மனம் திறந்து
திருமதி ஹெலன் ஜேக்கப்
Reaching out people

 கேள்வி-பதில் பகுதி

கேள்வி

அன்புள்ள அக்காவிற்கு


எனக்கு வயது 38, என் கணவர் என்னை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் என்னுடைய உறவினர்கள் உனக்கு 2 பிள்ளைகள் இருக்கிறதே உனக்கு மறுமணம் எதற்கு என்கிறார்கள். குழப்பத்தில் உள்ளேன். இதற்கு உங்கள் ஆலோசனை என்ன?

- பெயர் சொல்ல விரும்பாத சகோதரி

 

பதில்

அன்புள்ள சகோதரிக்கு.

உங்கள் கணவர் உங்களை விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், நீங்கள் மறுமணம் செய்து கொள்ளலாமா என்று குழப்பத்துடன் கேட்ட கேள்வியை வைத்தே உங்கள் சூழ்நிலையைப் புரிந்து கொள்கிறேன். உங்களுடைய சூழ்நிலையில் அநேகம் பெண்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

குடும்பத் தலைவராகிய உங்கள் கணவன் இல்லாவிட்டால் கட்டாயம் நீங்கள் தனிமை உணர்வில் இருப்பீர்கள். ஆனால் முதலாவதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, நீங்கள் தனிமையானவர்கள் அல்ல. தாய் என்னை கைவிட்டாலும், தகப்பன் என்னை கைவிட்டாலும். தேவன் என்னை கை விடமாட்டார் (சங், 27:10) என்று வேதம் நமக்கு வாக்கு பண்ணி உள்ளது. அவர் பெயர் இம்மானுவேல் - இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம் (மத்தேயு 1:23), அவர் உங்களோடு கூடவே இருக்கிறார், திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் அவரே (சங், 11:14) உன் சிருஷ்டிகரே உன் நாயகர் (எசாயா 54:5-6) அவர் அன்பு ஒருக்காலும் மாறாது அவர் உங்களோடு இருந்து உங்களை வழி நடத்துவார்.

நீங்கள் உங்கள் மாமியார் அல்லது அம்மா குடும்பத்து ஆதரவுடன் இருப்பீர்கள் என்றால். தேவன் மீது அதிக விசுவாசத்தோடு, அவரோடு உள்ள உறவில் நீங்கள் உங்களை அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டால், பிள்ளைகளுக்காக வாழவேண்டும் என்ற அர்ப்பணிப்போடு இருந்தால், பவுல் 1 கொரிந்தியர் 7:8 –ல் விவாகமில்லாதவர்களையும் கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல் இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும் என்று சொல்வது போல நீங்கள் மறுமணம் செய்து கொள்ளாமல் இருக்கமுடியும்.
ஆனால். நீங்கள் மற்றவர்கள் ஆதரவு இல்லாமல் தனிமையாக வாழும்போது மறுமணம் செய்து கொள்வது நல்லது.
ஏனெனில்

1. 2 கொரி 7:9ல் பவுல். அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் (தன்னடக்கமில்லாதவர்கள் என்றால்) விவாகம் பண்ணக் கடவர்கள், வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம் என்றார்.

2. நம்முடைய கலாச்சாரத்தில் கணவன் இல்லாமல் வாழும் பெண்கள் வாழா வெட்டி என்ற பட்டப் பெயருடன் ஏளனமாகப் பேசுவார்கள்.

3. தனிமையாக ஒரு பெண் இருந்தால் அவருக்கு பாதுகாப்பில்லை.

4. அவளால் மற்றவர்களோடு சுதந்திரமாக பேசவோ, பழகவோ, முடியாது. ஏனெனில் எல்லோருமே அவளை சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள்.

5. கணவன் பிரிந்து போனதினால், அந்த பெண்ணுக்குரிய உணர்ச்சிகளும் அவளை விட்டு பிரிந்து போகாது. இதனால் ஆவிக்குரிய முதிர்ச்சி இல்லாத பெண்கள் தவறான உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

6. 1 தீமோத்தேயு 5:11-14ல் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக் கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம் பண்ண மனதாகி, முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே ஆக்கினைக்குட்படுவார்கள். அதுவுமல்லாமல் அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடு, வீடாய்த் திரியப் பழகுவார்கள். சோம்பலுள்ளவர்களாய் மாத்திரம் அல்ல, அலுப்புகிறவர்களாயும், தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயும் இருப்பார்கள். ஆகையால், இளவயதுள்ள விதவைகள், விவாகம் பண்ணவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன் என்கிறார்.

நம் கலாச்சாரத்தில் இளம் விதவைகளின் நிலையும், கைவிடப்பட்ட பெண்களின் நிலையும் ஒன்றே. ஆகவே விவாகம் பண்ணுவது நல்லது. இப்பினும் முக்கியமாக, இதில் தேவ சித்தம் அறிந்து, போதகர்கள், பெரியவர்கள், ஆலோசனையோடு ஆதரவோடு செயல்படும்போது உங்கள் மறுமணம் ஆசீர்வாதமாக இருக்கும். உங்களுக்காய் ஜெபிக்கிறோம். தேவ சித்தம் அறிந்து தீர்மானம் எடுங்கள்.


திருமதி ஹெலன் ஜேக்கப், தன் கணவருடன் இணைந்து குடும்பங்கள் மத்தியில் பல வருடங்களாக ஊழியம் செய்து வருபவர். 'மணக்கும் மணவாழ்வு' என்ற திருமண உறவைப்பற்றிய கருத்தரங்குகளை நடத்தி வரும் இவரை 91-979-089-5366 ( இந்தியா ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.