என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா -(2)
1976-ம் ஆண்டில், ஒரு ஞாயிறின் அதிகாலை நேரம்:
தன் வழக்கத்தின்படி சுறுசுறுப்புடன் சாலையில் தனது காலை உடற்பயிற்சி நடையை மேற்கொண்டிருந்தார். அந்த வேதாகமக் கல்லூரி மாணவர் டீ ராஜன்; நேரத்தைச் சிறிதும் வீணாக்காத நல்ல பழக்கமுடைய ராஜன், அப்பயிற்சி நேரத்திலும் ஜெப நிலையில் வேத வசனங்களை தியானம் செய்வார்: அல்லது ஏதேனும் ராகத்தை முணுமுணுத்துக் கொண்டே செல்வார். இந்நேரங்களில் திடீரென புதுராகங்கள் அவருக்குக் கிடைத்துவிடும். அப்புதிய ராகங்களை மறந்துவிடாமல் மென்மையாகப் பாடி, வீடு சேர்ந்வுடன் தனது டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து விடுவார்.
அந்த மனமகிழ்ச்சியின் நாள் அதிகாலை வேளையில் தெய்வ சிந்தையுடன் நடந்து கொண்டிருந்த அவரது உள்ளத்தில் ஒரு புதிய ராகம் ஒலித்தது!
பின்னர், சென்னை தமிழ் மெதடிஸ்டு ஆலயக் காலை ஆராதனையில், போதகரான அவரது சகோதரர், பாஸ்டர் ஜி.எஸ். மோகன் அளித்த தேவ செய்தியை, வழக்கம்போல கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இயேசுவின் சிலுவைப் பாடுகளின் மத்தியில் அவரைக் கைவிட்டுக் பின்வாங்கிப்போன பேதுருவை, உயிர்த்தெழுந்த ஆண்டவர் மும்முறை அன்பில் உறுதிப்படுத்தும் செய்தி, அவரது உள்ளத்தில் காட்சியாகப் பதிந்தது. தன்னையே சீமோனுடன் ஒன்றுப்படுத்தி, ஆண்டவரின் அன்பின் அழைப்பை பற்றிச் சிந்திக்கலானார்.
செய்தியாளரைப் பற்றி விசாரிக்காமல், அச்செய்தியின் மூலம் ஆண்டவர் தனக்குத் தரும் வேத போதங்களை அந்நாள் முழுவதும் அசைபோடுவது ராஜனின் விருப்ப பொழுது போக்கு. ஞாயிறு அன்று சிறப்பாக அச்செய்தியின் பின்னணியில், காலையில் உதித்த ராகமும் அவரது உள்ளத்தில் சேர்ந்தே ஒலிக்க, இப்பாடலில் சரணங்கள் ஒவ்வொன்றாய் ராஜனின் குறிப்பேட்டில் உதிர்ந்தன.
சரணங்கள் அனைத்தும் உருப்பெற்று முடிந்தபின்பும், ராஜனின் உள்ளத்தில் அப்பாடல் நிறைவுப்பெற்ற திருப்தி இல்லை. சீமானுடன் தன்னை ஒப்பிட்டு தியானித்த அவர், ஆண்டவரது அன்பின் அழைப்புக்குத் தனது பதிலாக
"உம்மை நேசிக்கிறேன் நான்" (2)
கல்வாரி காட்சியைக் கண்டபின்னும்
நேசியாமல் இருப்பேனோ?"
என்று எழுதி முடித்தார். இவ்வாறு இப்பாடலும் அதின் ராகமும் ஒரே நாளில் இணைந்து நிறைவுபெற்றது.
இப்பாடலை இயற்றிய சகோதரர் ராஜனின் தந்தை திரு. ஜி.கே.எஸ். பாலசுப்ரமணியன் ஒரு தெலுங்கு பிராமணர் கோயம்புத்தூரைச் சேர்ந்த அவர், சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண்ணாகிய நேசமணி அம்மாலை மணப்பதற்காகக் கிறிஸ்தவரானார். இவர்களுக்கு மகனாக ராஜன் 30.6.1933ம் ஆண்டு பிறந்தார். ஆரம்பப்பள்ளி முதல், கல்லூரிப் புகுமுக வகுப்புவரை சென்னையிலே படித்தார். இப்பின்னணியில் வளர்ந்த ராஜனுக்குத் தன் இளம் வயதில் கிறிஸ்தவ வாசனையே இல்லை என்றார். அது மிகையாகாது. ஆலயத்திற்கும் அவர் சென்றதில்லை. ஒரு முறை 1948ம் ஆண்டில், சகோதரர் பக்தசிங் நடத்திய நற்செய்தி கூட்டத்தில் கலந்துகொள்ள வாலிபனான ராஜனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அன்று ஆண்டவரின் அன்பை அறிந்து அவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். ஆனால் சில நாட்களி;ல் பினவாங்கிப் போனார்.
