என் வேலை
அன்பு ஒளி
Reaching out people

ஏ.எம்.ஐ.இ. படித்திருக்கிற எனக்கு வேலை கிடைக்கவில்லை. நான் ஊருக்கு வரும்போதெல்லாம் என் நண்பர்கள் என்னைக் கலாட்டா செய்வார்கள். வாலிப வயதில் கையில் பைபிள் வைத்திருக்கிறாயே. கோவிலைச் சுத்தம் செய்வதில் உதவி செய்கிறாயே. திருவிருந்துப் பாத்திரத்தைச் சுத்தம் செய்து கொடுக்கிறாயே உனக்கு ஏன் இன்னும் வேலை கிடைக்கவில்லை? என்று பேசும்போதெல்லாம் எனக்குள் வைராக்கியம் எழும்பும்.

இன்னும் சந்தோஷமாக என் பாஸ்டருக்கு சபையில் உதவி செய்ய ஆரம்பித்தேன்.  காரணம் என்னைத் தேவன் நிச்சயம் கனம் பண்ணுவார் என்பதை அறிந்திருந்தேன். ஒரு நாள் என் கிராமத்திலிருந்து திருவனந்தபுரம் போய் வர வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தெரிந்த அண்ணனைப் பார்க்க வேண்டும் என்று புறப்பட்டேன். அவர் ஏர் போர்ட்டில் உயர் பதவியிலிருப்பவர்.   காலை 8.00 மணிக்கே அவருடைய வீட்டிற்குப் போய் விட்டேன்.
 
கதவை திறந்த அவர் கேட்ட முதல் கேள்வி “உன்னை நான் தேடுகிறேன் என்று யார் சொன்னது?” எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன சொல்கிறீர்கள்” என்று திரும்பக் கேட்டேன். என் கரத்தைப் பிடித்து உள்ளே அழைத்துப்போய் என்னைக் கட்டிப்பிடித்தார்.
 
“பிலிப்போஸ், நேற்று காலையிலிருந்து உன்னை எப்படியாவது தொடர்பு கொள்ளவேண்டும் என்று உன் வீட்டுப் போன் நம்பரைத் தேடித் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. இன்று காலை என் வேத வாசிப்பை முடித்து ஜெபித்தபோது, முதல் ஜெபமே “பிலிப்போஸை நான் காணவேண்டுமே. ஆண்டவரே கூட்டிக் கொண்டு வாரும்” என்பதுதான். இதோ, தேவனே உன்னை கூட்டிக்கொண்டு வந்துள்ளார். அல்லேலூயா” என்றார்.
 
எனக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. ஆச்சரியத்துடன் அவருக்கு எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்தேன். அவரே தொடர்ந்து பேசினார். “பிலிப்போஸ், நேற்று எங்கள் அலுவலகத்திற்கு ஓர் உயர் அதிகாரி வந்தார். அவர்கள் ஹெலிகாப்டர் கம்பெனியில் உடனே வேலைக்குச் சேர ஏ.எம்.ஐ.இ. படித்த ஒரு திடகாத்திரமான உண்மையுள்ள, வாலிபர் தேவை என்றார். அவர் அதைச் சொன்னவுடன் உனது படிப்பு ஏ.எம்.ஐ.இ. என்று நான் அறிந்திருந்தால் என் தம்பி ஒருவர், நல்ல பையன், கடினமான உழைப்பாளி, உண்மையுள்ளவன், நாளை மதியத்திற்குள் கூட்டிக்கொண்டு வருகிறேன், வேறு யாரிடமும் இப்போது இதனைச் சொல்ல வேண்டாம்” என்றேன். அவரும் சரி என்றார்.

இத்தனை மணி நேரம் உன்னை கண்டு நான் பட்ட பாடு அப்பப்பா… தேவனே உன்னைக் கொண்டு வந்துவிட்டார். என்று சொல்லி முடித்தபோது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஓடிற்று. தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன். காரணம் தேவன் எனக்காக செயல்படுகிற பாக்கியத்தை உணர முடிந்ததால்.

காலை உணவு உட்கொண்டோம். அப்ளிகேஷன் ஒன்று பயோடேடாவுடன் தயாரித்தோம். உடனே என்னை ஏர்போர்ட் அழைத்துச் சென்றார். அந்தப் பொறுப்பாளரைச் சந்தித்தோம். என்னைக் குறித்து எல்லா விபரங்களையும் கேட்டறிந்தனர். அவருக்கு அதிக மகிழ்ச்சி. மறுபடியும் மறுபடியும் என் கையைக் குலுக்கி “யூ ஆர் செலெக்டெட்,  யூ ஆர் அப்பாயின்டெட்” என்று மூன்று தடவை சொல்லிவிட்டார்.

என் சம்பளம் இவ்வளவு என்று கூறினபோது என் கண்களில் மறுபடியும் கண்ணீர் வந்தது. நன்றி சொல்லிவிட்டு என் ஊர் திரும்பினேன். நடந்த நிகழ்ச்சி ஒன்றையும் என் பெற்றோர்களிடத்திலோ நண்பர்களிடத்திலோ கூறவில்லை.

மறுநாள் வழக்கம்போல காலை  4 மணிக்கு எழும்பினேன். அன்று வாசிக்கவேண்டிய வேதப்பகுதியை உணவு உட்கொள்வது போல ரசித்து ருசித்து வாசித்தேன். அதைத் தொடர்ந்து நெடு முழங்காலில் நின்று எப்போதும்போல் கண்ணீரோடு ஸ்தோத்தரித்து தேவனிடம் ஜெபித்தேன்.
 
