புதிய சூழ்நிலை
சகோ. சாம்சன் பால்
Salvation?

புதிய ஒரு பொறுப்பை ஏற்கும்போதும், புதிய ஒரு சூழ்நிலையைக் காணும்போதும், அது வரை அறிமுகம் இல்லாதவர்களோடு சேர்ந்து செயல்படும் போதும் கலக்கங்கள், பதட்டங்கள், அந்நிய உணர்வுகள் ஏற்படுவது இயற்கையே. புதிதாகச் சந்திக்கப்போகும் சூழ்நிலைகள் எப்படியிருக்கப் போகிறதோ என்ற கேள்விகளின் ஆரவாரங்கள் இருதயத்தைக் கலவரப்படுத்துவது உண்மையே.

யாக்போபு என்ற வேதாகமக் கால வாலிபன் புதிய ஒரு சூழ்நிலையைச் சந்திக்க நேர்ந்தது. புதிய இடம், புதிய கலாச்சாரம், புதிய ஆட்கள் புதிய சவால்கள் என எல்லாம் அவனுக்கும் புதியவையாக இருந்தன. அதுவரை தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வேறு எதையும் தெரியாமலிருந்த அவனுக்குப் புதிய சூழ்நிலைகள் புதிய கலக்கங்களைக் கொடுத்திக்கும். ஆனாலும் எல்லாவற்றையும் சந்தித்துப் பழகிக் கொள்ள அவனால் முடிந்தது. ஏனென்றால் அனைத்துச் சூழ்நிலைகளின் மேலும் ஆளகையும் அதிகாரமும் உடைய கர்த்தர் அவனோடிருந்தார். அவனுடைய எல்லாப் புதிய சூழ்நிலைகளின் நடுவிலும் அவனுக்குத் துணையாக நின்று கர்த்தர் செயல்பட்டார்.
 
அபிரகாம் தான் முன்பின் அறியாத கானான் நாட்டிற்குப் போக அழைக்கப்பட்டான். அவனுக்கு அந்த நாட்டைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவனுக்கு தேவனையும், அவருடைய அன்பையும், அவருடைய சமுகத்தினால் வரும் நம்பிக்கையும் நன்றாகத் தெரியும். எனவே அவன் தைரியமாகப் புறப்பட்டு;ச் சென்றான்.
 
ஆம், வாலிப நாட்களில் புதிய சூழ்நிலைகளைக் காண நேரிடும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தேவ உறவினை உறுதியாகத் தேடினால் போதும். தேவ உறவுடைய மனிதன் உலகத்தின் எப்பக்கத்திற்குப் போனாலும் அவன் தனிமையானவன் அல்ல. அங்கே தேவன் அவனோடிருந்து நடத்துவார்.

தேவனோடுப் பழகிக் கொண்டவனுக்கு, பழகாத சூழ்நிலைகள் ஒரு பிரச்சனை அல்ல. 


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.