பிந்தின..மகிமை!
அன்பு ஒளி
Reaching out people

கல்கத்தா பட்டணத்தில் வாழும் நான்,  பல ஆண்டுகளுக்கு முன், மனைவியை இழந்தவன். குழந்தை கிடையாது. என் மனைவியை இழந்த பிறகு, பல ஆண்டுகள் தன்னந்தனியே வாழ்ந்து வந்தேன். என் நலம் கருதிய என் உறவினர்கள், இயேசுவை அறிந்த ஓர் பெண்ணைக் கண்டுபிடித்து எனக்கு மனைவியாக்கினார்கள். கல்லூரியில் படிக்கும்போதே, இயேசுவை நேசிக்க ஆரம்பித்த நான், அந்நாட்களிலிருந்து, நான் படித்த அத்தனை கல்லூரிகளிலும் அங்குள்ள ஜெபக் குழுவில் இணைந்து சனி, ஞாயிறு தினங்களில், சிறு சிறு ஊழியங்களில் ஈடுபட்டேன். மனைவியை இழந்த நிலையிலும், அவ்வூழியங்களை விட்டு விலகவில்லை.

நான் பல்கலைக்கழக ஊழியர் குடியிருப்பில் (Professors Quarters)  வசித்து வந்தேன். இப்பல்கலைக்கழகம், 6000 மாணவர்கள் படிக்கும் புகழ் பெற்ற ஓர் கல்வி ஸ்தாபனம். ஆங்கிலத்தில் அதிகப் புலமை பெற்றதினால், என் கல்லூரியில் கூடுதல் பணி அடிக்கடி எனக்குத் தந்தனர். என்னிடத்தில் எந்த உதவிக்கு மாணவர்கள் வந்தாலும், சிறப்பாய், கிராமப்புறத்திலிருந்து வந்த அவர்களுக்கு என் வீட்டில் தங்க இடமும், உணவும் கொடுத்து, அக்கல்லூரியில் நான் செய்ய வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து முடித்தே அனுப்புவேன்.

ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் என் வீட்டில் நடைபெறும் மாணவர் ஜெபக் கூட்டத்திற்கு சுமார் 50 மாணவ, மாணவிகள் வர ஆரம்பித்தனர். பல தேவனுடைய ஊழியர்களை அழைத்து அம் மாணவர்களுக்கு தேவனுடைய செய்தியை அளிக்க வாய்ப்பு ஏற்படுத்தி வந்தேன். சுமார் 1 1/2 மணி நேரம் கூட்டம்! கூட்டம் முடிந்து போகும் போது தேநீர், சிற்றுண்டிக்கு நாங்களே பொறுப்பு! என் மனைவி அதிக உற்சாகமாய் மகிழ்ச்சியாக இக்காரியங்களைச் செய்வார்கள். இப்பல்கலைக்கழகத்தில் பணி செய்கின்ற எனக்கு, ‘குழந்தை இல்லையே’ என்ற ஏக்கத்தை, சில ஆண்டுகளில் தேவன் நீக்கினார். இன்று என் வீட்டில் ஒரு குட்டி ‘சாமுவேல்’!
 
சாமுவேல் பிறந்த பிறகு, இன்னும் அதிக ஊழியம்! தேவனுக்குக் கொடுப்பதில் இன்னும் வைராக்கியம்! சில நேரங்களில், பல மாணவிகள் என் மனைவியைத் தேடி வந்து அதிக நேரம் பேசி, ஜெபித்து, உதவியும் பெற்றுச் செல்வார்கள். இவைகளைப் பார்த்த சிலர் மொட்டைக் கடிதங்களை எழுதினார்கள். சிலர் நேரடியாக பிராது பண்ணினார்கள். சிலர் என்னை அழைத்து, என் மீது குற்றமும் சாட்டினார்கள். இவை ஒன்றும் எங்களைப் பாதிக்கவில்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை, சனிக்கிழமைகளில், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறப்புக் கூட்டங்களையும் நடத்தினோம்.
 
எங்கள் குமாரன் சாமுவேல் வளர்ந்த போது எனக்குள்ளே மற்றொரு பெரிய ஏக்கம். “இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறும் எனக்கு ஓய்வூதியம் தவிர (pension)  வேறு ஒன்றும் கிடையாதே! நான் ஓய்வு பெறும் போது எனது மகன் சாமுவேலுக்கு பத்து வயது ஆகும். அவனை எப்படி படிக்க வைக்கப் போகிறேன்? எதிர்காலம் எப்படி இருக்கும்?” என்று கலங்கினேன்.

ஓய்வு பெறுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன், பி.ஹெச்.டி ( Ph.D) வாங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. என் மனைவியை ஜெபிக்கச் சொன்னேன் என் மனைவி அதிக உற்சாகப்படுத்தினார்கள். பல விசுவாச நண்பர்கள், “தேவன் வாய்க்கப் பண்ணுவார்!” என்று சொன்னார்கள். நானும் ஜெபிக்க ஆரம்பித்தேன். கூடுதல் நேரத்தைக் கண்டுபிடித்தேன். அதிக பொறுப்புகள் மத்தியிலும், பி.ஹெச்.டி ஆய்வுப்பணிகளை ஆரம்பித்தேன். எனக்குள்ளே புதிய தெம்பு! புதிய உற்சாகம்! வேதம் வாசிக்கவும் ஜெபிக்கவும் கூடுதல் நேரம் எடுக்க ஆரம்பித்தேன்! ஆண்டுகள் வேகமாகக் கடந்தன. அது ஒரு புதிய ஆண்டின் முதல் நாள்! அன்று நான் வாசித்த பகுதியில் ஒரு வசனம் என் மனதை அதிகம் தொட்;டது.

