மனப்பாங்கு
சகோ. சாம்சன் பால்
What is Grace

நீ தீமையானதைப் பின்பற்றாமல்… 3 யோவான் - 11

இதை நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு குடிகாரத் தகப்பனுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் மிக நல்லவனாக வளர்ந்து நல்ல பெயர் வாங்கினான். மற்றவன் சிறுவயதிலேயே மோசமாக வளர்ந்து குடிகாரனாகிக் கெட்ட பெயர் வாங்கினான். கெட்டவனாக மாறின மகனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது அவன் தன் குடிகாரத் தந்தையைச் சுட்டிக்காட்டினான். “என் தந்தை கெட்டவர், எனவே நானும் கெட்டவனாகிப் போனேன்” என்றான். நல்லவனாக மாறினவனிடம் அதன் காரணத்தைக் கேட்டபோது அவனும் தந்தையைத் தான் சுட்டிக்காட்டினான். “என் தந்தை குடித்து வெறித்து மோசமாக வாழ்ந்தார். அதைக் கண்டபோது, அது போன்று நான் மாறிவிடக்கூடாது என்று எண்ணினேன். எனவே நான் நல்லவனாக மாறினேன்” என்றான்.
 
தவறான ஒரு சூழ்நிலை ஒருவனைக் கெட்டவனாக்கியது. ஆனால்  இன்னொருவன் நல்லவனாகவும் முடிந்தது. சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கும் என்பது உண்மை. ஆயினும் நம்முடைய மனப்பாங்கு தான் மிக முக்கியமானது. எல்லோரும் கெட்டவர்களாயிருக்கும்போது நான் மட்டும் எப்படி நல்லவனாயிருக்க முடியும் என்றும் சொல்லலாம். யாரும் நல்லவர்களாயிராத நிலையில் நான் மட்டுமாவது நல்லவனாக இருக்கலாமே என்றும் யோசிக்கலாம்.
 
பொல்லாத சகோதரிகளின் நடுவில் யோசேப்பு நல்லவனாயிருந்தான். மிக மோசமான மனிதர்கள் நடுவில் நோவா நீதிமானாயிருந்தான். நம்முடைய உள்ளத்தை கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்தால் நாம் எங்கிருந்தாலும் நாம் வித்தியாசமானவர்களாயிருக்க கர்த்தர் உதவி செய்வார். பாவம் நிறைந்த பாபிலோன் அரண்மனையில் நெகேமியா தேவனுக்கேற்றவனாயிருந்தான். ஆனால் இயேசுவின் உத்தம சீடர்களின் நடுவில் யூதாசோ பிசாசுக்கேற்றவனாயிருந்தான். நம்முடைய இருதயம் எதனைக் கொள்கையாகக் கொண்டுள்ளதோ அதுவே முக்கியம்.
   
பிறரிடம் உள்ள உண்மைக்கு உரிய மதிப்பளிப்பவனே, தன்னிடம் உண்மையை வளர்த்திட வாஞ்சையாயிருக்கின்றான்


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.