ஆண்டவர் தீர்க்க தரிசன புத்தகம் ஏசயா 55ம் அதிகாரத்தில் இவ்வாறாக கூறுகின்றார்.
8. என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
9. பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
இயேசுவில் அன்பார்ந்தவர்களே, இந்த வசனங்களில் சொல்லப்படுவது போல நம் வழிகளுக்கும் தேவன் நம்மை குறித்து வைத்திருக்கிற வழிகளுக்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு. நம்மைக் குறித்து நாம் வைத்திருக்கும் நினைவுகளுக்கும், நம்மைக்குறித்து தேவன் வைத்திருக்கிற நினைவுகளையும் வேதகமத்தில் சில எடுத்துக் காட்டுகளைக் கொண்டு பார்ப்போம்.
1) முதலாவதாக நாம் தாவீதைக் குறித்துப் பார்க்கும் போது அவன் வனாந்திரத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். சங்கீதம் 40:17ல் நான் சிறுமையும் எளிமையுமானவன் என்று தாவீது தன்னைக்குறித்து நினைத்திருந்தான். ஆனால் தேவனோ அவனை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்க நினைவு கொண்டிருந்தார்.
2) இரண்டாவதக நாம் பார்க்க இருப்பது நியா 6:8 - 15. கிதியொன் "நான் எல்லாரிலும் சிறியவன்" என்று தன்னைக் குறித்து நினைவு கொண்டிருந்தான். ஆனால் தேவனோ கிதியோன் மூலமாக முந்நூறு வீரர்களைக் கொண்டு மீதியாளியரையும் அவனோடு சேர்ந்தவர்களையும் சிதறிடித்தார்.
3) மூன்றாவதாக புதிய ஏற்ப்பாட்டில் லுக்கா 23:39-43 நாம் வாசிக்கும் போது இயெசு இரண்டு கள்வர்கள் மத்தியில் சிலுவையில் அறையப்பட்டிருக்கிற காட்சியை பார்க்கிறோம்.ஒரு கள்வன் இயேசுவை இகழ்ந்து பேசினான். மற்றவனோ தான் தண்டிக்கபடுவது நியாயம் என்றும் தன்னைக் குறித்து நினைத்தது மட்டுமன்றி இயேசுவை மெய்யான தேவன் என்று ஏற்றுக்கொண்டு அவரிடத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தான். ""இன்றே நீ என்னுடன் பரதீசிருப்பாய்" ( லூக் 23 : 43) என்ற வசனத்தை வாசிக்கும் போது அவனைக்குறித்து தேவனுடைய நினைவை நாம் அறிந்திருக்கிறோம்.
இந்த நாளிலும் நம்மைக் குறித்து நாம் நினைத்திருக்கிற நம்முடைய நினைவுகளை விடுத்து நம்மைக் குறித்து தேவன் வைத்திருக்கிற நினைவுகளுக்கு நம்மை அர்ப்பணிப்போமாக. தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.