அழகிருந்தும்
திருமதி ஜேசுபாதம்
Words and Word of God
ராகேல் (ஆதி 29:17)
 
மந்தைகளை வைத்துக் கொண்டிருந்த லாபானின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாள் அவனுடைய மகள் ராகேல். அவள் அழகில் மயங்கிய லாபானின் சகோதரியின் மகனான யாக்கோபு, அவளைத் திருமணம் செய்து கொள்ளும் முன் அவளது மூத்த சகோதரியான லேயாளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று. காரணம், மூத்தவள் இருக்க இளையவளைத் திருமணம் முடிப்பது வழக்கமல்ல என்று லாபான் தடுத்ததால், ஏழு வருடங்கள் கழித்தபின் மூத்தவளைத் திருமணம் செய்து கொடுத்த லாபான் இளையவளுக்காக பின்னும் ஏழு வருடங்கள் யாக்கோபை வேலை செய்ய வைத்தான்.
 
ராக்கேல் மேல் கொண்ட அன்பால் லேயாளை வெறுத்து ராகேலை நேசித்தான் யாக்கோபு. லேயாளுக்குக் குழந்தை பிறந்ததும் தனக்குப் பிள்ளை இல்லையே என லேயாள் மீது பொறாமை கொண்டாள். கணவனிடம் எரிச்சல் கொள்ளுகிறாள், தூதாயீம் கனிக்காகத் தன் கணவனை விட்டுக் கொடுக்கிறாள். (ஆதி. 30 : 15)
 
இதிலிருந்து அவளது பெருமை, பொறாமை, பொறுமையின்மை, எரிச்சல், அதுமட்டுமல்ல கணவனை விட்டுக் கொடுக்கும் தரக்குறைவான குணமும் வெளிப்படுகிறது. அழகாக இருந்ததால் கர்வமான இருந்திருப்பாள். அதனால்தான் சகோதரியை அற்பமாய் எண்ணுகிறாள். அன்பும், பாசமும் இருந்திருந்தால் அற்பமாய் எண்ணியிருக்கமாட்டாள் அல்லவா? அன்பு சகலத்தையும் தாங்குமல்லவா! (I கொரி 13:7) அன்பில்லாதவர்கள் தேவனை அறிய முடியாதே! (I யோவான் 4:8) குழந்தை இல்லை என்று எரிச்சலடைந்ததால் அவள் வாழ்க்கையில் கர்த்தரைக் குறித்த எண்ணமோ ஜெப வாழ்க்கையோ இல்லை என்பதை உணர்த்துகிறது.
 
அன்னாள் குழந்தையில்லாதபோது ஆலயத்தில் வந்து அழுது ஜெபித்து குழந்தையை பெற்றுக் கொண்டாள். தூதாயீம் கனிக்காக கணவனை இழக்கத் தயங்காதவள் அவள். கர்த்தர் மேல் நம்பிக்கை இருந்திருந்தால் பிள்ளை கொடும் இல்லையென்றால் சாகிறேன் என்று கூறியிருக்கமாட்டாள். கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம் (சங்கீதம் 127:4) என்பதை அறியவில்லை. இன்றும் கர்த்தரிடம் கேட்பதை விட்டு மகனுக்கு வேறு துணையைத் தேடுவது வழக்கத்தில் உள்ளது.
 
குழந்தை இல்லை என்று சிலர் தங்களை சிறைப்படுத்திக்கொள்வதும், குழந்தையைக் கொடுக்க முழயாதவன் (அ) குழந்தையைப் பெற்றெடுக்க முடியாதவள் என்று வேறு துணையைத் தேடுவதும், இதைக் காரணமாக வைத்து விவாகரத்து செய்வதும் தேவையில்லாதது. தன் தேவைகளை மனிதனிடத்தில் எதிர்பார்ப்பவள் ஒருவகையில் புத்தியில்லாவளே! எதையும் கர்த்தரிடத்தில் கேட்பவனே புத்திசாலி.
 
கர்த்தரைக் குறித்த பயம் இல்லாத இடத்தில் பிசாசு எளிதில் ஆக்கிமிப்பு செய்து விடுகிறான். அழகிருந்தும் கர்த்தர் இல்லாத அவள் வாழ்க்கை ஒரு  வெறுமையான வாழ்க்கைதான். தன் தகப்பன் வீட்டிலிருந்து சுரூபங்களை திருடிக் கொண்டு வந்தாள். கர்த்தர் (ஆதி 31: 19) விக்கிரகத்தை அருவருக்கிறார். இன்றும் வாஸ்து சாஸ்திரம் சிரிக்கும் புத்தர் குபேரன் பொம்மை போன்றவை விகிகரகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும். தகப்பன் வீட்டிலிருந்த நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வரவேண்டுமேயொழிய கர்த்தர் அருவருக்கிற காரியங்களை அல்ல. இன்றும் கர்த்தர் அருவருக்கிற சினிமா, டி.வி. சீரியல், கிளப் போன்றவற்றில் மோகம் கொண்டுள்ளனர் அநேகர்.
 
கர்த்தர் ஏற்றுக் கொண்ட பெண், வேதத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளபடி நடப்பாள். வெளிப்புறமான அழகு வீண், உள்ளம் அழகாக இருக்க வேண்டும், ஏனெனில் கர்த்தர் உள்ளத்தைக் காண்கிறவர். வெளி அழகிற்காக நேரத்தைச் செலவிடும் பெண்கள் உள் அழகை பொருட்படுத்துவதில்லை. வெளி அழகால் பிரயாஜனமில்லை. உள்ளான அழகே சந்தோஷத்தையும், சமாதானத்தையும் கொடுக்கும்.
 
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும், அமைதலுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது.(பேதுரு 3:4).

சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.