் ஒன்னேகால் கிலோ இருக்குது ஒரு கிலோ வெலையில போட்டுத் தர்ரேன்.” என்றாள்.  மூன்று நாட்களுக்கு முன் கிலோ இருபது ரூபாய் என்று வாங்கினோமே! ஒரு வேளை குறைந்திருக்கும்  என்று எண்ணி “சரி கொடு” என்றேன்.


கால் கிலோ ஒசியில் வாங்கின பெருமிதத்துடன் உள்ளே சென்று பணத்தை எடுத்து வந்து கொடுத்தேன். சிறிது நேரம் கழித்து வந்த என் வேலைக்காரம்மா,
 
“தக்காளி நல்லா கொறஞ்சிடுச்சில்லம்மா நானும் அரைக்கிலோ வாங்கி வச்சிட்டேன்” என்றாள். நான் ஒன்னேகால் கிலோவை ஒரு கிலோவுக்கு வாங்கியதைப் பெருமையுடன் கூறினேன்.
 
“என்னம்மா நேத்தே கிலோ எட்டு ரூபாவாயிடுச்சே! அது தெரியாம இப்படி ஏமாந்துடீங்களே! யாராவது கால் கிலோ சும்மா கொடுப்பாங்களா!” என்றாள். என் முட்டாள்தனத்தை எண்ணி நொந்துக் கொண்டேன்.

ஒரு நாள் என் சிநேகிதியைப் பார்க்கச் சென்றேன். வழியில் ரோடு ஓரத்தில் ஒரு பெண் அழுது கொண்டு உட்கார்ந்திருந்தாள். அருகில் வரும்போது தான் தெரிந்து அவள் எனக்கு அன்று தக்காளியைப் பொய் விலை சொல்லி விற்றவள் என்று.
 
“ஏன் அழற! நீதான அன்னிக்கு எட்டு ரூபாய் தக்காளியை பதினஞ்சி ரூபான்ன வித்துட்டு போனது” என்றேன்.
 
“அடப்போம்மா! நானே நொந்து போயிருக்கேன் எப்படியெல்லாம் பொய் சொல்லி சம்பாதிச்சு சீட்டு போட்டேன். எடுத்த சீட்டுப் பணத்த குடிச்சி தொலச்சிட்டு, கேட்டா என்ன அடிச்சி வெளியே அனுப்பிட்டாரு என் வீட்டுக்காரர்” என்றாள்.
 
“போலீசில் போய்ச் சொல்லுவேன்னு சொல்லிப்பாரு” என்றேன்.
 
“சொன்னேம்மா பணமெல்லாம் தொலஞ்சிடுச்சின்னு என்கிட்டயே பொய் சொல்றாறு”  என்று அழுதாள். சாப்பிடவில்லை என்றும், அம்மா வீட்டுக்கப் போகக் கூட காசில்லாமல் ஆக்கிவிட்டான் என்றும் சொல்லி அழுதாள். ஐம்பது ரூபாயை அவள் கையில் கொடுத்து, ஏன் பொய் சொல்லக்கூடாது என்று சொல்லி சில சத்தியங்களை அவளோடு பகிர்ந்து கொண்டேன்.

“நீங்க கிறிஸ்தவுங்களா! எனக்காக வேண்டிக்கோங்க, என்ன மன்னிச்சுடுங்க இனி பொய் சொல்ல மாட்டேன்” என்றாள்.

“பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.” (நீதி 12:22)


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.

Social Share