மாமியார் மெச்சிய மருமகள்
திருமதி ஜேசுபாதம்
Be Strong

ரூத் (ரூத் 1:16-18)

யூதாவிலுள்ள பெத்லகேமில் பஞ்சம் உண்டான போது எலிமெலேக்கு தன் குடும்பத்தாரோடு மோவாபில் போய்ச் சஞ்சரித்தான். அங்கு அவனும் அவன் இரு குமாரரும் மரித்தபின் அவன் மனைவி நகோமியும் இரு மருமகள்களும் (ஓர்பாள் &  ரூத்) திரும்ப பெத்லகேமிற்கு வருகின்றனர்.
 
மோவாபியப் பெண்களான அவர்களைத் திரும்பி அவர்களிருப்பிடத்திற்கே போகச் சொல்கிறாள் நகோமி. ஓர்பாள் மோவாபிற்குத் திரும்பிப் போய்விடுகிறாள். ஆனால் ரூத் நகோமியுடன் வருகிறாள் ‘உம்முடைய ஜனம் என் ஜனம், உம்முடைய தேவன் என் தேவன் ‘ என்ற அருமையான வார்த்தையைச் சொல்கிறாள்.
 
தன் மாமியார் கூறிய அத்தனைக் காரியங்களையும் அதாவது வேலைக்குச் சென்றது, மறுமணம் செய்து கொண்டது எல்லாவற்றையும் மாமியாரின் சொற்படியே செய்தாள். வேறு ஜாதி, வேறு மதம், வேறு தேசம். ஆனாலும் மாமியாரோடு ஒத்துப் போகிறாள். அதற்கு ஒரே காரணம் இஸ்ரவேலின் தேவன் என் தேவன் என்று ஏற்றுக் கொண்டதுதான். கர்த்தரை ஏற்றுக் கொண்ட ஒரு பெண் கணவனையும், கணவன் குடும்பத்தாரையும் அவர்கள் எப்படிப்பட்டவர்களாகவும் இருந்தாலும் ஏற்றுக் கொள்வாள். கடவுளை ஏற்றுக் கொள்ளாதவள் ஒருவரையும் சரியானபடி ஏற்றுக் கொள்ள மாட்டாள்.
கர்த்தரை முதலாவதாக ஏற்றுக் கொண்டிருக்கும் போது அதாவது முதலாவதாக அவரைத் தேடும்போது எல்லாவற்றையும் நமக்குச் சாதகமாக்கித் தருவார். பொறுப்பை அவரிடம் விட்டு விட்டால் அவர் பார்த்துக் கொள்வார், சூழ்நிலைகளை மாற்றித் தருவார்.  
 
ஒருவேளை கர்த்தரை ஏற்றுக் கொள்ளாத கணவன் அல்லது மாமியார் அனுசரித்துப் போக மாட்டார்கள். கர்த்தரை ஏற்றுக் கொண்ட மருமகள் அனுசரித்துப் போகலாமே! கர்த்தரை ஏற்றுக்கொண்டு அவர்கள் மாறும் வரை, கர்த்தரை ஏற்றுக் கொள்ளாததால் தான் இப்படி இருக்கிறார்கள். எனவே கர்த்தரை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாரத்துடன் ஜெபிப்பேன் என்று எண்ண வேண்டும். பிறந்த வீட்டின் பெருமைகளையும், புகுந்த வீட்டின் குறைகளையும் பேசியே அழிந்து போகும் குடும்பங்கள் அநேகம். மாமியார் இல்லாத வீடாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் ஒரே மாமிசமான என் கணவனை ஜெனிப்பித்தவர் இந்த மாமியார் என்பதை மறந்து விடுகின்றனர்.
 
 
கர்த்தருக்கு முன் உண்மையும் உத்தமமாக நாம் இருந்தால் நமக்கு விரோதமாக இருப்பவர்கள் நம் பட்சத்தில் வருவார்கள். (ஏசா 54:15) நம் வீட்டார் மட்டும் அல்ல, புகுந்த வீட்டாரும் நம்மைப் புகழ வேண்டும்.

“நீ உன் மாமியாருக்காகச் செய்ததும் ….. அறியாத ஜனங்களிடத்திற்கு வந்ததும் …… எனக்குத் தெரிவிக்கப்படடது, உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக.” (ரூத் 2:11,12)

 


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.