அதிகாலமே என் பெற்றோரிடத்தில் விடைபெற்று ஏர்ப்போர்ட்டுக்கு 8.00 மணிக்குள் வந்து சேர்ந்துவிட்டேன். என்னுடைய எல்லா சான்றிதழ்களையும் பார்த்த அந்த ஹெலிகாப்டர் கம்பெனி மூத்த மேனேஜர் 10.00 மணிக்குள்ளாக என் கரங்களில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்தார்.
 
நடப்பது கனவா அல்லது நனவா என்று புரியவில்லை. மனுச்செய்யாமலே தேடிவந்த வேலை. பெரிய சம்பளம். நல்ல வசதிகள். அன்றே அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வாங்கி ஒரு நாள் வேலையைச் சந்தோஷமாய் முடித்துவிட்டு ஊர் திரும்பினேன். விலையுர்ந்த சாக்லேட்டுகளை அதிகம் வாங்கிக்கொண்டு, ஊருக்குள் நுழையும்போது இரவு மணி 8.00 இருக்கும். என் நண்பர்கள் கூட்டமாக ஒரு விளக்குக் கம்பத்தின் அருகில் உட்கார்ந்து கலாட்டா பண்ணிக்கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டவுடன் இன்னும் அதிக குஷி. “இதோ சின்ன பாஸ்டர் வருகிறார்” என்று கேலி பண்ணினார்கள். நான் சிரித்துக் கொண்டே ஒவ்வொருவருக்கும் சாக்லேட் கொடுக்க ஆரம்பித்தேன். “என்னடா விஷயம், சொல்லுடா பிலிப்” என்றார்கள் என் நண்பர்கள்.
 
எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தபின், கடைசியாகச் சொன்னேன். “எனக்குத் திருவனந்தபுரம் ஏர்போர்ட் ஹெலிகாப்டர் கம்பெனியில் இன்று வேலை கிடைத்தது. சம்பளம் ரூ.8000-“ என்று சொன்னேன். அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் மல்க “கடவுள் உன்னை ரிவார்டு பண்ணியிருக்கிறார்” என்று சொன்னார்கள். இந்த வார்த்தை அவர்கள் வாயிலிருந்து வரும் என்று நான் நினைக்கவேயில்லை.

அடுத்து என் பெற்றோரிடத்தில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் காட்டினேன். அது குடும்ப ஜெபநேரம். என் அப்பா, அம்மா முழங்காலில் நின்று “ஸ்தோத்திரம் ஆண்டவரே, ஸ்தோத்திரம் ஆண்டவரே” என்றனர்.
இன்று…
 
எனக்குத் திருமணமாகி 2 பிள்ளைகள். என் மனைவிக்கும் அரசாங்க வேலை. தேவன் எனக்குத் தந்திருக்கும் கிருபைகளைப் பயன்படுத்தி வாலிபர் கூட்டங்களில் என்னையும் என் மனைவியையும் அழகாகப் பயன்படுத்தி வருகிறார்.
 
நான் வேலை செய்யும் ஹெலிகாப்டர் கம்பெனியில் அந்த ஹெலிகாப்டரில் வி.வி.ஐ.பி களோடு பிரயாணம் செய்துள்ளேன். இது பலருக்குக் கிடைக்காத பாக்கியம்.
 
அன்று என்னைக் கேலி செய்த நண்பர்களில் பலர் எனக்குத் தேவன் எப்படி வேலை கொடுத்தார் என்பதைக் கண்களால் கண்டவுடன் தேவனைத் தேட ஆரம்பித்தனர். இன்று அவர்களில் பலர் என்னைப்போல தேவனால் பயன்படுத்தப் படுகின்றனர்.

வாலிப நண்பரே!

வேத புத்தகத்தின் தேவன் கனம்பண்ணும் தேவன்.
…’Rewarding God’….
வாலிபனாகிய யோசேப்பைக் கனம் பண்ணியவர்.
அந்நிய தேசத்தில் தானியேலையும் அவன் சிநேகிதரையும் கனம் பண்ணியவர்.
அநாதை எஸ்தரை ராணியாகக் கனம் பண்ணினவர்.
ஆடு மேய்த்த தாவீதை ராஜாவாகக் கனம் பண்ணினவர்.
தேவன் உன்னையும் கனம் பண்ண வேண்டுமே.
இன்றையிலிருந்து தேவனைக் கனம் பண்ணத் தீர்மானிப்பாயா? செயல்படுவாயா?
உன் அந்தரங்க ஜீவியத்தில நூற்றுக்கு நூறு கனம் பண்ணு.
எதிர் பாலரோடு உள்ள உறவுகளில் தூர நின்று பழகு.
உன் பணவிஷயத்தில் தேவனைக் கனம் பண்ணு.
வருமானம் இல்லாத நிலையிலும் உன் கரத்திலிருக்கும் சின்னத் தொகையில் 10ல் ஒன்று கொடுத்துப்பார்.
சோம்பேறியாய் இராதே.
வீட்டு வேலைகளை நீயே கேட்டுச் செய்.
வேலை செய்து கொண்டே மேற்படிப்புப் படித்துக் கொண்டே இரு.
வேதத்தை அடிக்கடி எடுத்து வாசித்துப் பார்.
முழங்காலில் நின்று தேவனோடு அடிக்கடி உறவாட நேரம் கண்டுபிடி.
கூட்டிக் குறைத்துப் பேசவே பேசாதே.
உன் சபையில் உன் போதகருக்கு உதவியாய் இரு.
ஊழியங்களில் உதவிடு.
உபவாசித்து ஜெபிப்பதையும் பழக்கமாக்கிக் கொள்.

இன்னும் என்னென்ன காரியங்களில் தேவனைக் கனம் பண்ண முடியுமோ கனம் பண்ணிப் பார். நிச்சயமாகவே தேவன் உன்னையும் கனம் பண்ணுவார்.


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'