அநேகருக்கு ஆதரவாய் இருந்தவள்
திருமதி ஜேசுபாதம்
Words and Word of God

பெபேயாள் (ரோமர் 16:1,2)
 
ரோமருக்கு பவுல் எழுதின நிருபத்தில், கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாக இருந்த பெபேயாளைக் குறிப்பிடுகையில் அவள் அநேகருக்கும், தனக்கும் கூட ஆதரவாயிருந்தாள் என்ற குறிப்பிடுகிறார். எந்த காரியத்தில் அவளுக்கு உதவி தேவையாயிருக்கின்றதோ அதிலே அவளுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறுகின்றார். அவனைக்குறித்து நல்ல சாட்சி கூறுகிறார் பவுல்.
 
இன்று அநேகப் பெண்கள் ஊழியம் செய்கின்றனர். நல்லது தான்! கடைசி காலத்தில் ஊழியக்காரர்கள், ஊழியக்காரிகள் எழும்புவார்கள் என்றும், பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவார் என்றும், பைபிளில் சொல்லப்பட்டுள்ளது (போவேல் 2:29). பவுல் பெபேயாளைக் குறித்து சாட்சி கொடுக்கின்ற மாதிரி, ஊழியம் செய்யும் சகோதரிகளின் சாட்சி இருக்கின்றதா? மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்களா? கர்த்தருடைய ஊழியத்தை மட்டும் செய்து ஆவியின் கனிகளை ஒதுக்கி வைத்திருந்தால் பிரயோஜனமில்லையே ஆவியின் வரங்களோடு ஆவியின் கனிகளையும் உடையவர்களாகிய தேவனுடைய ஊழியத்தைச் செய்வீர்களானால் தேவனே உங்களைப் பற்றி சாட்சி கொடுப்பார்.
 
இந்த கடைசி காலத்தில் அநேகர் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்கின்றனர். ஆனால் அன்பைக் காட்ட சிலர் தவறி விடுகின்றனர். நாம் எவ்வளவு தான் மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் திருப்தியாக மாட்டார்கள். அவர்களுக்கு நாம் அன்பையும் சேர்த்து வழங்கும்போது அதில் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். நாம் எதையும் அன்பினால் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே 1 யோ 4:8 இருக்கிறார்.
 
கர்த்தரின் ஊழியத்தை செய்பவர்கள் சண்டை போடாதவர்களாகவும் எல்லாரிடமும் சாந்தமுள்ளவர்களாகவும், போதக சமர்த்தர்களாகவும், தீமையைச் சகிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். 1 தீமோ 2:24. குடும்பத்தாரிடமோ, வெளி ஆட்களிடமோ சண்டை போட்டோமானால் சாட்சியை இழந்து விடுவோம். பிறர் தீமை செய்யும்போது. "சீமேயி தாவீதை தூஷிக்க அனுமதித்தாரே, தாவீதை  விட்டுவிடவில்லையே. கர்த்தர் சீமேயியைக் காட்டிலும் தாவீதை உயர்த்தி ஆசீர்வதித்தாரே" என்று அதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஊழியம் என்பது சாதாரண வேலையல்ல. தேவன் கொடுக்கும் கனமான உன்னத வேலை. தீர்க்கத்தரிசன வரம் உடையவர்கள் மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும் ஆறுதலும் உண்டாகத் தக்க பேச வேண்டும். மட்டுமல்ல, சபைக்கு (1கொரி 14:3,4) பக்திவிருத்தி உண்டாக பேச வேண்டும். மனுஷருக்குப் பிரியமாக இருக்கிறவர்களாகப் பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி (எபெ 6:6) செய்ய வேண்டும். சுயநீதி முற்றிலுமாக ஒழிந்து தேவநீதி மாத்திரமே வெளிப்பட (ரோம 10:3) வேண்டும்.
 
சிலுவையைத் தவிர வேறொன்றையும் குறித்து (கலா 6:14) மேன்மை பாராட்டக் கூடாது. ஐந்து விரல்களும் வெவ்வேறாக இருந்தாலும் செய்வது ஒரே வேலையைத்தான், ஒரே எஜமானுக்குத் தான். அதைப்போல வெவ்வேறான ஊழியங்களைச் செய்தாலும், ஒரே வேலையைத் தான் (தேவ ராஜ்ஜியத்தைக் கட்டுவது) செய்கிறோம், ஒரே எஜமானுக்குத்தான் (தேவனுக்கு) என்பதை உணர வேண்டும்.
 
மற்ற ஊழியக்காரர்களையே, ஊழியர்களையே குறை சொல்லித் திரியக்கூடாது. தேவன் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஜெபக்கூட்டங்கள் பெருகிவரும் நிலையில், தேவ வார்த்தைகளில் நிலைத்து ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். பொல்லாங்கன் களைகளை நாம் தூங்கும்போது விதைத்துவிட்டு போவான். எனவே விழித்திருக்க வேண்டும். குழப்பமும், சண்டைகளும், துக்கமும், பயமும் இருக்கும் இடங்களில் பரிசுத்த ஆவியானவர் அங்கு இல்லை என உணர்ந்து கொள்ள வேண்டும். பெரிய ஊழியக்காரரான பவுல், பெயோளை வாழ்த்துவதன் மூலம் பெருந்தன்மை வெளிப்படுவதைப் பாருங்கள்! அதுதான் உண்மையான ஊழியக்காரரின் அடையாளம். வரங்களைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது. கனி உள்ளதா என்று காண வேண்டும். காரணம் அப்படிப்பட்டவர்களைக் கர்த்தர் அக்கிரம செய்கைக்காரர்கள் (மத் 7:22, 23) என்று கூறித்தள்ளி விடுகவார். கர்த்தரின் சுபாவங்களைத் தரித்துக் கொள்ளாமல் ஊழியம் செய்வதில் பிரயோஜனம் இல்லை.
 
சுபாவங்களைத் தரிசித்துக் கொள்ளாமல் ஊழியம் செய்வதில் பிரயோஜனம் இல்லை. நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் என்ற (கலா 2:20) பவுலின் அனுபவம் தேவை.
 
"மற்றவர்களுக்கும் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப்  போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறோம்."


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.