ஆற்றல்கள் வெளிப்படட்டும்
சகோ. சாம்சன் பால்
Be Strong

ஒரு மனிதனுக்குள் இருக்கின்ற ஆற்றல்களையெல்லாம் முழுமையாக வெளியே கொண்டு வருவது அவன் சந்திக்க நேரிடுகின்ற சவால் மிகுந்த சூழ்நிலைகள்தான். நாம் யாவருமே சுமுகமான ஒரு அமைதியான பயணமாக நம் வாழ்க்கை அமைய வேண்டும் என்று தான் எதிர்பார்ப்போம். ஆனால் அத்தகைய சுமுகமான பயணம் நம்முடைய ஆற்றல்களை வெளியே கொண்டு வரும் வாய்ப்புகளை வீணாக்குவதோடு, நாம் அதிகமாகப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஆற்றல்களைப் பெறவிடாமலும் தடை செய்து விடுகிறது. பின்னர்  என்றோ ஒருநாள் ஒரு நெருக்கடி நேரிடும்போது எதையும் செய்ய இயலாமல் நிலைகுலைந்து போய்விடுகிறோம்.
 
ஒரு விளையாட்டு வீரன் சாதாரணமாகவே ஜெயித்துக் கொண்டிருந்தால் விரைவில் பெரிய தோல்வியாளன் ஆகி விடுவான். அவன் கடுமையான போட்டிகளைச் சந்திக்கும்போதுதான் தனக்குள்ளிருக்கும் ஆற்றல்களை அதிகமாக பயன்படுத்துகின்றான். அவன் சில தோல்விகளைச் சந்திக்கும்போது தான் இன்னும் தான் அதிகமான பயிற்சிகளைப் பெற வேண்டியதின் அவசியங்களைப் புரிந்து கொள்ளளமுடிகிறது.
 
யாக்கோபின் செல்லப் பிள்ளையாக வாழ்ந்த யோசேப்பு அடிமையாக்கப்பட்டு எதிர்நீச்சல் போட வேண்டிய தேவையைச் சந்தித்த போதுதான் அதிக ஆற்றலுடையவனாக மாறினான். தகப்பனுடைய கொஞ்ச ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது கரடி, சிங்கம், கோலியாத், சவுல் எனப் பல சவால்களைச் சந்திக்க நேரிட்டபோது தான் மாபெரும் வீரனாக வெளிப்பட்டான்.

தேவன் தம்மை விசுவாசிக்கும் பிள்ளைகளைச் சுமுகமான ஒரு சாலை வழியாக அல்ல. சோதனைகள் சில நிறைந்த சாலை வழியாக நடத்தி அவர்களை அதிக ஆற்றலுள்ளவர்களாக்குகின்றார். எனவே பின்னாட்களில் அவர்கள் எந்த எதிர்மாறான சூழல்களையும் தைரியமாகச் சந்திக்கும் ஆற்றலைப் பெறுகின்றார்கள்.

 

என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார் - சங்கீதம் 18:34


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.