காக்கும் தேவன்
அன்பு ஒளி
Reaching out people

திருவனந்தபுரம் பகுதியில் கம்ப்யூட்டர் எஞ்சினியராக வேலை செய்துகொண்டிருக்கும் எனக்கு மூன்று பிள்ளைகள். தேவனை நேசிக்கும் மனைவி. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்குள்ள சுண்டல் மற்றும் தின்பண்டங்கள் விற்கும் சிறுவர்களுக்கு எனக்குத் தெரிந்த எளிய முறையில் இயேசுக் கிறிஸ்துவைக் குறித்துச் சொல்லுவேன்.

ஒரு நாள் மாலை சுமார் 20 வயதுள்ள ஒரு வாலிபத் தம்பி அங்கு டீ விற்பனை செய்து கொண்டிருந்தான். அவனிடத்தில் தெய்வத்தைக் குறித்து பேச ஆரம்பித்தேன். “தெய்வம் பேச வேண்டும்.. தெய்வம் நமக்கு ஆலோசனை தரவேண்டும்.. தெய்வம் நம்மைக் காக்க வேண்டும்.. அவர் இயேசுவே! உனக்காகவும் எனக்காகவும் இந்த உலகத்தில் வந்தவர் அவரே நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். அவரை உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாய் என்றால் அவர் காப்பார், பேசுவார், ஆலோசனைத் தருவார்” என்று சொல்லிவிட்டு எனது வண்டியை ஓட்டிக் கொண்டு திரும்பினோம்.

அப்போது, எனக்கு ஓர் சின்ன எண்ணம் உண்டானது. “இந்த  இயேசுவை நாம் ஏற்றுக் கொண்டு சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிக்கடி வேத வசனங்கள் மூலம் என்னிடம் பேசுகின்ற அனுபவம் ஏற்பட்டது உண்டே. ஆண்டவர் இன்றும் என்னோடு பேச வேண்டும்!” என்ற எதிர்பார்ப்போடு அன்று படுக்கைக்குச் சென்றேன்.

இரவு திடீரென விழிப்பு வந்தது! அப்போது சுமார் காலை 2.30 மணி இருக்கும். தூக்கம் வரவில்லை! உடனே ஜெபிக்க வேண்டும் என்ற பாரமும், உந்துதலும் அதிகமாக ஏற்பட்டது. என் பிள்ளைகளுக்காக, எனக்காக என் மனைவிக்காக பாரத்தோடு ஜெபித்தேன். ஏதோ ஆபத்து இருக்கிறதைப் போல ஓர் எண்ணம் எனக்குள் எழுந்தது. “தேவனே எங்களைக் காக்க வேண்டும்!’ என்று தொடர்ந்து போராடி ஜெபித்தேன். என் பெற்றோர்களுக்காகவும்,  குடும்பத்தின் அங்கத்தினர்களுக்காவும் ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்து ஜெபித்தேன். சுமார் 2 மணி நேரம் போராடி ஜெபித்திருப்பேன். பின் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டேன். அதன்பின் அந்த எண்ணம் என் மனதை விட்டுப் போய்விட்டது. அந்நிகழ்ச்சி மறந்து விட்டது.

நாங்கள் தங்கியிருந்த வீடு மிகவும் சிறிய வீடு. அதில் ஒரு சமையல் அறை, மற்றும் ஒரு சிறிய டாய்லெட். மற்றொரு சிறிய படுக்கை அறை. 5 பேர் சரியாகப் படுக்கக்கூடியது  அந்த படுக்கை அறை. அன்று அதிகாலை திடீரென்று என்னுடைய தொடையில் ஏதோ சூடாகப் படுவதை உணர்ந்தேன். தூக்கக்கலக்கத்தில் என் மனைவியை பார்த்து “ஏதோ சுடுகிற பொருள் என் மேல் இருக்கிறது அதை எடுத்து விடு” என்று சொன்னேன். என் மனைவி விளக்கு போட்டு பார்த்தபோது மேலே சுற்றிக் கொண்டிருந்த ஃபேன் ( Fan )  என் மேல் விழுந்திருக்கிறதைக் கண்டு அலறிவிட்டார்கள்.

ஒன்றுமே ஓடவில்லை அவர்களுக்கு. ‘என் பிள்ளைகளுக்கு ஏதாவது அடிபட்டிருக்குமோ!’ என்று பார்த்தபோது அவர்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். என் மேல் ஃபேன் விழுந்ததும் எந்த காயமோ அடியோ படவில்லை@ ஆனால் சூடு மட்டும் எனக்குத் தெரிந்தது. உடனே அந்த ஃபேன் ஐ தூக்கி ஓர் மூலையில் வைத்துவிட்டு தேவன் எங்களைக் காத்ததற்காக இரண்டுபேரும் நன்றி சொல்லி ஜெபித்தோம்.

மறுநாள் அந்தஃபேன் ஐ ரிப்பேர் செய்ய கடைக்கு எடுத்துச் சென்றேன். “உள்ளே இருந்த காயில் ( Coil)  நொறுங்கி இருக்கிறது. ரிப்பேர் செலவு ரூபாய் 400/-- ஆகும்” என்று கடைக்காரர் சொன்னார்.

மேலே சுற்றிக் கொண்டிருந்த ஃபேன் கீழே விழுந்த வேகத்தில் அதன் உள்ளிருந்த காயில்  நொறுங்கி இருந்தது. எனக்கோ காயம் இல்லை. இந் நிகழ்ச்சி என்னை அதிகமாக தேவனிடத்தில் நெருங்க உதவி செய்தது. எங்களுக்கு வர இருந்த பெரிய ஆபத்திலிருந்து தேவன் எங்களைக் காத்தார். ஒரு வேளை, தேவ தூதன் கீழே விழுந்த ஃபேன் ஐ பிடித்து, என்மீது அடையாளத்திற்காக வைத்தாரோ?.- ஞாயிற்றுக்கிழமை எங்கள் சபையில் நடந்த நிகழ்ச்சியை சாட்சியாகச் சொன்னேன். போதகருக்குப் பதில் சொல்ல முடியவில்லை. “அல்லேலூயா ஆமென்” என்று சொன்னார். தேவன் உங்களை ஜெபிக்கச் சொல்லி முன் எச்சரிக்கை தரும்போது தைரியமாய் ஜெபியுங்கள். எதிர் சக்திகளை எதிர்த்து வசனங்களைப் பயன்படுத்தி ஜெபியுங்கள. உங்கள் ஜெபங்கள் பரலோக ஒத்தாசையைக் கொண்டு வரும்.

பெற்றோரே! உங்கள் பேரப் பிள்ளைகள், மருமக்கள், பிள்ளைகள் அத்தனை பேரையும் அடிக்கடி ஜெபத்தில் தாங்குங்கள். உங்கள் சந்ததிகளுக்கென்று தேவன் உங்களை சிறப்பாய் ஜெபிக்கச் சொல்லுங்கள். அவர்கள் தூரமாய் இருந்தாலும், சமீபமாய் இருந்தாலும் தேவ கரம் அவர்களைக் காக்கும்.
 
“இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை;”(சங்கீதம் 121:4)

(திரு. பெஞ்சமின் )


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'

Social Share