பல நாடுகளைச் சுற்றிப் பார்க்கச் சென்ற கிறிஸ்தவர் ஒருவருக்கு பரிசுத்தவான் ஒருவர் வாழும் இடத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. தான் சந்திக்கப் போகும் கர்த்தருடைய அடியவரைப் பற்றிப் பலவாறாகக் கற்பனை செய்து கொண்டு சென்ற கிறிஸ்தவருக்குப் பெரிய ஏமாற்றம்!
காரணம் அம்மனிதன் தங்கியிருந்த வீடு மிகவும் சிறியது. வீட்டில் ஆடம்பரப் பொருள் ஏதும் இல்லை! ஒரு மேஜை, நாற்காலி, படுக்கை, அலமாரியில் வேத புத்தகம், வேறு சில புத்தகங்கள் ஆகியவையே இருந்தன.
வந்தவர் ஆச்சரியத்துடன் “ஐயா! இவ்வளவுதான் உங்கள் உடமைகளா? என்றார்.
அதற்கு அவர், “ நீங்கள் உங்கள் கையில் சிறிய பெட்டிதானே வைத்திருக்கிறீர்கள்! இவ்வளவுதான் உடமைகளா? என்று திருப்பிக் கேட்டார்.
உடனே வந்தவர், “ஐயா, நான் ஒரு பிரயாணிதானே, என்னுடைய பிரயாண நாட்களுக்கு தேவையான பொருட்களை மாத்திரமே வைத்திருக்கிறேன்" என்றார்.
உடனே பரிசுத்தவானும்,"ஐயா, உங்களைப் போல நானும் ஒரு பிரயாணி தான். இவ்வுலகில் நானும் கொஞ்ச நாள் தான் இருக்கப் போகிறேன். அதற்கு தேவையான குறைந்த அளவு பொருட்களைத் தான் வைத்திருக்கிறேன். அதிகமாக பொருள் சேர்த்து, அவற்றைப் பாதுகாப்பதிலும், மனக்குழப்பத்திலும் என் நாட்கள் கழிப்பதைவிட குறைந்த அளவு பொருட்களுடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்" என்றார்.
பூமியிலே நான் பரதேசி சங். 119:19
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். I தீமோ. 6:7