சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவள்
திருமதி ஜேசுபாதம்
What is Grace

நாகமானின் மனைவி (11 இராஜா 5:3)

இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறை பிடித்துக் கொண்டு வந்திருந்த சிறு பெண் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். நாகமான் சீரியப்படைத் தலைவன். சமாரியாவிலுள்ள தீர்க்கதரிசியிடம் சென்றால் தன் எஜமானனான நாகமானின் குஷ்டம் குணமாகும் என்ற தன் எஸமானியான நாமானின் மனைவியிடம் சொல்கிறாள் அச்சிறுபெண். முதலில் மறுத்தாலும் பின் அதற்கு கீழ்ப்படிந்து அதன்படி செய்து பூரண சுகத்தைப் பெற்று கொள்கிறான்.
 
சிறைபிடித்து வரப்பட்ட அந்த வேலைக்காரப் பெண் ஒரு வேளை வேதனையில் இருந்திருக்கலாம், அல்லது முறுமுறுத்துக் கொண்டு இருந்திருக்கலாம். மேலும் வேலைக்காரியாக இருக்கும் நிலையில் எஜமான் குடும்பத்தை வெறுத்திருக்கலாம். தன்னை அடிமையாக நடத்துவதால்தான் எஜமானுக்கு குஷ்டம் வந்திருக்கிறது என்று எண்ணி திருப்தியடைந்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லாபடி தன் எஜமான் மேல் கரிசனை உண்டாகக் காரணம் என்ன! எஜமாட்டியின் அன்பைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? வேலைக்காரி என்று அற்பமாக எண்ணியிருந்தால், என் எஜமான் குஷ்டரோகிதானே என அவளும் அற்பமாய் எண்ணியிருப்பாள்.
 
எஜமானின் அன்பால் ஈர்க்கப்பட்டதால் அல்லவா தன் எஜமான் மேல் அக்கரை கொண்டு அருமையான யோசனையைச் சொல்கிறாள். இன்று வேலைக்காரர்களை எப்படி நடத்துகிறோம். அன்பு காட்டுகிறோமா! அன்பில்லாதவன் தேவனை அறியான் என்று வேதம் சொல்லுகிறது. (1 யோ 4:8) ஒருவரையும் அற்பமாய் எண்ண வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதாயத்திற்காக வசதியானவர்களை மட்டும் கவனிக்கிறோமா! அல்லது சிறுமைப்பட்டவர்களை கவனிக்கிறோமா! (சங். 41:1)
 
சிலர் வீட்டிற்குள் வரவிடாமல் வெளியில் வேலை செய்துவிட்டுப் போகும்படி கூறுவர். தனிச்சாப்பாடு, பழைய சாப்பாடு அல்லது மிச்சமிருப்பவைகளைக் கொடுப்பார்கள். அவர்களிடம் தேவ அன்பை (ரோம 5:5) ஊற்றினால் அந்த அன்பினால் ஈர்க்கப்படும் போது ஆண்டவரின் அன்பை சொல்வது சுலபமாகிவிடுமே! மீன் பிடித்தவர்களையும்ஃ தாழ்த்தப்பட்டவர்களையும் தன்னுடன் வைத்திருந்தாரே, அவர்களுடன் சேர்ந்து உண்டாரே, வித்தியாசம் காட்டவேயில்லையே!
 
அநேகர் வயிறார சாப்பாடு கொடுப்பதில்லை. அவர்கள் கஷ்டங்களை விசாரிப்பதில்லை, அவர்களிடம் ஆண்டவர் செய்த நன்மைகளைச் சொல்வதில்லை.
 
அப்படிப்பட்ட அன்பை கொடுத்ததாலேயே நாகமான் சுகம் பெற்றுக் கொள்ள முடிந்தது. வெளியில் போய் சுவிசேஷம் சொல்ல முடியாதவர்கள், முடியவில்லை எனச் சொல்பவர்கள் வீட்டிற்கு வரும் இவர்களுக்குச் சொல்லலாமே! நம் பாத்திரம் நிரம்பி வழிந்தால்தானே வேலைக்காரர்களை நிரப்புவதற்கு முடியும்? ஒருவர் மனம் திரும்பும் போது பரலோகில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும். அந்த சந்தோஷத்திற்கு நாம் காரணமாக இருந்தால் எவ்வளவு மேன்மை!

‘உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக’ (கலாத்தியர் 5:14)


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.