நீர் வல்லவர் ! மா வல்லவர்! ( How Great Thou Art )
Bro.A.Stanley Chellappa
Be Strong

1. என் ஆண்டவா! உம் கர வல்ல கிரியை
உலகெங்கும் நான் கண்டு வியந்தேன்:
விண்மீன்களும் பேரிடி முழக்கமும்
உம் வல்லமை எடுத்துரைக்குதே.

என் ஆத்துமா மகிழ்ந்து பாடுதே!
நீர் வல்லவர்! மா வல்லவர்!
போற்றிடுவேன் என் அன்பின் ரட்சகா!
நீர் வல்லவர் ! மா வல்லவர்!
நீர் வல்லவர் ! மா வல்லவர்!
.....

கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இப்பாடல், இருபதாம் நூற்றாண்டின் துதிப்பாடல்களில், சிறந்த பாடலாக விளங்குகிறது. 1951-ம் ஆண்டு, ஸ்டோனி புரூக் வேதாகமக் கூட்டத்தில், பாடகர் ஜேம்ஸ் கால்டுவெல் பாடியதன் மூலம், அமெரிக்க மக்கள் மத்தியில் பரவியது. அதன்பின், பிரபல நற்செய்திப் பாடகர்களான ஜார்ஜ் பிவெர்லி ஷியாவும், கிளிப் பர்ரோசும், இங்கிலாந்தின் ஹேரிங்கே மைதானத்தில் நடந்த, பில்லி கிரகாம் நற்செய்திக் குழுவின் லண்டன் கூட்டங்களில், இப்பாடலைப் பாடிப் பிரபலமாக்கினார்கள்.
 
இப்பாடல், சுவீடனைச் சேர்ந்த கார்ல் போபெர்க் என்ற போதகர், 1886-ம் ஆண்டு எழுதிய கவிதையின் அடிப்படையில் உருவானது. அவர் ஒருமுறை சுவீடனின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதிகளில், மரங்களடர்ந்த அழகிய தோப்புகளுக்குச் சென்றிருந்தார். அப்போது மதிய வேளையில், திடீரென்று பலத்த இடிமுழக்கத்துடன் புயல் வீசியது. அதைத் தொடர்ந்து, தெளிவான சூரிய ஒளியில், அமைதியான சூழ்நிலையில், மரங்களில் இருந்த பறவைகள் இனிமையாகப் பாடுவதை அவர் கேட்டார். மனதைக் கொள்ளை கொண்ட இவ்வற்புத இயற்கைக்  காட்சிகளைக் கண்ட போபெர்க், இவற்றைப் படைத்து, ஆளுகை செய்யும், மகத்துவம் நிறைந்த இறைவனைப் போற்றி 9 சரணங்கள் கொண்ட இக்கவிதையை இயற்றினார்.
 
இக்கவிதையை, மேன்பிரட் என்பவர் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். 1925-ம் ஆண்டு, கஸ்டவ் ஜான்சன் என்ற போதகர், இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1927-ம் ஆண்டு, இது ஜெர்மன்  மொழியிலிருந்து ரஷ்ய மொழியிலும் வெளிவந்தது. பின்னர், 1933-ம் ஆண்டு,  ஹைரன் என்ற ஆங்கிலேய மிஷனரி, உக்ரேய்னில் ஊழியம் செய்தபோது, அங்குள்ள ரஷ்ய மக்கள் இக்கவிதையை, அவர்கள் மொழியில் பாடக் கேட்டார். அதைக் கற்று, அவரும் அவர் மனைவியும் இணைந்து பாடி, ரஷ்யர்களிடையே அவர்கள் செய்துவந்த நற்செய்திப் பணியில், இக்கவிதையை உபயோகித்தனர்.
 
ஒருமுறை, ஹைரனும், அவர் மனைவியும், கார்பதியின் மலைப் பகுதிகளில் பயணம் செய்தார்கள். அப்பகுதியின் பிரமிக்கத்தக்க இயற்கை அழகைக் கண்டு வியப்புற்று,. இக்கவிதையின் கருத்தைக் கொண்டு, அழகான ஆங்கிலப் பாடலை எழுதினார்கள். பின்னர் 1939-ம் ஆண்டு, இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானபோது, இங்கிலாந்து திரும்பிய இந்த மிஷனரிகள், இப்பாடலைப் பாடி, அறிமுகம் செய்தனர்.
 
இப்பாடலுக்கு, சுவீடனின் கிராமிய ராகமொன்றை, மிஷனரி ஷைரன் உபயோகித்தார். எளிமையான, ஆனால் உற்சாகமூட்டும் இந்தத ராகம், இப்பாடலுடன் அழகாகப் பொருந்தியது. எனவே, இப்பாடல் பல நாடுகளுக்கும் பரவி, அனைவரும் விரும்பிப் பாடும் பாடலாக மாறியது. 1974-ம் ஆண்டு, கிறிஸ்டியன் ஹெரால்டு என்ற பத்திரிக்கை எடுத்த கணிப்பில், அமெரிக்க மக்களைக் கவர்ந்த பாடல்களில், இப்பாடல் முதன்மையானதாகக் தேர்ந்தெடுக்கப்பட்டது.


Bro.A.Stanley Chellappa, founder of Christian Comforting Ministries to support sick and poor has been involved in many minstries including Missionaries Upholding Trust (MUT) and Children ministries. He along with his family founded Quiet Time Ministries to produce affordable CDs and VCDs. He could be reached at 91 44-22431589/ stanleychellappa@hotmail.com

Social Share