பொறாமை வேண்டாம்
சகோ. சாம்சன் பால்
Be Strong

ஒரு சிறப்புக் கூட்டமொன்றில் அழைக்கப்பட்டிருந்த இளம் தேவ ஊழியர் வேதாகமத்திலுள்ள  ஒரு சம்பவத்திற்கு மிக அருமையான விளக்கம் கொடுத்தார். அதைக் கேட்ட பலரும் அவரைப் பாராட்டினார்கள். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இன்னொரு பேச்சாளரோ அவரிடம் வந்து "நீங்கள் கொடுத்த விளக்கங்களை விட மிகச் சிறந்த விளக்கங்களை விட மிகச் சிறந்த விளக்கங்களை நான் ஏற்கெனவே பல கூட்டங்களில் பேசியுள்ளேன்" என்றார். ஏன் அவ்விதம் சொன்னார்?. வேறொன்றுமில்லை. இன்னொருவர்  ஒரு தாலந்திற்காகப் பாராட்டப் பட்டதைப் பொறுத்துக் கொள்ள இயலாத  ஒரு பொறாமையின் விளைவே அது.

சிலரால் எதையும் சாதிக்காவிட்டாலும் சாதிக்கின்றவரகள் புகழ் அடையும் போது அதனைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். வாலிப வயதுகளில் இந்தப் பொறாமையின் தாக்கம் அதிகமாகயிருக்கும். ஆனால் கோலியாத்தை வீழ்த்தி தாவீது சாதனை படைத்த போது யோனத்தானின் மன நிலை என்ன?. பூ... இது என்ன பெரிய சாதனை.. நான் ஏற்கெனவே தனியே போய் ஒரு பெரிய பெலிஸ்திய படையையே வீழ்த்தி வெற்றி கண்டிருக்கின்றேனே" என்று அவன் சொல்லியிருக்கலாம். ஏனென்றால் அவன் அவ்விதம் ஏற்கெனவே மாபெரும் சாதனை கண்டவன். ஆனால் யோனத்தான் அப்படிப் பேச வில்லை.

அவன் தன்னுடைய பழைய சாதனையை எண்ணி, தாவீதின் புதிய சாதனையை அற்பமாக்கிட விரும்பவில்லை. தாவீதிடம் போய் அவனைப் பாராட்டினான். இன்னொருவர் மெச்சப்படும்போதும், பாராட்டப்படும் போதும் பொறாமை வல்லமையாக செயல்படும். ஆனால் அதனை மேற்கொள்ள வேண்டும். யோனத்தானைப் போல பொறாமையை மேற்கொள்ளாவிட்டால் சவுலைப் போல அந்தப் பொறாமையினாலே அழிவு விரைந்து வரும்.


 


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.