கணவர் மேல் மரியாதையில்லை
திருமதி ஹெலன் ஜேக்கப்
We have to run away from Sins

கேள்வி-பதில் பகுதி


கேள்வி

அன்பு சகோதரிக்கு

என் பெயர் ஜெபமேரி.  என் நெருங்கிய கல்லூரி தோழியிடம் பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக , வாரம் ஒரு தடவையாவது போனில் பேசிக்கொள்வோம். எங்கள் துக்கங்களை பகிர்ந்து கொள்ளுவோம். போன வாரம் என் தோழி வீட்டிற்கு குடும்பத்தினருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாப்பிடும் போதும், எல்லாரும் உட்கார்ந்து பேசும் போதும் , ஒரு விஷயம் எனக்கு உறுத்தலாக இருந்தது.  என் தோழியும் சரி, அவளின் 14 வயது பையனும் சரி அவளின்  கணவரை குறைசொல்லுவதையோ அல்லது அவரின் நடத்தையை கிண்டல் பண்ணுவதிலேயே குறியாக இருந்தார்கள். எப்படி இதை சொல்லி, என் தோழியை திருத்துவது எனக்கு ஒரே குழப்பம். உங்கள் ஆலோசனைய எதிர்பார்க்கும் சகோதரி.

பதில்

அன்பு சகோதரி ஜெபமேரிக்கு,

வாழ்த்துக்கள்.  அநேகர் தங்களுடைய பிரச்சனையை பெரிய பிரச்சனையாக நினைத்துக்கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்கள் தோழியின் பிரச்சனையை கண்டறிந்து அவர்களுக்கு உதவ விரும்புவதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் கடிதத்திலிருந்து உங்கள் தோழிக்கும் , அவள் மகனுக்கும்  கணவர் மேல் மரியாதையில்லை என்பது தெரிகிறது. அவர்களுக்கு அவர் மேல் ஏன் மரியாதையில்லை என்று யோசிக்க வேண்டும். அவர் ஒழுங்காக வேலைக்கு செல்கிறாரா? குடும்ப பொறுப்பு இல்லாமல் இருக்கிறாரா? கெட்ட பழக்கங்கள் ஏதாவது உள்ளதா? தெய்வபக்தியில்லாமல் இருக்கிறாரா? உங்கள் தோழியிடமும், அவள் மகனிடமும் போதிய நேரம் செலவழிக்காமல் இருக்கிறாரா? அன்பு கூறாமல் இருக்கிறாரா? இதைக் கண்டுபிடித்து ஜெபத்துடன் அவருக்கு அலோசனை வழங்கலாம்.

உங்கள் தோழியிடம் ஏன் அவர்கள் அப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்ற காரணத்தைக் கண்டறியுங்கள். 

அவர்களுக்கு எபேசியர் 5:33 வசனத்தை சொல்லவும். அதில் மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாய் இருக்கக்கடவள் என்று உள்ளது.  1 கொரிந்தியர்  11: 3 ஸ்திரீக்கு புருஷன் தலையாய் இருக்கிறான் என்றுள்ளது. புருஷன் குடும்பத்தலைவன்.

ஆகவே கணவன் எப்படிப்பட்டவன் என்பதின் அடிப்படையில் மரியாதை செலுத்துவது அல்ல. அவரின் கடவுள் கொடுத்த தலைமைத்துவதிற்காக அவரை மதிக்க வேண்டும். அதை நம் சுய முயற்சியினால் செய்ய முடியாது. தேவனிடம் உதவியையும், கிருபையையும்  நாட வேண்டும்.

மகனின் முன்னால் அவர்கள் அவரை குறைசொல்வதினால் அவனும் அவரை குறைசொல்லுகிறான். அது அவர்களோடு மாத்திரம் நிற்காமல் வந்திருக்கும் விருந்தினர் முன்பும் குறைசொல்வது கட்டாயம் கணவனை புண்படுத்தும். அது குடும்ப உறவை கட்டாயம் பாதிக்கும். கணவன் மனைவி இருவருக்குமே ஆலோசனை தேவை. நீங்கள் ஜெபத்துடன் முதலில் மனைவியிடம்  அவரின் கணவர் அவரிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை கண்டறியுங்கள். பிறகு கணவனிடம் பேசலாம். தேவன் உங்களுக்கு ஞானத்தை தருவார். வாழ்த்துக்கள்.

( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)


திருமதி ஹெலன் ஜேக்கப், தன் கணவருடன் இணைந்து குடும்பங்கள் மத்தியில் பல வருடங்களாக ஊழியம் செய்து வருபவர். 'மணக்கும் மணவாழ்வு' என்ற திருமண உறவைப்பற்றிய கருத்தரங்குகளை நடத்தி வரும் இவரை 91-979-089-5366 ( இந்தியா ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.