இந்த வேத வசனம் என் கண்களில் பட்ட நேரத்திலிருந்து என் மனதில் அவ்வசனம் ரீங்காரமிட ஆரம்பித்தது.

“முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும் இந்தப் பிந்திய ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (ஆகாய் 2:9)

அடுத்தநாள், இதனை வாய்விட்டுச் சொல்ல ஆரம்பித்தேன். அந்த ஆண்டு நான் ஓய்வு பெறவேண்டிய ஆண்டு! எதிர்நாட்களைக் குறித்த கேள்வி ஒரு பக்கம்! ஒய்வு பற்றிய பயம் மறுபக்கம்! என்னுடைய ஓய்வு பெறும் நாள் நெருங்கியது. ஓய்வு பெற இன்னும் சுமார்  48 மணிநேரம் மட்டுமே இருந்தது.

அன்று, என் கரங்களில் ஒரு பதிவுத் தபால் வந்தது. உடைத்துப்பார்த்தபோது, அந்த பதிவுத் தபால், நான் பி.ஹெச்.டி பட்டம் நிறைவு செய்ததை எனக்கு அறிவித்தது. ஓய்வு பெறும் 48 மணி நேரத்திற்கு முன்னதாக பி.ஹெச்.டி வாங்கியது ஓரே ஆச்சரியம்!

அன்று என் வீட்டில் ஓரே குதூகலம்! என் மகன் சாமுவேல் அன்று இரவு ஜெபித்ததை என்னால் மறக்கமுடியவில்லை “எங்க அப்பாவுக்கு ரிட்டயர்  ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பி.ஹெச்.டி கொடுத்தீங்க! தேங்க்யூ ஜீசஸ்!” என்று அந்த நாளில் ஆங்கிலத்தில் அவன் ஜெபித்ததை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை!.

அடுத்த, சிலமணி நேரத்தில், ஓர் தன்னாட்சி கல்லூரியிலிருந்து எனக்கு தொடர்ந்து வேலை செய்ய அழைப்பு வந்தது. அது ஓர் கிறிஸ்தவக்கல்லூரி. அதில் வேலை செய்பவர்களில் பலர் மிஷனரி பாரம் உள்ளவர்கள். உடனடியாக பல பொறுப்புகள் கொண்ட பெரிய பதவி ஒன்றை அக்கல்லூரியில் எனக்குக் கொடுத்தார்கள். என்னுடைய வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் (Appointment Order) என்னிடத்தில் வந்தபோது அதில் குறிப்பிட்டுள்ள சம்பளம் என்னை அதிகம் உலுக்கியது.


நான் ஓய்வுபெறுவதற்கு முன்வாங்கிய சம்பளத்தை விடக் கூடுதல் சம்பளம்! அத்துடன் அழகிய புது வீடு! பொறுப்புக்கள் பல!

தேவன் அந்த ஜனவரி முதலாம் தேதி கொடுத்த வார்த்தையை அப்படியே நிறைவேற்றியதைக் கண்டேன்! இன்னும் பல நன்மைகள் உண்டு என்றும் நம்புகிறேன்.

வயது கடந்ததினால், எதிர்காலத்தைக் குறித்து கலங்கி நிற்கும் நண்பரே! ஓய்வு பெறும் காலக் கட்டத்தில் இருக்கும் அன்பரே! உங்களுக்கும் பிந்தின ஆசிர்வாதம் உண்டே!. முதிர் வயது வரை இந்த தேவன் தாங்குவார்! சுமப்பார்! தப்புவிப்பார்!. முந்திய ரசத்தைக்காட்டிலும் பிந்தைய ரசம் அதிக ருசி உள்ளதாக இருக்குமே! தேவன் தங்களை இன்னும் ஆசிர்வாதமாய் நடத்துவாரே!


இதுவரை தாங்கள் அனுபவித்திராத பல அனுபவங்கள் இன்னும் உண்டே?

நீங்கள் இயேசுவை நேசிக்கிறவரா? அவருக்கு உங்கள் வேலையின் மத்தியிலும் பணி செய்கிற கிருபை உண்டா? சின்ன காரியத்தைக்கூட ஆண்டவரின் ஆலோசனையைக் கேட்டு செய்பவரா?

அப்படியானால் தேவன் உங்களை நிச்சயம் நடத்துவார்! கனப்படுத்துவார்! உங்கள் பிந்தின நாட்கள் நிறைவின் நாட்களாக, ருசியுள்ள நாட்களாக நிச்சயம் இருக்கும்! இனியும் ஏன் தயக்கம்? ஏன் கலக்கம்? கவலைப்படாதிருங்கள்!

ஒரு வேளை, நீங்கள் சாதாரண படிப்பு படித்தவர்களாக இருந்தாலும், சின்ன வேலை செய்பவராக இருந்தாலும் பரவாயில்லை! நம் தேவன் பட்சபாதமில்லாதவர்! உங்களையும் நடத்துவார்! நீங்கள் எங்கு சென்றாலும், தேவன் கூடவே வருவார்! தேவனுடைய ஆசீர்வாதம் இன்னும் நிரம்பி வழிந்தோடும்.

இந்த வசனத்தை உடனடியாக மனப்பாடம் செய்வீர்களா?

“முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும் இந்தப் பிந்திய ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (ஆகாய் 2:9)

(பேராசிரியர் நாஸ்கர், கொல்கொத்தா.)


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'

Social Share