தேவ சாயல்
திருமதி ஹெலன் ஜேக்கப்
What is Grace

தேவன் நம்முடைய சாயலாக  மனுஷனை சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்.  ஆணும் , பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதி: 1: 27.

“ஆணுக்குள் சிறைப்பட்ட பெண்” என்று திருநங்கையரைப் பற்றி ஒரு செய்தித்தாளில் வாசித்தேன். ஆண் உருவம், ஆனால் அவனுக்குள் இருந்த பெண் தன்மை. தேவன் மனுஷனை உருவாக்கும் போது, அப்படித்தான் உருவாக்கி இருப்பார் என்று நினைக்கின்றேன். ஆதாமுக்கு ஏற்ற துணை தேவைப்பட்ட போது , வெளியில் இருந்து தேவன் ஒரு துணையை உருவாக்கவில்லை. அவனுக்குள்ளேயே இருந்த அவளை ( பெண் தன்மையை ) வெளியே எடுத்து ஒரு உருவம் கொடுத்தார். அவள் தான் பெண். மனுஷனைப் படைக்கும் போது தேவன் ஜீவ சுவாசத்தை ஊதி , அவரின் சாயலாக படைத்தார். அவனுக்குள் இருந்து படைக்கப்பட்ட பெண்ணும் தேவசாயல்தான். இருவருக்குமே தேவனைப் போல சிந்திக்கக்கூடிய, உணரக்கூடிய , தீர்மானங்களை எடுக்கக்கூடிய திறன் இருக்கிறது. சரீரத்தில்தான் வித்தியாசமே தவிர, ஆத்துமாவில் அல்ல. தேவ சாயல் என்பது சரீரபிரகாரமான சாயல் அல்ல. அது ஆத்துமாவின் சாயல். ஆண்களுடைய குணாதிசயங்களும், பெண்களுடைய குணாதிசயங்களும் சேர்ந்தால் தான் தேவனின் முழுமையான சாயல் வெளிப்படும்.

இன்று அநேக பெண்கள் தாங்கள் இரண்டாம் பட்சமானவர்கள் , மதிப்பில் குறைந்தவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறார்கள். யூதர்கள் பெண்களை அடிமைகளாக பார்த்தார்கள். கிரேக்கர்கள் பெண்களை ஒரு பொருளாக பார்த்தார்கள். இன்றும் சமுதாயம் பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக, பிள்ளைப் பெறும் எந்திரமாக பார்க்கிறது. அதன் விளைவே பெண்கள் ஒடுக்கப்படுதல், சரீரரீதியாக, உணர்வுரீதியாக, பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுதல், வரதட்சனைக் கொடுமை, போன்ற அநேக கொடுமைகளை சந்திக்கிறார்கள். இது எல்லாம் உலகத்தின் பார்வை.

தேவன் ஒரு பெண்ணைப் பார்க்கும் போது , அவளை தேவசாயலாகவே பார்க்கிறார். இது தான் சத்தியம். சமுதாயம் சொல்லும் அனைத்து காரியங்களும் பிசாசினுடைய பொய். பெண்ணே முதலில் உன்னை நீ யார் என்று தெரிந்துக் கொள்.

நீ விலையேறப்பெற்றவள்.  நீ தேவனுடைய தாயின் தன்மையை உலகுக்கு காண்பிக்கக்கூடியவள். நீ தேவனுடைய சாயல். தேவன் தன்னுடைய வாஞ்சையை , பாரத்தை உன் மூலமாக வெளிப்படுத்த விரும்புகிறார். உன்னடைய தாழ்வுமனப்பான்மையிலிருந்து நீ வெளியே வருவாயா? தேவனுக்காய் எழும்புவாயா? தேவனின் சாயலான பெண்ணின் தன்மைகள் அன்பு, இரக்கம், அரவணைத்தல், அக்கரை காட்டுதல், கருணை, ஆறுதல்படுத்துதல் போன்ற காரியங்களை உலகுக்கு காட்டுவாயா? உன்னைச் சுற்றி அநேக தேவையுள்ளவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இயேசுவின் அன்பையும், ஆறுதலையும் கொண்டு செல்வாயா? 


 


திருமதி ஹெலன் ஜேக்கப், தன் கணவருடன் இணைந்து குடும்பங்கள் மத்தியில் பல வருடங்களாக ஊழியம் செய்து வருபவர். 'மணக்கும் மணவாழ்வு' என்ற திருமண உறவைப்பற்றிய கருத்தரங்குகளை நடத்தி வரும் இவரை 91-979-089-5366 ( இந்தியா ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.