எந்தன் நாவில் புதுப்பாட்டு
Bro.A.Stanley Chellappa
Walking with God Article Image

1967-ம் ஆண்டு ஜீன் மாதம்.
 
"பாக்கிய நாதன், நன்றாகப் பாடுகிறீர்கள். இசை ஞானமும் கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிறார். ஓய்வுநாள் பாடசாலையில் பாடுவதற்கேற்ற பாடல்களை ஏன் நீங்கள் எழுதக் கூடாது? முயற்சி செய்து பாருங்கள்” எனச் சவால் விட்டார். கர்நாடக இசை மேதையான அருள் திரு. M.S. இயேசுதாசன். அவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள  கடையனோடையில் சேகர குருவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
 
ஆனால், பாக்கியநாதன்  அந்நாட்களில் ஒரு சினிமாப் பாடல் பைத்தியம் 1963 முதல் 1967 வரை உளுந்தூர்ப்பேட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆசிரியராகப் பணிபுரிந்த நாட்களில் தமிழ்மொழிபற்றிய பாடல்கள்  இயற்றி, சினிமா ராககங்களைக் கொஞ்சம் மாற்றி, அவற்றிற்கு இசையூட்டிய அனுபவம்  தான்  அவருக்குண்டு.
 
எனினும், போதகர் மூலம் கர்த்தர் தந்த உற்சாகத்தால் பாக்கிய நாதன் பாடல் எழுத முயன்றார். முதலாவதாக ஓய்வு நாள் பாடசாலையில் சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கேற்றபடி, தன்னைப் போன்ற குள்ளனான சகேயுவின் சரித்திரத்தை ஒரு பாடலாக  எழுதி, அதற்கு ராகமும் அமைத்தார். போதகரிடம் சென்று
 
"சகேயு ஆயக்காரன்  மிக குள்ளமானவன்  ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான்”
 
என்ற அப்பாடலைப் பாடிக் காட்டினார். நாற்காலியில் உட்கார்ந்து பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த போதகர்  எழுந்து, பாக்கியநாதன். பிரமாதமான பாட்டு கர்த்தர் உங்கள் நாவில் புதுப்பாடல்களைத் தர ஆரம்பித்து விட்டார், என்று வாழ்த்தி ஜெபித்து அனுப்பினார்.
 
அடுத்த  ஞாயிறு பாடசாலையில் பாக்கியநாதன் மாணவர்களுக்கு இப்பாடலைக் கற்றுக் கொடுத்தார். மாணவ மாணவியர் உற்சாகமாய்ப் பாடி மகிழ்ந்தனர். அன்று இரவே இன்னும் பல பாடல்களை எழுத வேண்டும் என்ற ஆவல் உந்தவே, வீட்டில் அனைவரும் தூங்கிய பின், பாக்கியநாதன்  சமையலைறையிலே போய்  உட்கார்ந்து பாடல் எழுத  ஆரம்பித்தார். அப்போது, போதகர்  யேசுதாசன் கூறிய "கர்த்தர் உங்கள் நாவில் புதுப்பாடல்களைத் தர ஆரம்பித்துவிட்டார்” என்ற வார்த்தைகள் பாக்கிய நாதனின் மனதில் ரீங்காரமிட ஆரம்பித்தன. உடனே அவ்வார்த்தைகளையே பாடலின் பல்லவியாக எழுத ஆரம்பித்தார்.

 "எந்தன் நாவில் புதுப்பாட்டு
 எந்தன் இயேசு தருகிறார்.

 ஆனந்தம் கொள்ளுவேன்
 அவரை நான் பாடுவேன்
 உயிருள்ள நான் வரையில்.
 
என பல்லவியையும் அனுபல்லவியையும்  எழுதி முடித்தார். இனி சரணங்கள் எழுத வேண்டும். அப்போது, சினிமாப் பைத்தியமான பாக்கிய நாதனுக்கு ரட்சிப்பின் அனுபவம் கிடையாது. எனவே, சரணங்களை அமைக்க, "கிறிஸ்தவக் கீர்த்தனைகள்” புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் புரட்டி வார்த்தைகளைத் தேட ஆரம்பித்தார். அப்போது அவரது குடும்ப நிலை, அவருக்கு இருந்த நெருக்கடிகள், எதிர்பார்ப்புகள்,  எதிரிகளால்  வந்த பாடுகள், பணக்கஷ்டம் இவற்றையெல்லாம் மனதில் கொண்டு சரணங்களையும் எழுதி முடித்தார்.
 
