தஞ்சம்
அன்பு ஒளி
Walking with God Article Image

என் பெயர் மாயாண்டி. சென்னைக்கு அருகே வசிக்கிறேன். பாம்பு பிடிப்பதே எனது குலத் தொழில். நான் பள்ளிக்கு சென்றதாகவே எனக்கு ஞாபகம் இல்லை. எனக்கும் திருமணம் ஆயிற்று. ‘சீக்கிரம் தகப்பனாவேன்’ என்று அடிக்கடி வாய்விட்டுச் சொல்லிவந்தேன். அந்த நாளும் வந்தது.

என் மனைவியின் பிரசவத்தை வீட்டில் வைத்தே பார்த்தோம். எங்கள் குலத்தின் பெண்களும், பல வயதான பாட்டிமாரும் என் மனைவியின் பேறு காலத்தைப் பொறுப்பேற்றனர். என் மனைவிக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டது. என் தாயார் ‘நீ பெற்றது ஓர் ஆண் பிள்ளை’ என்றார்கள். எனக்கு ஒரே மகிழ்ச்சி.

எங்கள் குலத்தில், குழந்தை பிறந்து சில மணி நேரத்திற்குள்ளாய் கழுதைப் பாலை குழந்தைக்குக் கொடுப்பார்கள். என் மகனுக்கும் பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாய், கழுதைப்பாலை கண்டுபிடித்துக் குடிக்கக் கொடுத்தார்கள்.

கழுதைப் பாலைக் குடித்த சில நிமிடங்களில், என் மகனின் முகம் நீல நிறமாக மாறியது. பையன் கதறி அழ ஆரம்பித்தான். இந்த மாதிரி கதறல் என் வாழ்க்கையில் நான் கேட்டதேயில்லை. தலையில் ஓர் சிறிய பள்ளம் போன்ற ஒரு பகுதி காணப்பட ஆரம்பித்தது. ‘இனி என் மகன் செத்தே விடுவான்’ என்று நான் கதற ஆரம்பித்தேன்.

‘உங்கள் மகன் பிழைக்க மாட்டான். ரூ.20,000/- எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள ஏதாவதொரு பெரிய மருத்துவமனைக்கு வேகமாகச் செல்லுங்கள்’ என்றார்கள்.

அப்போது மணி இரவு 11 இருக்கும்.

என் குட்டி மகனை, பழைய துணியால் சுற்றி என் கையில் அணைத்துக் கொண்டேன். அவ்வழியாக வந்த கடைசி பஸ்ஸை நிறுத்தி அதில் ஏறினோம். எல்லோருமாக அழுது கொண்டே சென்றோம். தாம்பரம் வந்தோம். மணி காலை 2.30 … எங்கே கொண்டு போவது என்றே புரியவில்லை… தாம்பரத்தில் இறங்கின நாங்கள், பக்கத்தில் ஒரு தேவாலயம் இருப்பதைப் பார்த்தோம்.

‘இனி பிள்ளை பிழைக்க மாட்டான்’ என்று சொல்லி அதிகம் அழுதோம். அப்பொழுது எனக்கு ஒரு எண்ணம் வந்திச்சு… ‘சாகப்போற இந்த பிள்ளையை ஆலயத்தின் வாசல் படியில் ஏன் போடக்கூடாது.. தெய்வம் ஏதாவது செய்வாரே’ என்று சொல்லி எல்லோருமாக அந்த ஆலயத்தின் வெளி வாசற்படியில் குடிந்தையைப் போட்டு அழுதோம்.

கொஞ்ச நேரத்தில், என் பையன் அழற சத்தம் கேட்டது. ‘சாகப்போகிறானே’ என்று நினைத்தேன்.அவன் அழுகையை நிறுத்தினான். கொஞ்ச நேரத்தில் எங்க ஊர்லே இருந்து வண்டி கட்டி என் மனைவியை கூட்டிக்கிட்டு சிலர் அங்கே வந்துட்டாங்க. வந்தவர்கள் தேவாலயத்தில் படியில் அழுது கொண்டிருந்த எங்களைப் பார்த்தார்கள். என் மகன்அருகில் வண்டியை நிறுத்தினார்க்ள. என் மனைவி தன் குழந்தையை எடுத்து ஒரு கடையில் போய் தாய்ப்பால் ஊட்டினாள். கொஞ்ச நேரத்தில் என் பையன் அழுகையை நிறுத்தினான்… தூங்க ஆரம்பிச்சுட்டான்.. அவன் முகத்தில்இருந்த நீல நிறமெல்லாம் மாற ஆரம்பித்தது. எங்கள் மகன் பிழைச்சுட்டான். பிறகு ஊர் திரும்பிட்டோம்.

மறுநாள் ஊர்லயிருந்து பலர் பையனைப் பார்க்க வந்தாங்க. அன்னைக்கு நெனைச்சுப் பார்த்தாலும் என் கண்ணு முன்னால அந்த நிகழ்ச்சி அப்படியே வருது. இப்ப என் பையனுக்கு வயது 1 முடிந்திடுச்சு.

அன்றைக்கு மாத்திரம் அந்த தேவாலயத்தின் வாசல்படியில் என் பிள்ளையைப் போட்டு கதறி கதறி அழாம நான் இருந்திருந்தா, என் பையன் செத்தேபோயிருப்பான். இயேசு தெய்வத்தை அறியாதிருந்த நான் அன்றைக்கு இராத்திரி அவரிடம் தஞ்சம் புகந்த காட்சி இன்றும் நான் மறக்கவேயில்லை.

அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு, பாம்பு பிடிக்கிற எங்க குலத்துல, இப்ப அநேகர் இயேசுவை நேசிக்க ஆரம்பித்து விட்டனர்.

இதை வாசிக்கிற நீங்க யாராயிருந்தாலும் சரி… உங்க கஷ்டம் எதுவாய் இருந்தாலும் சரி… ஏன் நீங்க அவரிடத்தில் அழக்கூடாது? வாழ வைக்கிற இயேசு தெய்வம். உங்களை வாழ வைப்பாரே.

- தா.மாயாண்டி, சென்னை புறநகர் பகுதி.

‘ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய்’’  (சங்கீதம் 50:15)


இந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'