பரிசுத்த வேதாகமத்தை பயன்படுத்துங்கள்
Walking with God Article Image

தண்ணீர் எங்கும் கிடைக்கிறது. அனுதினமும் அனைவருக்கும் அவசியமாக இருக்கிறது. தண்ணீரின் உபயோகத்தை நாம் யாவரும் அறிவோம் தண்ணீரைக் கழுவுவதற்கும்,குளிப்பதற்கும், குடிப்பதற்கும், சமைப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறோம், தண்ணீரை சரியான முறையில் நாம் பயன்படுத்தும் போதே தண்ணீரினால் மிகுந்த பயனைப் பெறமுடியும். பரிசுத்த வேதாகமத்தை தண்ணீரோடு ஒப்பிட்டு பல ஆவிக்குரிய உண்மைகளை விளக்கலாம்.
 
வேதாகமத்தை ஆவிக்குரிய வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் எப்படிப் பயன்படுத்துவது? என்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இந்த 5 முறைகளில் கற்றறிந்து, ஆவிக்குரிய முறையில் உட்கொண்ட சத்தியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் கற்றுத் தரவும் வேண்டும். தேவனுக்கு விருப்பமானபடி நாம் பரிசுத்தமாய் தேவ பக்தியாய் வேதவசனத்தின்படி வாழ வேண்டும். அதுவே மிகவும் முக்கியமானதாகும். தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழும் போது நாம் தொடர்ந்து ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறவர்களாக மாற முடியும்.

பரிசுத்த வேதாகமத்தை ஒவ்வொரு நாளும் வாசியுங்கள்!

பரிசுத்த வேதாகமத்தையல்லாமல், வேறுவிதமாக மனிதன் தேவனை அறிந்துகொள்ள  முடியாது என்பதாலும் வேதவசனத்தைக் கேள்விப்படுவதனால் மட்டுமே ஒருவனுடைய இருதயத்தில் விசுவாசம் உருவாக முடியும் என்பதாலும் உங்களுடைய அனுதின வாழ்க்கையில் பரிசுத்த வேதாகமமே முக்கியமானதாகவும். முதல் இடம் பெற்றதாகவும் இருக்க வேண்டும். உங்களுடைய விசுவாசம் வளர்ச்சி அடைவதற்கு அடிப்படையானதும் அவசியமானதும் வேதவசனமே, அனுதினமும் ஆகாரம் உட்கொள்வது எவ்வளவு அவசியமோ அதைப் போல ஆன்மீக வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒவ்வொருநாளும் வேதப்புத்தகத்தை வாசிப்பதும் தியானிப்பதும் மிகவும் அவசியம்.
 
ஒவ்வொருநாளும் நாம் பலவிதமான முக்கியமான தீர்மானங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான திட்டவட்டமான ஆலோசனைகளையும், தெளிவான வழி நடத்துதலையும் வேதம் நமக்கு அருளுகிறது, ஒருநாளை அதிகாலையில் ஆரம்பிப்பதற்கு முன்பும், அந்நாளை இரவு படுக்கைக்குச் சென்று முடிக்கும் முன்பும் வேத வசனங்களை வாசித்து, யோசித்துப்பாருங்கள்.