பின்னர் 1970-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் நடைபெற்ற வேனிற்கால வேதாகமப் பள்ளி (VBS) இயக்குனர் பயிற்சி முகாமிற்கு,  அவரது திருச்சபை பாக்கியநாதனை அனுப்பி வைத்தது. அங்குள்ள பாடல் புத்தகத்தில், அவர் எழுதிய முதல் பாடலாகிய "சகேயு ஆயக்காரன்” இருந்ததைப் பார்த்து, அவர் இன்ப அதிர்ச்சியடைந்தார். பாடல் வேளையில்  அந்தப் பாடலின் ராகத்தைத் தவறாகக் கற்றுக் கொடுத்தனர். எனவே,  அதை நடத்திய போதகரிடமும், V.B.S. பயிற்சி முகாமின் தலைமை இயக்குனர் சகோதரி பாக்கியத்தாயிடமும் எடுத்துக் கூறினார். அவர்கள்  பாக்கியநாதனை முன்னால் வந்து பாடலைக் கற்றுக் கொடுக்க அழைத்தனர். அதுவரை பொது மேடைகளில் பாடி அறியாத பாக்கியநாதனுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு வகையாகச் சமாளித்துக் கொண்டு, “அக்கா, நாளை என் பாடலைக் கற்றுத் தருகிறேன்” என்று  கூறி அமர்ந்து கொண்டார்.
 
அன்றிரவு பாக்கிய நாதனுக்குத் தூக்கம் வரவில்லை. "டேய் சினிமாப் பைத்தியமே நீயா இயேசுவின் பாடலை முன்னால்  நின்று கற்றுக் கொடுக்கப் போகிறாய்? உன்னை முற்றிலுமாய் கர்த்தருக்கு அர்ப்பணித்துவிட்டுப் பாடலைக் கற்றுக் கொடு” என்று பாக்கியநாதனின் மனச்சாட்சியின் மூலம், இயேசு பேச ஆரம்பித்தார். அன்றிரவே, "நான் இனி சினிமாப் பாடல்களைப் பாடுவதில்லை, இயேசுவுக்காக மட்டுமே பாடுவேன்” என்று தன்னை இயேசுவின் கரத்தில் அர்ப்பணித்தார். என்று தன்னை இயேசுவின் கரத்தில் அர்ப்பணித்தார். அப்போதுதான்,
 "சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்,
 நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்” என்ற மனஉறுதி பெற்றார். பின்னர்,
 "இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்? 
 அவ்வுலக வாழ்வைக் காணக் காத்திருக்கிறேன்.” என்ற இந்தப் பாடலைக் கருத்துடன் , மெதுவாகப் பாடி முடித்துத் தூங்கினார்.
 
அடுத்த நாள், இயேசு தந்த தைரியத்துடன் "சகேயு ஆயக்காரன்” பாடலைப் பாக்கியநாதன் V.B.S. பயிற்சி முகாமில் கற்றுக் கொடுத்தார். அதன் பின் பல இடங்களில்  நடைபெற்ற  நற்செய்திக் கூட்டங்களில் பாடல்  பாட, பாக்கிய நாதன் அழைப்புப் பெற்று. "எந்தன் நாவில் புதுப்பாட்டு” என்ற பாடலைப் பாடி, இயேசுவிற்குத் "துதி முழக்கம்” செய்ய ஆரம்பித்தார்.
 
27.07.1975 அன்று, தினமணி நாளிதழில், "இப்பாடலை எழுதியவர்,  தன்னோடு உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்” என ஒரு அறிவிப்பு  விளம்பரத்தை திரு. நடராஜ முதலியார் வெளியிட்டார். இதை வாசித்த பாக்கிய நாதனின் தங்கை திருமதி. ஜெனி இதை வாசித்த பாக்கிய நாதனின் தங்கை திருமதி. ஜெனி சாலமோன், பாக்கிய நாதனுக்குக் கடிதமெழுதினார். தன்னை அறிமுகம் செய்த பாக்கியநாதனை, நாகர்கோவிலில் சந்தித்த அறிமுகம் செய்த பாக்கியநாதனை, நாகர்கோவிலில் சந்தித்த நடராஜ முதலியார், அப்பாடலை இசைத்தட்டில் பாட ஒப்புதல் பெற்றுக் கொண்டார். அந்த இசைத்தட்டில் குறிப்பிட்ட "கடையனோடை I. பாக்கிய நாதன்” என்ற பெயரே,  பின்னர் பாக்கிய நாதனின் அழைப்புப் பெயராக மாறியது.
 
இப்பாடலின் இசைத்தட்டு வெளிவந்தபோது பாக்கியநாதன் திருநெல்வேலிக்குச் சென்று அதை வாங்கித் தன் ஆலயத்திற்குக் கொடுத்தார். ஆலய ஒலி பெருக்கியில், சகோதரர் நடராஜ முதலியாரின் வெண்கலக் குரலில இப்பாடலைக் கேட்ட பாக்கிய நாதனும் அவர் வீட்டாரும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தனர். அநேகரை ஆண்டவருக்குள் வழி நடத்திய பாடலாக, இப்பாடலைக் கர்த்தர் மாற்றி ஆசீர்வதித்தார். "ஆவிக்குரிய கூட்டங்களில் இப்பாடலை என்னோடு சேர்ந்து மக்கள் பாடிப்பாடி, துள்ளி ஆடுவார்கள்” என்று சகோதரர் நடராஜ முதலியார் கூறினார். இப்பாடலை இன்று அநேக பிரபலப் பாடகர்கள் தங்களுடைய ஒலிநாடாக்களில் பாடி வெளியிட்டுள்ளனர். பல மொழிகளிலும் இப்பாடல் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரபலமானது.

 


Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com