டெல்லி மாநகரில் வசித்த நாங்கள் புறநகர்ப் பகுதியில் ஓர் சொந்த வீடு வாங்கி, அப்புது வீட்டிற்குள் வந்தவுடன் ஓரே ஆரவாரம். மகிழ்ச்சி. ஒவ்வொரு காரியங்களாக ஒழுங்கு செய்ய ஆரம்பித்தோம். மிக கவனமாக, எல்லா சாவிகளையும் 3 சாவித்கொத்தில் போட்டிருந்தோம். ஓர்நாள் சாவிக்கொத்து ஒன்றைக் காணவில்லை. பல நாள் முயற்சித்தும் பலனில்லை.
அந்த சாவிக்கொத்தில், எங்கள் காரின் சாவியும் இருந்தது. சாவி தொலைந்த 4 வது நாள், எங்கள் டிரைவர் தவறுதலாக தன் கார் சாவியை உள்ளே வைத்துவிட்டு, கார் கதவை மூடிவிட்டார். அன்று நாங்;கள் திகைத்தே போய்விட்டடோம். எப்படியோ, காரின் பின் கதவைத் திறந்து வீடு வந்து சேர்ந்தோம்.
அன்று இரவு, நான் தூங்குவதற்குமுன், எனக்குள் ஓர் புதிய தெம்பும், புதிய தைரியமும் வந்தது. “5 நாட்களாக எப்படித் தேடியும்.. எல்லா பைகள், பெட்டிகளில் அலசி ஆராய்ந்து பார்த்தும்.. சாவிக்கொத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையே, இதற்காக ஏன் ஜெபிக்கக் கூடாது..” என்று எண்ணினேன். உடன்தானே, அன்று இரவு சாவிக்காக அதிகம் ஜெபிக்க ஆரம்பித்தேன். “இயேசுவே! உமக்கு மறைவிடம் ஒன்றும் கிடையாதே. எல்லாமே உமக்கு வெட்ட வெளிச்சமாயிற்றே! எங்கள் வீட்டு சாவிக் கொத்து எங்கேயோ மறைந்திருக்கிறது. ஆனால் உமக்கு; தெரியுமே. எங்கள் சாவிக் கொத்தை கண்டுபிடித்துத் தாரும். என் குறைவுகள், என் குற்றங்களை மன்னியும்” என்று ஜெபித்துவிட்டு படுக்கைக்குச் சென்றேன்.
மறுநாள் காலை 5 மணிக்கு வழக்கம்போல் எழுந்தவுடன், அதே ஜெபம்! சாவிக்கொத்து தொலைந்து அன்று 6 ஆம் நாள். காலையில் எழுந்தவுடன் என்றும்போல் வேதத்தை வாசித்தேன்.. குடும்ப ஜெபத்தை முடித்தோம்.. ‘ஆண்டவர் ஏதோ செய்யப்போகிறார்’ என்ற எதிர்பார்ப்பு என் உள்ளத்தில் எழுந்துகொண்டே இருந்தது.
‘என் கணவரின் Pant Pocket-களை தேட வேண்டும்’ என்ற எண்ணம் என் உள்ளத்தில் வந்துகொண்டேயிருந்தது. எனவே, என் கணவர், கடந்த சில நாட்களில் உபயோகித்த அத்தனை Pant இன் Pocket-களை எதிர்பார்ப்போடு நோட்டமிட ஆரம்பித்தேன். திடீரென்று என் கையில் சாவிக்கொத்து சிக்கியது.
6 நாட்களாக தேடி தேடி கண்டுபிடிக்க முடியாத சாவிக் கொத்தை அன்று கண்டு கொண்டது, எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியும் சந்தோஷமுமாயிருந்தது. சாவிக் கொத்தை எடுத்து என் கணவரிடம் கொடுத்தபோது என்;னைவிட அவருக்கு அதிக மகிழ்ச்சி. “உனக்கு அதிக ஞானம்! அதிக கிருபை!” என்று பாராட்டினார். மறைபொருளை வெளிப்படுத்தினவர் என் தேவனே! இந்த சாவிக்கொத்தைக் கண்டு பிடிக்க வழி நடத்தினாரே என்று அதிகம் அகமகிழ்ந்தோம்.
தொலைந்துபோன ஓர் சாவிகொத்தை கண்டுபிடித்துத் தருவதில் தேவனுக்கு இத்தனை அக்கறை இருக்குமேயென்றால், உங்களைக் குறித்தும் உங்கள் பிள்ளைகளைக் குறித்தும், அக்கறை இருக்காதோ?
அருமைத் தாயே! தங்கள் பிள்ளைகளின் காரியங்களில் ‘என்ன செய்ய?’ என்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறீர்களோ? இந்தத் தேவனிடத்தில் வந்து, அடிக்கடி முழங்காலிட்டு ஜெபித்துப் பாருங்களேன். ‘எதைச் செய்ய வேண்டும்?’ என்ற இரகசியங்களைச் சொல்லித் தருவாரே.
அருமைத் தகப்பனாரே! வேலை ஸ்தலத்தில் நெருக்கங்கள்.. பிள்ளைகளின் உயர் படிப்பில் திண்டாட்டம்.. வருங்கால எதிர்பார்ப்பில் குழப்பம்.. இத்தனையும் தங்களை நெருக்குகின்றதோ? இன்று தேவனுடைய பாதத்தில் அமர்ந்து இருக்கப் பாருங்கள். மனைவி பிள்ளைகளோடு ஜெப நேரத்தை ஆரம்பியுங்களேன். தனித்தும் ஜெபித்துப் பாருங்களேன். இந்த தேவன், இன்றைக்கும் ஆலோசனைக் கர்த்தர் தான். அவர் தருகிற சின்ன ஆலோசனை, பெரிய விளைவுகளை உண்டாக்குமே!
வாலிபத் தம்பியே! தங்கையே! உனக்கு இயேசுகிறிஸ்துவின் அன்பை அறிந்த அனுபவம் உண்டா? அப்படியென்றால், “வழி இதுவே” என்று தேவன் அடிக்கடி உன்னிடத்தில் சொல்வாரே. காலை வேளையில், கர்த்தருடைய வார்த்தையை வாசித்து தியானிக்காமல் எந்த வேலையையும் செய்யாதே. அனுதின ஆசீர்வாதத்திற்கு ஆண்டவரைச் சந்தித்து அதன்பின் மற்ற வேலைகளைச் செய்.
“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாயச் சாயும்போதும் : வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21)
Mrs. Dillls Rajan – டெல்லி