வீட்டில் ஒரே பிள்ளை
திருமதி ஹெலன் ஜேக்கப்
Be Strong

கேள்வி - பதில் பகுதி

கேள்வி: நான் எங்கள் வீட்டில் ஒரே பிள்ளை. எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடம் ஆகின்றது. ஒரு குழந்தை. நான் ஒரே பிள்ளையானதால்,  வீட்டில்  என்னை மிகுந்த அக்கறையுடன்  வளர்த்தார்கள். நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.  என் கணவருக்கு நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றார்.
குழந்தை பிறந்த பிறகு, என் வேலையை விட்டுவிட்டு குழந்தையை கவனித்து வருகின்றேன். என் பெற்றோர் வீட்டிலிருந்து எங்கள் வீடு 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. ஆனாலும் என் அம்மா, வாரம் இரண்டு தடவையாவது வீட்டிற்கு வந்து விடுவார்கள்.  முதலில் எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், போகப்போக எனக்கு எரிச்சல் தான் வருகின்றது. என் கணவரின் பெற்றோரைப் பற்றி குறைசொல்ல ஆரம்பித்தது, இப்பொது என் கணவரைப் பற்றியும் குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  வீட்டின் நிறைய காரியங்களில் குறிக்கீடும் அதிகம். இதை என் அம்மாவிடம் எப்படி எடுத்து சொல்வதென்றே தெரியவில்லை.

உங்கள் ஆலோசனைக்காக எதிர்பார்க்கும், ரூத் பரிமள ராணி

பதில்:  அன்புள்ள சகோதரி

உங்களுடைய பிரச்சனையை என்னால் நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் பெற்றோருக்கு ஒரே மகள். என்னுடனேயே என் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
திருமண உறவில் விரிசலை உருவாக்குவது “ மூன்றாவது நபர்கள்”( intruders)  கணவன் , மனைவியின் உடைய பெற்றோர், சகோதர , சகோதரிகள், நண்பர்கள், தவறான உறவுகள் என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.  இதில் அநேக பெண்களின் தாய்மார்கள் அடக்கம். தங்கள் பெண்களுக்கு நல்லது செய்வதாக நினைத்து அநேக திருமண உறவுகளை முறித்திருக்கிறார்கள்.

அம்மா பேச்சை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் , ஆலோசனை கேட்ட உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.

1. நீங்கள் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டியது உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இருக்கின்ற உறவு மிகவும் முக்கியமானது, ஆழமானது. நீங்கள் இருவரும் ஒருவராய் மாறுவதுதான் தேவனுடைய சித்தம். ( ஆதி: 2: 24 ) தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக் கடவன்;. ( மாற்கு: 10: 9)

2. இந்த உண்மையை உங்கள் அம்மாவுக்கு புரிய வைக்க வேண்டும். நீங்கள் உங்கள் கணவருக்குத் தான் தேவனுக்கு அடுத்தபடியான இடம் கொடுக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.

3. உங்கள் கணவரைப் பற்றியோ, அவர்கள் குடும்பத்தைப் பற்றியோ அவர்கள் பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதை தைரியமாக, நிதானமாக சொல்லுங்கள்.

4. அவர்கள் சொல்லும் எந்த காரியமும்  உங்கள் இருதயத்தையும், உணர்வையும் பாதிக்கும்படி இடம் கொடுக்காதீர்கள்.

5. அம்மா உங்கள் நலனில் மட்டும் அக்கரை செலுத்துவார்கள். அது கணவன் மனைவியிடையே குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தும் என்பதை உணரமாட்டார்கள்.

6. அம்மாவை நேசியுங்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் உங்கள் குடும்பத்தில் தலையிடுவதை நிறுத்தச்சொல்லுங்கள்.

7. அவர்களுக்காக ஜெபியுங்கள். இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கான ஞானத்தை தேவன் தரவேண்டும் என்று ஜெபியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)


திருமதி ஹெலன் ஜேக்கப், தன் கணவருடன் இணைந்து குடும்பங்கள் மத்தியில் பல வருடங்களாக ஊழியம் செய்து வருபவர். 'மணக்கும் மணவாழ்வு' என்ற திருமண உறவைப்பற்றிய கருத்தரங்குகளை நடத்தி வரும் இவரை 91-979-089-5366 ( இந்தியா ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.