1952ல் இந்திய விமானப் படையில் சேர்ந்த ராஜன், பத்து ஆண்டுகள் இந்தியாவின் பல பிராந்தியங்களி;ல் பணிபுரிந்தார். 06-05-1960 அன்று ஆனி hPட்டா என்ற பாலர் கல்விப் பயிற்சிப் பெற்ற ஆசிரியைப் மணந்தார். பின்னர் 1962-ம் ஆண்டு விமானப்படையில் இருந்து ஓய்வுப்பெற்று, சென்னையில் உள்ள சிம்சன் கம்பெனியின் பாதுகாப்புத் துறையில் வேலைக்கு அமர்ந்தார்.
19-03-1967 குருத்தோலை ஞாயிறு அன்று, ராஜன் திடீரென தாங்கமுடியாத வயிற்று வலியுடன் சென்னைப் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் சோதித்து, "குடலில் பக்குவாதம்" என நிர்ணயித்து, இன்னும் 6 மணி நேரத்தில் அவர் மறித்து விடுவார் என கூறிவிட்டனர். உடனே அவரது பெற்றோர், சகோதரர் பக்தசிங், இம்மானுவேல் மெதடிஸ்ட் ஆலய அந்நாள் போதகர் சாம் கமலேசன் போன்ற பல தேவ ஊழியர்களின் ஜெப உதவியை நாடினர். அந்த நாளின் ஆலய மாலை ஆராதனையில், போதகர் சாம் கமலேசன் ராஜனுக்காக சிறப்பு ஜெபத்தை திருச்சபையோருடன் நடத்தினார்.
டாக்டர்கள் ராஜனுக்கு அறுவை சிகிச்சை அளித்து காப்பாற்ற எண்ணி, அதற்கான ஆயத்தங்களைச் செய்தனர். ஆயத்தப் பரிசோதனைகளில் ராஜனின் உடல்நிலை சற்று முன்னேறி வருவதைக் கண்டனர் எனவே, வலியைக் குறைக்கும் மருந்துகளை மட்டும் கொடுத்து, சிறிது நேரம் அவகாசம் கொடுத்தனர். பின்னர், ராஜன் படிப்படியாக சுகம் பெற்று வருவதைப் பார்த்து, அறுவை சிகிச்சையை வேண்டாமென விலக்கினர்.
மறுநாள் காலை நல்ல சுகத்துடன் விழித்த ராஜனிடம் அவரது தந்தை, முந்தின தினத்தில் ஜெபத்தின் மூலம் தேவன் ராஜனின் வாழ்வில் செய்த அற்புதத்தை விவரித்துச் சொன்னார். அதைக்கேட்ட ராஜன் ஆண்டவருக்கு நன்றி சொல்லி, ஆண்டவரின் ஊழியத்தில் முழுநேரப் பணியாளனாக மாற விரும்பினார். எனினும், குடும்பமாக அத்தீர்மானத்தைச் செயல்படுத்த, 7 ஆண்டுகள் அவர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதாயிற்று. அந்த நாட்களையும் வீணாக்காமல், சிறுவர் ஊழியங்களிலும் நற்செய்திப் பணியிலும் ஆர்வாத்துடன் ஈடுபட்டார்.
1974-ம் ஆண்டு ராஜன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இறையியல் பட்டப் படிப்பை மேற்கொள்ள, சென்னை இந்திய வேதாகமக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் படித்துக் கொண்டிருந்த ஆண்டுகளில் தான், முதன் முறையாக பாடல்கள் இயற்ற ஆரம்பித்தார். அந்நாட்களில், ராஜன் அக்கல்லூரி இன்னிசைக் குழுவின் முதன்மைப் பாடகராக விளங்கினார்.
ராஜன் இப்பாடலை இயற்றியவுடன் தன் மனைவியிடம் பாடிக் காண்பித்தார். அவருக்கும் இது பிடித்திருந்தது. பின்னர் தமிழ் மெதடிஸ்ட ஆலயத்தில் தனிப்பாடலாகப் பாடினார்.
ஆண்டவரின் அன்புக் கேள்விக்குப் பதிலளிப்பது போல, இப்பாடலின் கடைசி நான்கு வரிகள் அழகாக அமைந்திருப்பது, இப்பாடலைப் பாடுபவர்களையும், ஆண்டவரின் அழைப்பை ஏற்று, அவரை நேசித்து, அவருக்காய் வாழத் தூண்டுகிறதல்லவா?