உண்மையைச் சொன்னால்
சகோ. சாம்சன் பால்
Leader-Stewardship

கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்… நீதி – 13:18
 
பவித்திரனுடைய சமீப கால நடவடிக்கைகளைக் கவனித்த அவனுடைய நண்பனாகிய நித்தியன் மிகவும் வருத்தப்பட்டான். அவன் ஒரே நேரத்தில் பல பெண்களோடு பழகுவதும், பார், கிளப் என்று நண்பர்களோடு போய்வருவதும் நித்யனின் மனதைப் பாதித்தது.  அவனுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுவதே தேவ பக்தியுடைய தன்னுடைய கடமை என்று எண்ணினான். ஒரு நாள் அவனிடம் போய் அவன் சென்று கொண்டிருக்கும் பாதை சரியல்ல என்று அன்புடனும் சாந்தத்துடனும் கூறினான்.
 
ஆனால் அதுவரை நித்தியனை நல்ல நண்பனாக எண்ணிக்கொண்டிருந்த பவித்ரனுக்கு நித்யனின் அறிவுரை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே நித்தியனின் தேவபக்தி வேஷமானது என்று பலரிடம் கூறியதோடு நித்தியனைக் கடுமையாகப் பகைத்தான். நல்லதை நினைத்துச் செயல்பட்ட தான் பகைவனாக எண்ணப்படுவது நித்தியனுக்குச் சற்று வருத்தமாகவேயிருந்தது.
 
நம்முடைய நோக்கங்கள் நல்லது. ஆனால் மற்றவர்களின் மனநிலை நல்லதாக இல்லை. எனவே நல்ல அறிவுரைகள் அவர்களுக்குக் காயப்படுத்தும் பிரம்புகள் போலவே இருக்கும். ஆயினும் நல்லதைச் சொல்லவேண்டியது நமது கடமை. உண்மைகளைச் சொல்லாமல் நட்பைக் காத்துக் கொள்வதைவிட, உண்மைக்காக ஒரு சிலருடைய பகையைச் சம்பாதிப்பது மேன்மையானதே.
 
வெளிச்சம் பிறரது தவறுகளையும், குற்றங்களையும் மறைக்காமல் வெளிப்படுத்தும். ஆனால் தங்களின் தவறுகள் வெளிப்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். யோவான் ஸ்நானன் ஏரோதின் பாவத்தை நேரடியாகச் சுட்டிக்காட்டினான். அவன் திருந்தவில்லை. ஆனால் யோவானைச் சிறையிலிட்டான். ஆயினும் இயேசுவின் பார்வையில் அவன் அனைத்துத் தீர்க்கர்களை விட மிகப் பெரியவனாக இருந்தான்.


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.