ஓர் குறை
பொ.ம.ராசமணி
Walking with God Article Image
பெண்ணை உரிய முறையில் பார்த்து விட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகவே பெண் அழகாக இருந்தாள். மிகவும் மரியாதையாக வந்தவர்களிடம் நடந்து கொண்டாள். அவளது அடக்க ஒடுக்கம் பெண் பார்க்க வந்த அனைவருக்கும் பிடித்து விட்டது.
 
வாய்க்கு ருசியாக வக்கணையாக வயிறு நிரம்பச் சாப்பிட்டார்கள்.
 
‘போய்க் கடிதம் போடுகிறோம்’ என்று சம்பிரதாயமாகச் சொல்லி விட்டுப் போய் மௌனம் சாதிக்கும் மட்டமான செயல்களை எல்லாம் அவர்கள் செய்யவில்லை.
 
இந்த கலியாணத்திற்கு எங்களுக்குப் பூரண சம்மதம். நாளை மறுநாள் நாங்கள் நான்கு பேர் வந்து மற்ற உலக ஆசாரமான பேச்சுக்களைப் பேசிக் கொள்வோம்’ என்று மாப்பிள்ளையைப் பெற்ற மகராசி மஞ்சள் பட்டுச் சேலை சரசரக்க வாய் நிறைய புகையிலைச் சாறு சலிம்ப சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள்.
 
மாப்பிள்ளையைப் பெற்ற மனுஷன் ஆள் எண்ணிக்கைக்கு ஐந்தாவது  நபரோடு ஆறாவது நபராக நின்றுவிட்டுப் போனார். அவருக்கு அந்த வீட்டில் உள்ள மரியாதை அப்போதே வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து விட்டது. பெண் வீட்டாரோடு விபரம் கேட்டுப் பேசியதெல்லாம் மாப்பிள்ளையுடைய அம்மாவும் தாய் மாமனுந்தான்.
 
பெண்ணுக்கு இந்தச் சம்பதத்;தில்; விருப்பமில்லை. மாமியாரது ஒவ்வொரு அசைவிலும் தான் மாப்பிள்ளையை பெற்றவர். குடும்பத்தைச் சர்வாதிகாரம் செய்யப் பிறப்பெடுத்த சர்வாதிகாரி என திமிர்தெரிந்தது. இதனைப் பெண்ணுடைய தாயும் கவனியாமல் இல்லை.
 
அம்மா, இந்தச் சம்பந்தம் வேண்டாம் என்று பெண் கூறத்தான் செய்தாள்.
 
பெண்ணுடைய தாயோ, ‘மாப்பிள்ளை பேங்கில் வேலை பார்க்கிறான். பார்க்கவும் பளிச்சென்று இருக்கிறான். இதுபோல் இன்னொரு இடம் இப்போதைக்குள் கிடைக்காது. மாமி ராட்சசி போல இருந்தால் என்ன, நீ புருஷசனைக் கைக்குள் போட்டு, சமாளித்துக் கொள்ள வேண்டியது தான்’ என்றாள்.
 
இரண்டாவது நாள் சொன்னபடி மாப்பிள்ளையின் பெற்றோரும் தாய் மாமனும் அவன் மனைவியும் வந்தனர். மாப்பிள்ளையின் தாய்தான் ‘ரொக்கம் என்ன தருவீர்கள்’ என வாயைத் திறந்தாள்.
 
‘நீங்கள் என்ன எதிர்பாக்கிறீர்கள் என்றார் பெண்ணின் தந்தை.
 
நாங்கள் எவ்வளவும் எதிர்பார்ப்போம். தங்கள் கைப்பலத்தைச் சொல்ல வேண்டியதுதானே.
 
மேலும் பேச்சை நீடிக்க விரும்பாமல் “முப்பதினாயிரம் ரொக்கம் அதற்குமேல் பெயராது”என்றார்.
 
“பாங்கில் வேலை. ஐம்பது, ஆறுபது வரை வந்ததை வேண்டாமென்றோம். முப்பதில் நிற்கிறீர்களே உங்கள் பிள்ளைக்கு நீங்கள் செய்கிறீர்கள். நாற்பதாவது போட்டுக் கொடுங்கள்”.
 
சரி நாற்பது ஆயிரம் தருகிறோம். என்ன எதிர்பாக்கிறீர்கள்?”
 
“நாற்பது பவுன்வரை எதிர்பார்க்கிறோம்” என்றவர் ஒரு லிஸ்ட்டை எடுத்து பெண்ணின் தந்தையிடம் நீட்டினாள்.
 
அதைப் பார்த்த பெண்ணின் தந்தை, வைரமூக்குத்தி கேட்டிருக்கிறீர்களே என் மகளுக்கு மூக்கு குத்தவில்லை, தெரியுமா? என்றார்.
 
‘உங்கள் மகளுக்கு மூக்கு குத்தாவிட்டால் என்ன, இனிமேல் நாங்கள் குத்திவிடுகிறோம்”
 
“ஜயோ, அவள் மூக்கு குத்த பயப்படுவாளே என்று அலறினார் பெண்ணின் தந்தை.
 
“அவள் மாட்டேனென்றால் என் மகனுக்கு மூக்குத்தி அவனுக்கே வைர மூக்குத்தி போட்டு விடுவோம் அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை? வைரமூக்குத்தி வேண்டுமென்றால் வேண்டும். அவ்வளவுதான்” என்று போடுபோட்டாள். மாப்பிள்ளையைப் பெற்ற புண்ணியவதி.
 
பெண் வெளியே வந்தாள். “யார் மூக்கையும் எவரும் குத்த வேண்டாம். முதலில் எழுந்து வெளியே போங்கள். நான் ஒரு பிச்சைக்காரிக்கு மருமகளானாலும் ஆவெனேயொழிய, ஒரு கொள்ளைக்காரிக்கு மருமகள் ஆக மாட்டேன்” என்று ஒரு கத்து கத்தினாள். ராட்சசி முகத்தில் ஈயாடவில்லை.