துணிக்கடையில் ஆண்கள்
திருமதி ஞானம் ராஜாசிங்
Reaching out people

கேள்வி-பதில் பகுதி

எனக்கும் என் கணவருக்கும் இடைவெளி தினம் தினம்  அதிகமாகிக் கொண்டேயிருக்கின்ற மாதிரி உணர்வு. நான் ஜவுளி கடைக்கு போகும் போது, எப்போதும் சிறிது நேரமே செலவிட அனுமதிக்கின்றார். ஆனால் அவர் கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் போது என்னை வற்புறுத்தி என்னையும் உட்கார வைக்கின்றார். ஆனால் எனக்கு மனதளவில் அதில் ஒன்ற முடியவில்லை. ஆனால் அதே டிவியில் சமையல் ஷோ வரும்போது, என்னை சேனல் மாற்ற சொல்கிறார். இது மாதியான பல விஷயங்களில் எங்களுக்கு வெவ்வேறான விருப்பங்கள்.இந்த இடைவெளியினால், எங்களுக்குள் பிரிவு வந்து விடுமோ என்ற பயம்.
 

இதைப் போக்க வழி ஏதாவது சொல்லுங்களேன்.

- சுஜாதா, திருவோரூர்
 

பதில்

1. இரண்டு குடும்பங்களில் வித்தியாசமாக வாழ்ந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது எளிதான காரியம் அல்ல. அதனால் தேவனின் உதவியோடு நம்முடைய முயற்சியும் அவசியம்.

2. ஆணையும் பெண்ணையும் சரிசமமாக படைத்த ஆண்டவர், இருவரையும் வித்தியாசமான உணர்வுகளோடு படைத்திருக்கிறார் என்பதை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.

3. நீங்கள் உங்கள் கணவரைக் குறித்து சொல்கின்ற குறைபாடுகள், உங்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. உங்களோடு பல ஆயிரம் பெண்கள் உண்டு. "துணிக்கடையில் ஆண்கள்" நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து பேர் இப்படித் தான் நடந்து கொள்வார்கள்.

4. ஒவ்வொரு மனிதரிடமும் நல்ல குணங்களும் உண்டு. பலவீனங்களும் உண்டு. யாருமே குறைவற்றவர்கள் கிடையாது.

5. நான்கே குறைகளை எழுதிய உங்களைப் பாராட்டுகிறேன். தயவு செய்து உட்கார்ந்து யோசித்து அவரிடம் உள்ள நல்ல காரியங்களை கண்டுபிடித்து எழுதுங்கள். முதலில் ஒன்றுமேயில்லை என்று சொல்ல தோன்றும். சிறிது யோசித்தீர்களானால் பல காரியங்கள் புலப்படும். உதாரணமாக கெட்ட பழக்கம் இல்லாதவர், பொறுப்புள்ளவர், கஷ்டப்படுபவர்களுக்கு உதவுபவர், என்று சொல்லிக் கொண்டே போகலாம். நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்து போகும்.

6. இப்படி செய்வதால் அவரை பார்க்கும் பார்வையின் கோணத்தை மாற்றிக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். அதாவது இந்த மனிதரோடு எப்படி வாழ்வது என்ற எண்ணம் மாறி அவருடைய நல்ல குணங்கள் உங்களுக்குள் ஒரு நிறைவை கொடுக்கும். அடிக்கடி அவரை அதற்காக பாரட்டுங்கள்.

7. அவருடைய ஒரு சில செயல்கள் உங்களுக்கு எரிச்சல் மூட்டுவது போல, உங்களது சில செயல்கள் அவருக்கு எரிச்சல் மூட்டும் என்பதை மறந்து விட வேண்டாம். ஒரு நல்ல நேரத்தை கண்டுபிடித்து உட்கார்ந்து பேசுங்கள். நீங்கள் எனக்கு விருப்பமான சேனலை பார்க்க விடுவதில்லை. நீங்கள் அப்படி செய்கிறீர்கள், இப்படி செய்கிறீர்கள் என்று குற்றம்சாட்டாமல் எனக்கு இது வருத்தமாக இருக்கிறது என்று சொல்லி நம் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.

8. எல்லவற்றிற்கும் மேலாக தேவன் உங்களுக்கு கொடுத்த துணையை அப்படியே ஏற்றுக் கொண்டு அன்பு செலுத்துங்கள்.

9. பாலுறவில் திருப்திபடுத்துவது மனைவியின் கடமை. அதில் திருப்தியடையாத பட்சத்தில், அவர்கள் மனைவியை எரிச்சல் படுத்துவார்கள்.

10. இருவருக்கும் இடையே இடைவெளி வராதபடி புத்தியுள்ள மனைவியாக செயல்படுங்கள். பிரிந்து போவதை குறித்து யோசிக்கவே கூடாது. தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக் கடவன். தேவ சந்நிதியில் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நினைவுப் படுத்திகொள்ளுங்கள்.

11. கொஞ்சம் விட்டுக்கொடுத்தல், கொஞ்சம் பாராட்டுக்கள், கொஞ்சம் அன்பான பதில், முயற்சி செய்யுங்கள். தேவன் உங்கள் குடும்ப்ப வாழ்வை ஆசீர்வதிப்பார்.

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.- நீதிமொழிகள் 14:1

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

 

அன்புடன்

Aunty திருமதி ஞானம் ராஜாசிங்

( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)


திருமதி ஞானம் ராஜாசிங் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேவனின் ஊழியத்தை செய்து கொண்டு வருபவர். 29 ஆண்டுகளகளாக 'Scripture Union'ல் இருந்த இவர் "Shalom Family Enrichment Ministries" மூலமாக குடும்பங்கள் மத்தியில் ஊழியத்தை தொடர்ந்து செய்கின்றார். 91- 9382720809 என்ற தொலைபேசி எண் மூலமாக இவரை தொடர்பு கொள்ளலாம்.