மாமியார் மாமனாரின் மற்றும் மருமகன் மருமகளின் கடமைகள்
அருள்திரு சி. இராஜசேகரன்
Bible

மாமியார் மாமனாரின் கடமை

உலகில் ஒரே ஒரு குடும்பத்தை தவிர மாமனார் மாமியார் இல்லாத குடும்பம் இல்லை அதுதான் ஆதாம் ஏவாள் குடும்பம். கடவுள் இருவருக்கும் தகப்பனாக தாயாக இருந்தார். மாமனார் மாமியாராக இல்லை. மாமியார் கொடுமையால் மருமகள் சாவு தற்கொலை கொலை கொடுமை என்ற அவலட்சணம் நமது நாட்டில்தான் அதிகம். மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயோ அதையே நீ மற்றவர்களுக்கு செய் என்று இயேசு கூறினார். ஒவ்வொரு மாமியாரும் மருமகளாக இருந்துதான் வந்தோம் என்ற எண்ணத்துடன் தன்னை தன் மாமியார் எப்படி நடத்த வேண்டும் என்று தாம் எண்ணிணார்களோ அதே போல் தன் மருமகளை நடத்தினால் மாமியார் மருமகள் பிரச்சனை இருக்காது. இதனால் தன் மகன் எந்தவித தர்ம சங்கடமும் அடையவோ அல்லது பாரபட்சம் ஒரு தலைப்பட்சமாகவோ செயல்பட முடியாது. மருமகளை இன்னொரு மகள் என்று நினைத்தால் மாமியார் கொடுமை ஒழிந்து விடும்.

நகோமியைப் போல நல்ல மாமியாராக இருக்கும்போது மருமகள் மாமியாரை எந்த சூழலிலும் பிரியமாட்டாள். நன்றாக பணிவிடையையும் செய்வாள். மருமகளை தன் மகனை கொள்ளை கொள்ள வந்த எதிரி அல்ல என்றும் தாய்க்கு பின் தாரம் என்ற உண்மையையும் மாமியார்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

மருமகள் மருமகன் தன் பிள்ளைகள் என்கிற எண்ணம் மாமனார் மாமியார் இருந்தால் அன்பும் சகிப்புத்தன்மையும் தானாய் வரும். மருமகன் மருமகள் தவறு செய்தால் பெரியவர்கள் மன்னித்து போதித்து அவர்களை முன்மாதரியாக வாழ்ந்து வழி நடத்த வேண்டும்.

மருமகன் மருமகளின் கடமை

திருமணத்தில் இருமணம் அல்லது இரு சரீரம் மட்டும் ஒன்று சேர்வதில்லை. இரு குடும்பம் ஒன்று சேர்கிறது. இரு குடும்பமும் ஒரே குடும்பமாக உன் என் என்ற பதம் மாறி நம் குடும்பம் என்ற நிலைக்கு உயருகிறது. புகுந்த வீடா பொறந்த வீடா என்ற கேள்விக்கு இடமில்லை. எல்லாமே நமது வீடாகிறது. உனது தாய் தகப்பன் எனது தாய் தகப்பன். உன் உடன் பிறப்புகள் என் உடன் பிறப்புகள் என்ற உயரிய சிந்தனை ஆட்கொள்ளும் போது மருமகள் மகளாகவும் மருமகன் மகனாகவும் மதிக்கப்படுவார்கள். மாமியார் மாமனாரை தன் தாயாகவும் தகப்பனாகவும் பாவித்தால் அதற்கேற்ற பலனை அவர்கள் கொடுக்காவிட்டாலும் கடவுள் கொடுப்பார். ஊர் மக்கள் உறவினர்கள் மதிப்பார்கள். எனது அன்பிற்கும் பாசத்திற்கும் என் மாமனார் மாமியார் தகுதியில்லை என்று கூறுவோமானால் நல்லதை பார்க்க தெரியான குருடரும் நல்லதை அறிய முடியாத முட்டாளுமாகத்தான் இருக்க முடியும்.

குடும்பம் ஒரு கதம்பம் அதில் பலவித நிறங்களில் மணங்களில் குணங்களில் பூக்கள் நிறைந்து தனித்தனியாக நின்று கொடுக்கும் அழகு நிறம் மணத்தை வட மேலானதாக இருக்கிறது. தனி மனிதனாக இச்சமுதாயத்தில் இருந்து ஒளிவீசுவதை விட குடும்பமாக இருந்து ஒளிவீசும் போது ஒரு சமுதாயத்திற்கே வெளிச்சமாக இருக்கும்

 


எழுத்தாளர், சிந்தனையாளர்,போதகர் போன்ற பல பொறுப்புகளுக்கு சொந்தமானவர். இவரை 91-944-365-4521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.