பொட்டலம்
Sis.ரூபி கனகராஜ்
Walking with God Article Image

பக்கத்து வீட்டுக் கடிகாரத்தில் மணி ஆறு முறை அடித்து ஓய்ந்தது. காய்ச்சலோடு படுத்திருந்த மேரி தன் மகளை எழுப்பினாள்.

“பிளஸ்ஸி சீக்கிரம் எழும்பி முகம், கை, கால் கழுவிவிட்டு நம்ம சர்ச்சுக்குப் போம்மா சாப்பாட்டு வேன் இந்நேரம் வந்திருக்கும்” என்றாள். பிளஸ்ஸியும் “சரிம்மா” என்று கூறிவிட்டு அவசரமாகப் புறப்பட்டு சர்ச்சை நோக்கி நடந்தாள், அவள் மனதில் நன்றி அலைகள் எழும்பின, “இயேசுவே இந்தப் பயங்கரமான பஞ்சகாலத்தில் இப்படி பக்கத்து ஊர் பண்ணையார் ஏழை மக்களுக்குத் தினமும் 2 பாக்கட் உணவு தரும்படி அவர் மனதை ஏவினதற்காக நன்றியப்பா” என்று உள்ளத்திற்குள் ஜெபித்துக் கொண்டே வந்து சேரும் போதே சாப்பாட்டு வேன் வந்து விட்டிருந்தது. மக்களும் தங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகளைக் காட்டி முண்டியடித்து உணவுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டிருந்தனர். பிளஸ்ஸியோ வழக்கம் போல் பொறுமையாகக் காத்திருந்து இரு பொட்டலங்களை வாங்கிச் சென்றாள்.
 
அவள் வாங்கிக் கொண்டு வெளியே வந்தபோது காம்பவுண்டு வாசலருகே படுத்த படுக்கையாய் வயிறு ஒட்டிய ஒரு தாத்தா பசியோடு “ பாப்பா, என்னால் நடக்க முடியவில்லை, பசி மயக்கமாயிருக்கிறது. எனக்கும் கொஞ்சம் சாப்பாடு உன் பொட்டலத்திலிருந்து தரமாட்டாயா?” என்று கண்ணீரோடு கெஞ்சினார் “இருப்பதே இரண்டு பொட்டலங்கள், அம்மாவுக்கும் எனக்கும் இரண்டு வேளைக்கு வேண்டும் என்ன செய்வேன்” என்று நினைத்த பிளஸ்ஸிக்கு நேற்று ஞாயிறு பள்ளியில் தான் படித்த நீதி மொழிகள் 19:17 ன் வசனம் ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் என்ற வசனம் ஞாபகத்திற்கு வந்தது, உடனே “இந்தாங்க தாத்தா” என்று ஒரு பொட்டலத்தைக் கொடுத்ததுமன்றி, அவர் வைத்திருந்த குவளையில் பக்கத்திலிருந்த குழாயிருந்து தண்ணீரும் நிரப்பிக் கொடுத்தாள்.
 
அன்று தற்செயலாய் உணவு கொடுப்பதை மேற்பார்வையிட வந்த பண்ணையார் பிளஸ்ஸி பொறுமையாக இருந்து பொட்டலத்தை ‘நன்றி’ தெரிவித்து வாங்கியதை கவனித்திருந்தார். அவர் கிளம்புவதற்காகக் காரில் காம்பவுண்டு வாசலருகே வந்த போது பிளஸ்ஸியின் இரக்க குணத்தைக் காரில் இருந்த படியே கவனித்தவர், அவளைக் கூப்பிட்டு காரில் ஏற்றிக் கொண்டு அவள் வீட்டுக்குப் போய், ஆதரவற்ற அவளது தாயாரையும் அவளையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன் பண்ணையாட்களோடு தங்கச் செய்து பிளஸ்ஸியின் படிப்பு மற்றும எதிர் கால அத்தனை உதவிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். தேவன் நம் நற்கிரியைகளை மறப்பதற்கு அநீதி உள்ளவரல்லவே!

“வசனத்தைக் கேட்பவர்களாக மட்டுமல்ல, அதன்படி செய்கிறவர்கனாகவும் இருங்கள்,”